''ரஜினியிடம் அப்படி என்ன பெரிய சக்தி மறைந்திருக்கிறது?'' காவிரிக்காக கொதித்த பாரதிராஜா #FlashBack



`திரையுலகம் நடத்தும் நெய்வேலி போராட்டம் தேவையில்லாதது. நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என ரஜினி அறிக்கைவிட... விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. ரஜினியின் இந்த முடிவுக்குக் காரணம் பாம்குரோவ் ஹோட்டலில் நடந்த ஆலோசனைக் கூட்டம்தான். அந்தக் கூட்டத்தில், கர்நாடகத்தை சேர்ந்த தமிழ் நடிகர்கள் வறுத்தெடுக்கப்பட்டார்கள். அதில் ரஜினியும் தப்பவில்லை. ``தமிழ்த் திரையுலகம் நடத்தும் காவிரிப் போராட்டத்தில் பங்கேற்காத கர்நாடகத்தைச் சேர்ந்த தமிழக நடிகர்களைச் சுட்டுத் தள்ள வேண்டும்'' எனக் கூட்டத்தில் சீறினார்கள். ``காவிரிக்காக மட்டும் நம்மை கன்னடர்கள் எதிர்க்கவில்லை. தமிழனுக்கு எதிராகவே அவர்கள் போராடுகிறார்கள். தமிழகத்துக்கு எதிராக கர்நாடகத்தினர் நடத்தும் போராட்டம் கன்னட இன வெறிப் போராட்டம்தான்'' என்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் நெய்வேலி போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் ரஜினி.

Sponsored


காவிரி போராட்டம் பிறகு ரஜினி எதிர்ப்புப் போராட்டமாக மாற ஆரம்பித்தது. ரஜினியின் ரசிகர்களே, சில இடங்களில் அவருக்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். கர்நாடகத்துக்கு ஆதரவாக அறிக்கை விட்ட ரஜினியைக் கண்டித்து, சென்னை நந்தனம் அருகே மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ரஜினிக்கு எதிராக கோஷமிட்டபடியே அண்ணா சாலையை மறித்தார்கள் மாணவர்கள். நடிகர் சங்கத்திலும் ரஜினிக்கு எதிர்ப்பு கிளம்பியது. நடிகர் சங்கத்தில் அக்டோபர் 4-ம் தேதி பாரதிராஜா தலைமையில் அவசரக் கூட்டம் கூடியது. நடிகர்கள் சத்யராஜ், நெப்போலியன், பார்த்திபன், வடிவேலு, மணிவண்ணன், நாசர், எஸ்.வி.சேகர், மயில்சாமி, ஆர்.சுந்தரராஜன், ரேவதி, ஸ்ரீப்ரியா, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பாலுமகேந்திரா, சித்ரா லட்சுமணன், கஸ்தூரி ராஜா, சீமான், வி.சேகர், மனோபாலா, களஞ்சியம், வி.சி.குகநாதன், செல்வராஜ், தயாரிப்பாளர்கள் இப்ராகிம் ராவுத்தர், கோவை தம்பி, ஏ.எல்.அழகப்பன், காஜா மொய்தீன், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். ``நன்றி கெட்டவர் ரஜினி... ரஜினியை வளர்த்துவிட்டது தவறு... ரஜினியை வைத்து இனி படங்களை எடுக்கக் கூடாது...'' என ரஜினிக்கு எதிராகக் கூட்டத்தில் குரல்கள் எழுந்தன. `ரஜினியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' எனப் பலரும் கோரிக்கை வைத்தனர். சத்யராஜ் பேசும்போது, ``கர்நாடகத்தில் உள்ள நடிகன், தனது மாநிலத்துக்காகப் போராடுகிறான். தமிழகத்தில் இருக்கிறவன் தமிழனுக்காகப் போராடித்தான் ஆக வேண்டும்.'' என்றார்.

Sponsored


இந்தக் கூட்டம் முடிந்த பிறகு மீடியாவைச் சந்தித்த பாரதிராஜா, ``எங்கள் போராட்டத்தை வாபஸ் பெற சொல்ல ரஜினிக்கு எந்த அருகதையும் இல்லை. தமிழகத்தின் உப்பைத் தின்றுவிட்டு, தண்ணீர் குடிக்கும் ரஜினிகாந்தை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்காமல் தானாகவே நெய்வேலி போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்'' என ரஜினியை ஒரு பிடிபிடித்தார்.

Sponsored


``காவிரி பிரச்னையில் சுப்ரீம் கோர்ட்டைக்கூட கர்நாடகா அரசு மதிக்கவில்லை. அப்படிப்பட்ட கர்நாடகத்தை ரஜினி கண்டிக்கவே இல்லை. `தமிழ்நாட்டை கண்டிப்பதில் மட்டும் ஏனோ ரஜினி இந்தியன் ஆகிவிடுகிறார். தமிழகத்துக்குத் துரோகம் செய்யும் கர்நாடகாவை விமர்சிக்க வாயில்லாத ரஜினி, தன்னைத் தமிழன் என எப்படிச் சொல்லிக் கொள்ளலாம்? நெய்வேலி போராட்டம் தமிழர்களின் போராட்டம். சினிமாகாரர்கள் நடத்தும் போராட்டம் கிடையாது. சினிமாகாரர்கள் முன்னே நிற்கிறோம், அவ்வளவுதான். இந்தப் போராட்டம் தமிழ் இனம் தொடர்புடையது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வெட்கமில்லாமல் சொல்கிறார் ஒரு நடிகர். இதை எப்படி மறுபரிசீலனை செய்ய முடியும்.? தமிழன் என்றால் கேவலமா? கர்நாடகத்தில் நடந்து வரும் போராட்டங்களை அந்த நடிகர் மறுபரிசீலனை செய்யச் சொல்வாரா? கர்நாடகாரர்களிடம் தமிழகத்துக்காக அவர் பேசினாரா? அப்படி ரஜினி பேசியிருந்தால் நாங்களும் போராட்டத்தை மறுபரிசீலனை செய்யத் தயார்? பெங்களூரில் தமிழ்த் தாய் உருவ பொம்மையைக் கத்தியால் குத்தியபடியே ஊர்வலம் போகிறார்கள். அதை கர்நாடகா நடிகர்கள் வரவேற்கிறார்கள். அதனை ரஜினி கண்டிக்கவில்லை. இது உனக்கும் எனக்கும் உள்ள பிரச்னை என்றால் மறுபரிசீலனை செய்யத் தயார். ஆனால், இது தமிழ் இனத்தின் பிரச்னை. உயிர் பிரச்னையில் மறுபரிசீலனை செய்ய சொல்கிற நடிகரை எந்த ரகத்தில் சேர்ப்பது? ரஜினிக்கு நன்றி உணர்ச்சி இல்லை. பிரதமரை இவர் பார்த்து என்ன ஆகிவிடப் போகிறது. இவரிடம் அப்படி என்ன பெரிய சக்தி மறைந்திருக்கிறது?'' என பாரதிராஜா கொதித்தார்.

கர்நாடகத்துக்கு எதிரான நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறிய நிலையில் ரஜினிக்கு ஆதரவா? இல்லை எதிர்ப்பா என்கிற குழப்பத்தில் நடிகர் சங்கம் இருந்தது. அப்போது, நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்தும் துணைத் தலைவராக சரத்குமாரும் இருந்தனர். இந்த விவகாரம் வெடித்தபோது விஜயகாந்த் லண்டனில் இருந்தார். சினிமா கலைஞர்களின் நெய்வேலி போராட்டத்துக்கு கருணாநிதி ஆதரவு தெரிவித்தார். ஆனால், ரஜினி எதிர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்கவில்லை.

காவிரி பிரச்னை பற்றி பிரதமர் வாஜ்பாயிடம் ரஜினி பேசப் போவதாக தகவல்கள் வெளியாகின. டெல்லிக்கு விமானத்தில் கிளம்பி போனார். ஏர்போர்ட்டில் நிருபர்களிடம் பேசிய ரஜினி, ``நெய்வேலி முற்றுகைப் போராட்டத்தில் ரத்த ஆறு ஓடும் சூழல் உருவானால் அதில் கலந்து கொள்ள மாட்டேன்.'' என்றார். பிரதமர் வாஜ்பாயை சந்திக்கவில்லை. டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் போனார்.

(தொடரும்)

இந்த தொடரின் பிற அத்தியாயங்களைப் படிக்க 



Trending Articles

Sponsored