பி.ஜே.பி-யின் வெற்றிக்கணக்கு தொடருமா? கர்நாடகத்தில் கடும் போட்டி!



Sponsored



ர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 218 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே மாத இறுதியில் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு, வரும் மே 12-ம் தேதி, அம்மாநில சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது.

Sponsored


இந்தக் கட்சிகளின் தலைவர்கள், கர்நாடக மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை பி.ஜே.பி. தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. 

Sponsored


பி.ஜே.பி. சார்பில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்கட்சி ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு, காங்கிரஸ் சார்பில் போட்டியிடவிருக்கும் 218 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா, சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது மகன் யதீந்திரா, வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். சிகாரிபுரா தொகுதியில் பி.ஜே.பி. மூத்தத் தலைவரும், முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மூன்று நாள்கள் நடைபெற்ற தீவிர ஆலோசனைக்குப் பின்னர், கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னமும் 6 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடவுள்ளார். இவர், இத்தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடாவை எதிர்த்து, கடுமையாகப் போராட வேண்டிவரும் என்று இப்போதே தகவல்கள் வெளியாகிவுள்ளன. சித்தராமையாவைப் பொறுத்தவரை, பஹல்கோட் மாவட்டம் படாமி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி மேலிடம் அதை நிராகரித்துவிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் வருணா தொகுதியிலிருந்து சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டார். 

துமாகுருவில் அடங்கிய கொரடகரே தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா போட்டியிடுகிறார். சித்தராமையாவின் மகன் யதீந்திரா, வருணா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். படாமி தொகுதியிலும் போட்டியிட சித்தராமையா விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுமாறும், இரண்டு தொகுதிகளில் முதல்வர் போட்டியிடும்பட்சத்தில் அது தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விடும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிவிட்டாராம். சித்தராமையாவின் மகன் தவிர, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் நான்குபேரின் வாரிசுகளும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். திரைப்பட நடிகர் அம்பரிஷ், மாண்டியா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். 

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் 7 பேருக்கும், மாற்றுக் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த எம்.எல்.ஏ-க்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும், தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியான ஷாந்திநகர் தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வான என்.ஏ. ஹாரிஸின் மகன் முகமது என். ஹாரிஸ் பெங்களுரு காஃபி ஷாப்பில் அண்மையில் கலவரத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கினார். தற்போது, அந்தத் தொகுதியில் போட்டியிட ஹாரிஸ்-க்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநிலம் முழுதும் நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஷாந்திநகர் தொகுதி வேட்பாளர் பெயர் பரிசீலிக்கப்பட்டு, நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாலியல் புகாருக்குள்ளான முன்னாள் அமைச்சர் ஹெச்.ஒய். மேதி-க்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு பஹல்கோட் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் அஞ்சனாமூர்த்திக்கு காங்கிரஸ் கட்சி, வாய்ப்பு அளிக்கப்படாததால், அவரின் ஆதரவாளர்களும், கட்சித் தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், அனகல் தொகுதி எம்.எல்.ஏ. சிவண்ணாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரின் அலுவலகம், உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.ஜே.பி. சார்பில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ் கட்சி 6 வேட்பாளர்களை மட்டுமே அறிவிக்க உள்ளது. 

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாக நடைபெற்ற தேர்தல்களில் பி.ஜே.பி-யே வெற்றிபெற்று வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பெரிய மாநிலங்களில் கர்நாடகம் மட்டுமே தற்போதைக்கு அந்தக் கட்சியின் நம்பிக்கையாக உள்ளது. அடுத்த ஆண்டு (2019) நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

மோடிக்கு 2019 தேர்தல் எப்படி இருக்கும்?

பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு 2014-ல் இருந்த அளவுக்கு, 2019 மக்களவைத் தேர்தலில் இருக்காது என்று தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு உடனடியாகத் தேர்தல் நடைபெற்றால் (இந்த ஆண்டு), பிரதமர் மோடி தலைமையிலான பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்காது என்று கருத்துக்கணிப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த முறையும் மோடியே பிரதமராகப் பொறுப்பேற்பார் என்று அரசியல்நோக்கர்கள் கருத்து தெரிவித்தாலும், அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று தெரியவந்துள்ளது. பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, தற்போது மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 21-ல் ஆட்சியில் உள்ளது. மோடி பிரதமர் பதவியேற்பதற்கு முன், 8 மாநிலங்களிலேயே பி.ஜே.பி. ஆட்சியில் இருந்தது. பல்வேறு மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகள், பி.ஜே.பி-யை விட்டு வெளியேறியுள்ளன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும், அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றியைப் பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக இருக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. வாக்காளர்களின் ஸ்திரமற்றதன்மையும், வாக்காளர்கள் ஏற்கெனவே வசித்த பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்திருப்பதும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யின் பெரும்பான்மையான வெற்றிக்குப் பாதிப்பாக அமையும் என்று அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பி.ஜே.பியும், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே, கர்நாடக மாநிலத் தேர்தல் வெற்றியை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே பார்க்கின்றன. அதன் காரணமாக வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம் போன்ற அனைத்து விஷயங்களிலும் மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகின்றன. எப்படி இருப்பினும், இன்னும் ஒரு மாதத்தில் கர்நாடகத்தில் மகுடம் சூட்டப்போவது யார் என்று தெரிந்துவிடும். அதுவரை பொறுத்திருப்போம்...



Trending Articles

Sponsored