"பெட்ரோல் விலை போன்று காவிரி நீரை அன்றாடம் பங்கிட வேண்டும்" - விவசாயிகள் வலியுறுத்தல் #WeWantCMB



ர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. 

Sponsored


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற உயர் நிலைக்குழு கூட்டத்தில், காவிரிப் பிரச்னையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

Sponsored


கர்நாடகத் தேர்தல் அறிவிப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடையாக இருக்காது என்று தேர்தல் தேதியை அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்திருந்தார்.

Sponsored


காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி அளித்தத் தீர்ப்பில், 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடு முடிவடைந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் சட்ட ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரியும் மனுத்தாக்கல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டதாக தமிழக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநேகமாக மார்ச் 31-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது குறித்தும், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது கிடைக்கும் என்பது குறித்தும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியனிடம் பேசினோம். 

"காவிரி நதிநீர் விவகாரத்தில் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிகிறோம். காவிரி மேலாண்மை வாரியமா அல்லது மேற்பார்வைக் குழுவா என்பது குறித்து அறிவதற்காக மத்திய அரசு இந்த மனுவைத் தாக்கல் செய்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இது நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல; ஒட்டுமொத்த காவிரி தொடர்பான தீர்ப்பை முடக்கும் செயலாகும். அதற்கான முயற்சியே அது. உச்ச நீதிமன்றம் அதனை அனுமதிக்கப்போகிறதா என்பது அடுத்தக்கட்ட விஷயம். அதே நேரத்தில், மத்திய அரசுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர வேண்டும். அதன்படி நீதிமன்றமே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். மத்திய அரசு இவ்விஷயத்தில் உறுதியான முடிவை எடுக்க மாட்டார்கள் என்பதை, நீதிமன்றத்தில் எடுத்துரைத்து, மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிடக்கோரி, தமிழக அரசு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.

இதுபற்றி கீழ்பவானி விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் செ. நல்லசாமி, "1990-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, 1991-ல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், தமிழகத்திற்கு 205 டி.எம்.சி. வழங்க வேண்டும் என்று தெரிவித்தது. அதை அரசிதழில் வெளியிட்டார்களே தவிர,  நடைமுறைப்படுத்தவில்லை. 2007-ல் வெளியான நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பானது 2013-ம் ஆண்டில்தான் அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம். ஆனால், காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான காட்சியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. இப்போ 2018-ல் உச்ச நீதிமன்றம் மற்றுமொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதையும் இதுவரை மத்திய அரசு நடைமுறைப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார காலக்கெடு முடிந்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட எதையும் மத்திய அரசு நடைமுறைப்படுத்தப்போவதில்லை.  
நடுவர் மன்றத்தின் தீர்ப்புகள். இடைக்காலத் தீர்ப்பாகட்டும், இறுதித் தீர்ப்பாகட்டும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானதாகும். எனவே, இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்.  இதுகுறித்து உச்ச நீதிமன்ற விசாரணையின்போது தமிழ்நாடு தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துரைக்கவில்லை என்பது எங்களுடைய குற்றச்சாட்டு. தமிழ்நாடு அரசாங்கமும் இதைக் கண்காணிக்கவில்லை. இது சாதாரண பாமரனுக்கும் புரியும். ஆனால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களுக்கோ, சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ இதுபற்றி எந்தவிதப் புரிதலும் இல்லை என்றுதான் கூறவேண்டும். 

கர்நாடக காவிரியில் வரக்கூடிய தண்ணீரை, அம்மாநிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களில் தேக்கிவைத்து, தமிழ்நாட்டிற்கு ஜூன் முதல் மாதாந்திர அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.இது எந்தவிதத்தில் நியாயம்? ஏன் பூட்டையும், சாவியையும் கர்நாடக மாநிலத்திடம் ஏன் கொடுக்கிறீர்கள்? தமிழ்நாட்டில் 93.5 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேட்டூர் என்கிற மிகப்பெரிய ஒரு அணை உள்ள சூழலில், மாதாந்திர அடிப்படையில் கர்நாடகம் தண்ணீரை விடுவித்தால், மேட்டூர் அணையில் தேக்கி வைத்துக் கொள்ளலாமே. எனவே, கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் விடுவிக்கப்படும் என்றால், மேட்டூர் அணையே இங்கு தேவையில்லை.
எனவே, 2007 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் வெளியான காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான தீர்ப்புகளின் அடிப்படையே தவறானதாகும். 

கர்நாடக நீர்த்தேக்கங்களுக்கு வரக்கூடிய தண்ணீரை தினந்தோறும் நீர்ப்பங்கீடு என்ற அடிப்படையில் தீர்ப்பை மாற்றியமைக்க வேண்டும். எப்படி பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்கிறார்களோ, அதேபோன்று அன்றாடம் தண்ணீர் பங்கீடு செய்யும் வகையில் தீர்ப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும். தவிர, தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நிலத்தடி நீர் என்பது தாவரங்களுக்குச் சொந்தமானது. இதனை உணர்ந்துதான், நம் முன்னோர்கள் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு நிலத்தடி நீரை உறிஞ்சாமல் இருந்தனர். ஆனால், தற்போது நீதிபதிகள் நிலத்தடி நீருக்குப் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி விட்டது" என்றார்.



Trending Articles

Sponsored