"அவர் சசிகலா புஷ்பாவுக்கு லீகல் அட்வைஸர் என்றுதான் நினைத்தேன்!" - குமுறும் ராமசாமியின் மனைவி



சசிகலா புஷ்பா எம்.பி மறுமணம் செய்து கொள்ள செலக்ட் செய்திருக்கும் ராமசாமிக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒன்றேகால் வயதில் பெண் குழந்தை உள்ளது. 'ராமசாமி - சசிகலா புஷ்பா திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்' என்று மதுரை கலெக்டரிடம் ராமசாமியின் மனைவி சத்தியப் பிரியா புகார் கொடுத்துள்ளார்.

Sponsored


ராமசாமி - சத்தியப் பிரியா தம்பதியர் சட்டபூர்வமாக விவாகரத்து வாங்காததால், சசிகலா புஷ்பா - ராமசாமி திருமணத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை அ.தி.மு.க. உறுப்பினர் சசிகலா புஷ்பா (வயது 41). தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சசிகலா புஷ்பாவும், அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகனும் டெல்லி துவாரகாவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தனர். நீதிபதி பி.ஆர்.கேடியா முன்பு, இவர்களின் விவாகரத்து மனு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவடைந்து, இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 'இருவரும் அவரவர் செலவுகளை அவரவரே ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்றும் அந்த உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார். சுமார் ஏழு மாதங்களாக நடந்த இந்த வழக்கு 16.03.2018 அன்று முடிவுக்கு வந்தது. இந்த விவாகரத்து பரபரப்பு அடங்குவதற்குள் சசிகலா புஷ்பாவுக்கும் டெல்லியைச் சேர்ந்த ராமசாமிக்கும் கல்யாணம் என்று தகவல் பரவியது. திருமணம் குறித்த அழைப்பிதழும் வாட்ஸ் அப்-களில் உலாவியது. 

Sponsored


Sponsored


இவர்கள் திருமணம், மார்ச் 26-ம் தேதி அன்று டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவைத் திருமணம் செய்யப்போகும் ராமசாமி-யின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள விசவனூர் என்றும், அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி முதல் மனைவி இறந்துவிட்டதும்; அவர் இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணுக்கு ஒன்றே கால் வயதில் பெண் குழந்தை இருப்பதும் இப்போது தெரியவந்துள்ளது. முதல் மனைவி இறந்தவுடன்  மதுரை வில்லாபுரம் மணிகண்டன் நகரைச் சேர்ந்த சத்தியப் பிரியாவை, ஜீவா நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் ராமசாமி. 

இதுகுறித்து சத்தியப் பிரியா கூறுகையில், ''எனது தந்தை மதுரையில் கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்தார்.  குடும்பத்தில் நான்தான் மூத்த மகள். எம்.பி.ஏ படித்துள்ளேன். புரோக்கர் மூலம் மாப்பிள்ளை பார்த்தோம். ராமசாமிக்கும் எனக்கும் 10.12.2014 அன்று திருமணம் நடந்தது. நான் டெல்லியில் கணவரோடுதான் வசித்து வந்தேன். ஒன்றரை வருடத்திற்கு முன்பு, பிரசவத்துக்காக என்னை மதுரைக்கு என்னுடைய தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். என் மகளுக்கு இப்போது ஒன்றேகால் வயது ஆகிறது. பிறந்த பிள்ளையைக் கூட அவர் பார்க்க வரவில்லை. விவாகரத்து செய்ய வேண்டும் என்று என்னிடம் கூறினார். நான் முடியாது என்று கூறிவிட்டேன். திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ராமசாமியையும் அழைத்து போலீசார் விசாரித்தனர்.

மதுரையில்தான் நான் தற்போது இருக்கிறேன். ராமசாமி - சசிகலா புஷ்பா திருமணம் என்ற செய்தியைப் பத்திரிகைகளில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன். திருமணத்தின்போது அவர் தன்னை நீதிபதியாக உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். பின்னர் துணை வேந்தர் என்றும் கூறிக்கொண்டார். ஆனால், நாளாக, நாளாக அவர் ஒரு புரியாத புதிராகவே செயல்பட்டார். மேலும், சில எம்.பி.-க்களுக்கு ஆலோசகர் என்றும், அந்தவகையில் சசிகலா புஷ்பாவுக்கும் அவர் லீகல் அட்வைசராக இருப்பார் என்றும் நினைத்தேன். அவர் என்னிடம் அப்படித்தான் சொன்னார். அவரின் கூற்று உண்மையாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு என் கணவர் வேண்டும். என் பெண் குழந்தைக்கு அப்பா வேண்டும். இந்தத் திருமணம் நடக்கக் கூடாது. இதை தடுக்க வேண்டும் என்று மதுரை கலெக்டரிடம் நான் புகார் மனு கொடுத்துள்ளேன்'' என்று கண்ணீருடன் கூறினார்.

இதுகுறித்து, சசிகலா புஷ்பாவின் முன்னாள் கணவர் லிங்கேஸ்வரன் திலகனின் நண்பர்கள் கூறுகையில், ''லிங்கேஸ்வரனுக்கு அவருடைய உறவுப் பெண்ணைத்தான் கட்டி வைத்தனர். அதுதான் சசிகலா புஷ்பா. இந்தத் திருமணத்தில் சசிகலா புஷ்பாவிற்கு ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் இல்லை. ஏதோ குடும்பத்தில் உள்ள பெரியவர்களுக்குக் கட்டுப்பட்டு இருந்தார். அவர் எப்போதுமே வானத்தில் பறந்து செல்லும் சிந்தனை கொண்டவர். பெயரும் புகழும் அடைய வேண்டும் என்ற தீராத ஆசை அவருக்கு உண்டு. அதற்காகவே, சமூக சேவைகளில் இறங்கினார். அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆனார். கட்சியில் சேர்ந்த பிறகு சசிகலா புஷ்பா பெரிய ஆளாகிவிட்டார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஆனதும், அவரின் வளர்ச்சி அசுர அளவில் உயர்ந்தது. தொடர்ந்து அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்றதும் டெல்லி உறவுகள் அவரை வேறு லெவலுக்குக் கொண்டு சென்று விட்டன. கட்சியிலிருந்து சசிகலா புஷ்பாவை நீக்கியதும், அவருடைய நண்பர்கள் எல்லாம் ஓடிவிட்டனர். ஆனால், லிங்கேஸ்வரன், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் சென்று நியாயம் கேட்டார். அப்போது, அங்கிருந்த சிலர், லிங்கேஸ்வரனைத் தாக்கி, ரத்தம் சொட்டச் சொட்ட விரட்டியடித்தனர். இப்போது, சசிகலா புஷ்பா இந்த வயதில் அவரை ஒதுக்கி வைத்திருப்பது வேதனையளிக்கிறது'' என்றனர்.

சசிகலா புஷ்பாவுக்கு லிங்கேஸ்வரன் மனமுவந்து, விவாகரத்து வழங்கி விட்டார். ஆனால், சத்தியப் பிரியா தனது கணவரை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. தனக்காக இல்லா விட்டாலும், தன் குழந்தைக்காக, ராமசாமி வேண்டும். சசிகலா புஷ்பா மறுமணம் ராமசாமியுடன் நடக்கக் கூடாது" என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

எனவே, "டெல்லியில் மார்ச் 26-ம் தேதி... சசிகலா புஷ்பா எம்.பி. திருமணம் நடக்குமா...?'' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கலெக்டரிடம் புகார் கொடுத்திருப்பதால் சசிகலா புஷ்பா-ராமசாமி திருமணத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



Trending Articles

Sponsored