`இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் செய்யாததை பி.ஜே.பி செய்யப்போகிறது!' - தமிழிசை



Sponsored



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்டக் கட்சிகள் நடத்தும் போராட்டத்தால் தமிழகமே தகித்துக் கொண்டிருக்கிறது. போராட்டம் காரணமாக இயல்பு வாழ்கைப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் மத்திய அரசு தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில், பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  ''நியுட்ரினோ திட்டம் நல்ல திட்டம்! தமிழகத்துக்கு அவசியமானது'' எனப் பேசியுள்ளார். இந்த நியுட்ரினோ திட்டம் குறித்தும், காவிரிப் போராட்டங்கள் குறித்தும் சில கேள்விகளை முன்வைத்தோம். 

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நியுட்ரினோ திட்டம் குறித்துப் பேசியிருக்கிறீர்களே ?"

Sponsored


''நவீன உலகத்துக்கு நியுட்ரினோ திட்டம் மிகுந்த அவசியமான திட்டம். மாநிலத்துக்கு வளர்ச்சியை கொடுக்கக்கூடிய திட்டம் என்பதால், மேலை நாடுகள் இந்தத் திட்டத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகின்றன. கனடா போன்ற நாடுகளில், இந்தத் திட்டத்தை செயற்கையாக உருவாக்க முயற்சித்து  வருகிறார்கள். அப்படி இருக்கும்போது  'நியுட்ரினோ  திட்டம்  கொண்டு வருவது அணு உலையை அமைப்பதற்குச் சமமானது' என இங்குள்ள அரசியல் கட்சிகள் பொய்ப் பிரசாரம்  செய்து திட்டத்தையே முடக்கப் பார்ப்பது நல்லதல்ல.   

Sponsored


காற்றும் சூரியக் கதிர்களும் நம்மீது படுவதால் எந்தத் தீங்கும் வராது. அதே மாதிரி நியுட்ரினோ திட்டத்தினாலும் நமக்கு பாதிப்பு ஏதும் இல்லை. அந்தத்  திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து மக்கள் புரிந்துகொண்டால்போதும். அதிலும் எடுத்த  உடனேயே இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றாது. அதில் உள்ள சாதக   பாதகங்களை அறிந்து, சாதகமான அம்சங்களை  மட்டுமே இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றும்"

"நியுட்ரினோ திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறதே?''

''இந்தத் திட்டத்தை எதிர்ப்பதால் போராட்டக்காரர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் மட்டுமே ஏதோ மக்கள் மீது அக்கறை இருப்பது போன்றும் மத்திய பி.ஜே.பி அரசுக்கு மக்கள் மீது  அக்கறை இல்லாமல் இருப்பது போன்றதுமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இப்படியான  பொய்ப்  பிரசாரம் செய்பவர்களின் சூழ்ச்சியை எங்கள் தலைமை முறியடிக்கும்."  

"மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு எதையுமே கண்டு கொள்ளவில்லையே..... இது சரியா?" 

''மத்திய அரசு கொண்டு வரும்  திட்டங்களை எதிர்க்கிறார்கள் என்றால், அதனை கைவிட்டு விடுகிறோம். ஆனால், இப்படியான நல்லத் திட்டங்களை கைவிட்டு விட்டால் வருங்காலத்தில் தமிழகம் வளராது  என்பதையும் தெளிவுபடுத்துகிறேன். வருங்காலத்தில் குஜராத், பீகார் போன்ற மாநிலங்கள் வளர்ந்திருக்கும். தமிழ்நாடு வளர்ச்சியடையாத மாநிலமாக இருக்கும். தமிழகத்துக்கு அருகாமையில் உள்ள கர்நாடகா, கேரளா போன்ற மாநிலத்தில் ஷேல் எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்புகள் வரவில்லை. ஆனால், இங்கு இத்திட்டத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். எந்தத் திட்டமும் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு கொண்டுவரவில்லை. இதற்கு முன்பு  ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கொண்டு  வந்தது. அதனை தி.மு.க-வும்  ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்கள் பாதியில் விட்டுவிட்டுப் போன திட்டங்களை  நாங்கள் நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம். என்னைப் பொருத்தவரை, ஹைட்ரோ கார்பன் திட்டம் நல்ல திட்டம்  இல்லை என்பதை ஏற்கிறேன். அதே நேரத்தில் நியுட்ரினோ திட்டம் மக்களின் வளர்ச்சிக்கானது; எனவே அதனை ஏற்கத்தான் வேண்டும். ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் அதைப்பற்றி நன்றாகத் தெரிந்த காரணத்தால், எந்த மேடையிலும்  இத்திட்டத்தைப் பற்றி விவாதம் நடத்தத் தயாராக உள்ளேன்."

"காவிரி மேலாண்மை  வாரியம் அமைப்பதில் விரைவில் முடிவு தெரியும் என்று கூறியுள்ளீர்களே?" 

''50  வருடமாக ஆட்சியில் இருந்தவர்கள் நோயைக் குணமாக்காமல் போன நிலையில், இப்போதுதான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள பி.ஜே.பி சிகிச்சை அளித்து வருகிறது. எனவே இந்த சிகிச்சைக்கு சில வார காலம்  அவகாசம் தேவைப்படுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியே 'இதற்கு சட்ட ரீதியாகத் தீர்வு இருக்கும்போது ஏன் போராடுகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசும் அதற்கான நடவடிக்கைளை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகளைப் போன்று இந்த விவகாரத்தில் ஏமாற்றத்தைத் தராமல் நிரந்தரத் தீர்வை தருவதற்கு முயற்சித்து வருகிறோம்.

அதற்குள்ளாக 'ஐ.பி.எல் வீரர்களை அடித்து நொறுக்குவோம்; பேருந்தை உடைப்போம்; கொளுத்துவோம்' என இங்குள்ள அரசியல் கட்சிகள் பேசுவது தமிழகத்தை வன்முறைப் பாதைக்குக்  கொண்டு  செல்லும். அதனை பி.ஜே.பி ஒருபோதும் அனுமதிக்காது. தமிழகத்தில் அரசியல் நகர்வு ஒரு பாசிட்டிவான  நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் செய்யாததை பி.ஜே.பி செய்யப் போகிறது. அதுதான் காவிரியைப் பாய்ந்தோடச்செய்வது.'' என்று சொல்லிச் சிரிக்கிறார் தமிழிசை சௌந்தர்ராஜன்!

அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்றுதான் நமக்குத் தெரியவில்லை!



Trending Articles

Sponsored