”ரஜினிக்கு பி.ஜே.பி தேவையில்லை..அவர் ஒரு சுயம்பு!” - தமிழருவி மணியன்தயாத்திரை களேபரங்களுக்கு நடுவே, இமயமலைக்கு ஆன்மிக  யாத்திரை சென்ற நடிகர் ரஜினிகாந்த், பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிவிட்டார். பயணம் முடித்து வந்தவுடன் அரசியல் தொடர்பாகப் பல முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் பட்டாளம் கூறிவந்தது. ஆனால், ``என் பின்னணியில் பி.ஜே.பி இல்லை. கடவுளும் மக்களுமே இருக்கிறார்கள்'' என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால், ``ரஜினி பி.ஜே.பி-யின் கைப்பாவையாகத்தான் இயங்குகிறார்'' என்பது இங்கிருக்கும் திராவிடக் கட்சிகள் மட்டுமல்லாது பலரும் வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

Sponsored


ஆன்மிகப் பயணமும் அரசியல் சந்திப்பும்

Sponsored


அதற்கேற்றதுபோலவே அவர், அரசியல் அறிவிப்பு வெளியிட்ட தொடக்கம் முதல் பி.ஜே.பி தலைவர்களையும் ஆதரவாளர்களையும்தான் தொடர்ந்து சந்தித்தும் வருகிறார். கடந்த பத்து நாள்களில் அவர் மேற்கொண்ட பயணங்கள் அத்தனையும் ஆன்மிகம் சார்ந்ததுதான். பயணத்தின்போது செய்தியாளர்கள் அரசியல் சார்ந்து கேள்வி எழுப்பியபோதுகூட, ‘`இது புனித யாத்திரை சமயம், இங்கே நான் அரசியல் பேச விரும்பவில்லை'’ என்று பகிரங்கமாகவே மறுதலித்தார். அதே சமயம், வருடாந்திரமாக பாபா ஆசிரமத்துக்கு மட்டுமே பயணம் மேற்கொள்பவர் இந்தமுறை பி.ஜே.பி-யின் மூத்த தலைவரும் இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமலைச் சந்தித்தார். 

Sponsored


``ஆன்மிக யாத்திரையில் அரசியல் பேச வேண்டாம்'' என்று சொல்லும் ரஜினிகாந்த், அரசியல் தலைவரை ஏன் சந்தித்தார் என்பதற்கு விளக்கம் எதுவும் சொல்லவில்லை. ஏ.சி.சண்முகத்தின் எம்.ஜி.ஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழக விழாவில், எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்துவைத்துப் பேசினார் ரஜினி. சிலை திறந்த மேடையில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்தும் மனம் திறந்து பேசினார். ``கருணாநிதியிடமும் சோவிடமும் நான் அரசியல் கற்றுக்கொண்டேன். எம்.ஜி.ஆர் போன்றதொரு நல்லாட்சியைத் தருவேன்” என்று பி.ஜே.பி. பிம்பத்தைப் பிரதிபலிக்காத வகையில் ஜாக்கிரதையாகவும், அதே சமயம் வெளிப்படையாகவும் நிறைய அரசியல் கருத்துகளை அவர் அந்த மேடையில் முன்வைத்தாலும், ஏ.சி.சண்முகம் பி.ஜே.பி கூட்டணியில் இருப்பவர் என்பதை அது எந்த வகையிலும் அரசியல்வாதிகள் சிந்தனையிலிருந்து அகற்றிவிடவில்லை. 

ஆனால், ``ரஜினி பி.ஜே.பி-யின் பின்புலத்தில் இயங்குகிறார் என்பது அரசியலில் அவரது எதிர்தரப்பினர்கள் வேண்டுமென்றே வைக்கும் குற்றச்சாட்டு. அதை ஊடகங்களும் பெரிதுபடுத்துகின்றன” என்கிறார், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன். தொடக்கத்திலிருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரித்து வரும் தமிழருவி மணியன், வரும் மே  20-ம் தேதி ரஜினியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கும் மாநாடு ஒன்றையும் கோவையில் நிகழ்த்தவிருக்கிறார்.

“ஆண்டவர் கொடுத்த வாய்ப்பு!”

இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில்கூட தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் ரஜினி, “ஆண்டவர் நமக்கொரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். நிச்சயம் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்” என்று சொல்லியிருக்கிறார். ரஜினி பி.ஜே.பி-யால் இயங்கவில்லை. ஆனால் அவர் முன்வைக்கும் கருத்துகள் அந்தக் கட்சியின் மதச் சித்தாந்தங்களைத்தான் பிரதிபலிக்கிறது. அப்படியெனில், தற்போது அரசியலில் அவரை யார்தான் வழிநடத்துகிறார்கள்?

எம்.ஜி.ஆர் ஆட்சியில்லை காமராசர் ஆட்சி

இதுகுறித்து விளக்கம் அளிக்கும் தமிழருவி மணியன், “ `நீங்கள் மதவாதியா அல்லது ஆன்மிகவாதியா' என்று ஒருமுறை நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், `நான் ஆன்மிகவாதி' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அவர் அப்படிச் சொன்னதற்கான விளக்கத்தையும் அவரே கொடுத்தார். `மதவாதியாக இருப்பவரால் குறிப்பிட்ட சிலர்மீது மட்டுமே அன்பு செலுத்த முடியும். ஆனால், ஆன்மிகவாதியால் உலகில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்லமுடியும்' என்றார்  ரஜினி. அதுமட்டுமில்லாமல் கட்சியைத் தொடங்கிவிட்டு என்ன செய்வதென்று யோசிக்காமல், தான் என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு அதன்படி கட்சியைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார். தினமும் உயர்மட்ட அளவில் பல வல்லுநர்களை இதுதொடர்பாகச் சந்திக்கிறார். காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாகச் சீரிய பார்வை அவரிடம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் கருத்து கூறிக்கொண்டிருக்காமல், எதற்கு முக்கியத்துவம் அளித்துப் பேசவேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அதனால் செய்தியாளர்கள் சந்திப்பில்கூட எவ்வித முன் தயாரிப்பும் இல்லாமல் மனதில் பட்டதைத்தான் பேசுகிறார். எம்.ஜி.ஆர் போல ஆட்சி தரவேண்டும் என்று சொன்னாலும் அவர் காமராசர் ஆட்சியைதான் மீட்டெடுத்து வர விரும்புகிறார். இத்தனை நாள்களில் என்னிடம்கூட, `என்ன பேச வேண்டும்... ஏது பேசலாம்' என்று கேட்டதில்லை. அவருக்குச் சுயமாக முடிவெடுக்கும் திறன் இருக்கிறது. அதன்படியே அவரும் நடக்கிறார். ரஜினி ஒரு சுயம்பு” என்றார். 

ரஜினி வழி தனி வழியாகவே இருக்கட்டும்! Trending Articles

Sponsored