``நாங்கள் கோழைகள் அல்ல...நாடக அரசியல் வேண்டாம்..!'' ஏன் கொதிக்கிறார் தமிழிசை?



Sponsored



``காவிரிப் பிரச்னையைப் பொறுத்தமட்டில் ஆக்கப்பூர்வமான தீர்வில்தான் பி.ஜே.பி-க்கு நம்பிக்கை உள்ளதே தவிர ராஜினாமா செய்கிறோம்; தற்கொலை செய்கிறோம்; கண்டனம், தூண்டிவிடுதல் போன்ற நாடக அரசியலில் நம்பிக்கையில்லை. உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் என்ன வலியுறுத்தியுள்ளதோ, அதை நிச்சயம் மத்திய அரசு நிறைவேற்றும்'' என்று பி.ஜே.பி தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

``காவிரி நதி நீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்" என்று தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலும் `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழகச் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி- கள் எனத் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்துக்கு முன் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Sponsored


``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், அ.தி.மு.க. எம்.பி- கள் அனைவரும் தற்கொலை செய்துகொள்வோம்" என்று அந்தக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஏ. நவநீத கிருஷ்ணன் ஏற்கெனவே அறிவித்தார். அ.தி.மு.க-வின் திருத்தணி தொகுதி மக்களவை உறுப்பினர் ஹரி, காவிரி பிரச்னைக்காக தன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பன்னீர்செல்வமும் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

Sponsored


இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ``தமிழக அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறியிருக்கின்ற மத்திய அரசையும், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து வாயே திறக்காத பிரதமரையும் கண்டித்துக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், தமிழ்நாட்டு உரிமைகளைக் காவு கொடுத்துவிட்டு, பி.ஜே.பி-க்குக் கர்நாடக தேர்தல் லாபத்தை ஏற்படுத்தி, எல்லா வகையிலும் உதவுவதற்காக மட்டும் `ஓவர் டைம்' உழைப்பதைக் கைவிட வேண்டும்'' என்று கூறியுள்ளார். 

பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``இப்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அந்த வழக்கில் உத்தரவு வெளியாவதற்கு எட்டு மாதங்கள் முதல் ஓராண்டு வரை ஆகலாம். அதற்குள் இந்தப் பிரச்னையை நீர்த்துப் போகவைத்து விடலாம் என்பதுதான் மத்திய அரசின் திட்டமாகும். அதற்கேற்ற வகையில்தான் மத்திய அரசு வகுத்துக் கொடுக்கும் திட்டத்தின்படி, தமிழக அரசு செயல்படுகிறது. எனினும், `இந்தப் பிரச்னையில் தாங்கள் தீவிரமாக உள்ளோம்' என்று காட்டிக்கொள்ள தற்கொலை வசனங்களை பினாமி அரசின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் முழங்குகிறார்கள். மொத்தத்தில் காவிரிப் பிரச்னையைப் பொறுத்தவரை, தமிழகத்தில் ஒரு பொம்மலாட்டம் நடக்குது அது ரொம்பப் புதுமையாக இருக்குது. மக்களுக்கு மட்டும் ஏமாற்றமே கிடைக்குது'' என்று சொன்னார்.

இந்தப் பிரச்னை குறித்து, பி.ஜே.பி. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ``உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் என்ன வலியுறுத்தியுள்ளதோ, அதை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றும். நீதிமன்றத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் மத்திய அரசுக்குக் கிடையாது. காவிரியில் மேலாண்மை வாரியமோ அல்லது உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பதாக நம்பப்படும் குழுவோ அமைக்கப்போவது பி.ஜே.பி அரசுதான். அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது நெடுநாளைய சிக்கலான பிரச்னை. பிரச்னையை உடனே தீர்ப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அதனால்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 6 வாரத்தில் முடியுமா என்று கேட்டிருந்தார். நிச்சயம் காவிரியின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், அதேநேரம் இதை வாய்ப்பாக வைத்துக் கொண்டு தமிழகம் போராட்டக் களமாகும் என்ற அபாயகரமான சூழ்நிலையை, தமிழக மக்களின் அமைதியைக் குலைக்கும் வார்த்தைகளை நாங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம்.

இரண்டு மாநிலங்களிலும் உள்ள தமிழர்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இன்று குறை காணும் கம்யூனிஸ்டுகள், காங்கிரஸின் முதல் 5 ஆண்டு கால ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள்தாம். ஆக, காவிரியைக் கொடுக்கவில்லை என்றால், அன்று அவர்கள் தங்களின் ஆதரவை வாபஸ் வாங்கியிருக்கலாம். தமிழகத்தை அன்றே வஞ்சித்தவர்கள் கம்யூனிஸ்டுகளும்தான். அடுத்த 5 ஆண்டுகள் தி.மு.க இல்லாமல் காங்கிரஸ் ஆட்சி நீடித்திருக்க முடியாது. ஆக, அன்று தமிழகத்தை வஞ்சித்தது தி.மு.க-தான். இன்று கூக்குரலிடும் வைகோ, திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் அன்றே காவிரிக்கு அழுத்தம் தராமல், தமிழகத்தை வஞ்சித்தார்கள். காவிரியைப் பற்றி பேச இவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.

எங்கேயும் காணாமல் போவதற்கோ, ஓடி ஒளிவதற்கோ பி.ஜே.பி. தலைவர்கள் கோழைகள் அல்ல. இன்றும் சொல்கிறோம் நீங்கள் அனைவரும் கிடப்பில் போட்ட காவிரி பிரச்னையை நிச்சயம் பி.ஜே.பி-தான் தீர்த்து வைக்கும். என்றுமே ஆக்கப்பூர்வமான தீர்வில்தான் பி.ஜே.பி-க்கு நம்பிக்கை உள்ளதே தவிர, ராஜினாமா செய்கிறோம்; தற்கொலை செய்கிறோம்; கண்டனம், தூண்டிவிடுதல் போன்ற நாடக அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மற்றவர்களால் ஆண்டாண்டு காலமாக தாமதமான பிரச்னைக்கு, நல்லதொரு தீர்வுக்காக மேலும் சில நாள்கள் தாமதம் ஆனாலும், எங்கள் கடமையை நிச்சயம் செய்வோம். தமிழக மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம்'' என்று கூறினார். 

காவிரி மேலாண்மை வாரியம் எப்போது அமைப்பீங்க பாஸ்..!



Trending Articles

Sponsored