ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாகுமா ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை!? #VikatanExclusiveSponsored`ஆணையத்தின் செயலாளராக மனைவி இருக்கிறார். அந்த ஆணையத்தில் விசாரிக்கும் நபர்களுக்கு ஆதரவாக அவருடைய கணவர் இருக்கிறார். இந்த நிலையில், ஆணையத்தின் விசாரணை எப்படி இருக்கப்போகிறது' என்ற குற்றச்சாட்டு, ஆறுமுகசாமியின் விசாரணைக் கமிஷனுக்கு எதிராகக் கிளம்பியுள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, அவரின் மரணம்குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் எழுந்தன. அப்போது முதல்வராக இருந்து, சசிகலா குடும்பத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய இன்றைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'ஜெயலலிதா மரணம்குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை வைத்து, தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தார்.

அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் தரப்பு சமரசமானதும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவிட்டார். ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து ஆணையத்துக்கு மனுக்கள் வந்தன. ஆணையம் விசாரணையைத் தொடங்கியபோது, ஆணையத்தின் செயலாளராக பன்னீர்செல்வம் என்பவரை முதலில் தமிழக அரசு நியமனம்செய்தது. ஆணையத்தின் விசாரணை சென்றுகொண்டிருந்த நிலையில், திடீரென ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கோமலா என்பவரை நியமித்து ஆணை பிறப்பித்தது தமிழக அரசு

Sponsored


Sponsored


ஓர் ஆணையத்தின் செயலாளரை அதிரடியாக மாற்றக் காரணம் என்ன என்ற கேள்வியும் அப்போது எழுந்தது. குறிப்பாக, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் அழுத்தம்தான் ஆணையத்தின் செயலாளர் மாற்றப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. விசாரணை ஆணையத்தில் ஒருவர் ஆஜராவதற்கு அளிக்கப்படும் சம்மன், நோட்டீஸ் உள்ளிட்டவற்றில் கையெழுத்திடும் அதிகாரமும், ஆணையருக்கு ஆலோசனை சொல்லும் அதிகாரமும் ஆணையச் செயலாளருக்கு மட்டுமே உண்டு. எனவே, செயலாளர் மாற்றம் செய்யப்பட்டதே பெரும் சர்ச்சையாக எழுந்தது. இந்த நிலையில்தான், சசிகலாவின் பிரமாணப்பத்திரம், அவரது வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த பிரமாணப்பத்திரத்தில் சசிகலா குறிப்பிட்ட சில செய்திகள், பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட்டாகி இருந்தபோது, பன்னீர் செல்வம், தம்பிதுரை, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், ஜெயலலிதாவைப் பார்த்தார்கள் என்ற செய்தியும் அதில் ஒன்று. இந்தச் செய்திகள் வெளியான நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து ஒரு தகவல் வெளியானது. 'சசிகலாவின் பிரமாணப்பத்திரம்குறித்து வெளியான செய்தியில், 70 சதவிகிதம் உண்மையல்ல' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல், ஆணையத்தின் செயலாளர் கோமலா மூலமே வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் வெளியானதன் பின்னணியில், கோமலாவின் கணவர் இருப்பதாக இப்போது புதிய குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. 

கோமலாவின் கணவர் பாபு என்பவர், வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞராகவும் அவர் இருந்துவருகிறார். இவர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, சசிகலா தரப்புக்கு எதிராக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் தரப்பில் சின்னத்தை முடக்குவதற்கு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுத்தாக்கல் செய்த வழக்கறிஞர்கள் பட்டியலில் பாபுவும் இடம்பெற்றுள்ளார். அதாவது, பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையத்தில் வாதாடியவர்களில் கோமலாவின் கணவரும் ஒருவர். அதேபோல, தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு வழங்கிய சம்மன் காப்பியை பெங்களூரு சிறைக்குச் சென்று வழங்கியவரும் பாபுதான் என்கிறார்கள். பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமாக பாபு இருந்த காரணத்தால், கோமலா விசாரணை ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டதில் சர்ச்சை ஏற்பட்டது. 

மேலும், அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக மனோஜ்பாண்டியன் நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டரிலும் பாபுவின் பெயர் இடம்பெற்றுள்ளது. விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள நிலையில், அவர்களுக்கு நெருக்கமான ஒருவரின் மனைவியே ஆணையத்தின் செயலாளராக இருப்பது தவறான முன்னுதாரணம் என்கிறார்கள், வழக்கறிஞர்கள். ஆணையத்தில் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்யும்போது, ஆணையத்தின் செயலாளரும் அங்கு இருப்பார். இதனால், விசாரணை ஆணையத்தின் விசாரணைகள், பன்னீர்செல்வம் தரப்புக்கு தெரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்ற குற்றச்சாட்டை சசிகலா தரப்பில் சொல்கிறார்கள். கோமலாவை செயலாளர் பதவிக்குக் கொண்டுவந்ததற்குக் காரணமே, பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக ஆணையம் செயல்படுவதற்காகத்தான் என்கிறார்கள் சசிகலா தரப்பினர். 

ஆணையத்தின் செயலாளராக மனைவியும், சாட்சிக்காரர்களின் சார்பாக கணவரும் இருந்தால், ஆணையத்தின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வி, வழக்கறிஞர்கள் மத்தியில் இப்போது எழுந்துள்ளது.Trending Articles

Sponsored