ரஜினி vs ராமதாஸ்: பரபர அறிக்கையும்.. 2004 பாராளுமன்றத் தேர்தலும்! #Flashback



Sponsored



`ஒக்கேனக்கல் யாருக்குச் சொந்தம்' என்கிற விவகாரம் வெடித்தபோது கர்நாடகாவுக்கு எதிராக முண்டாசு கட்டினார் ரஜினி. அதற்கு முன்பு பா.ம.க-வுடனான ரஜினியின் `பழிக்குப் பழி'யைப் பார்த்துவிடுவோம்...

நெய்வேலி போராட்டத்தில் ரஜினியை அதிகம் சீண்டியது பாரதிராஜா அல்ல.. ராமதாஸ்தான். அதற்குக் காரணம் `பாபா' பட பிரச்னை. திரையுலகின் நெய்வேலி போராட்டம், ரஜினியின் தனி உண்ணாவிரதம் எல்லாம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து, அந்த விஷயங்களையே மக்கள் மறந்து போயிருந்தார்கள். 2002-ம் ஆண்டு நெய்வேலி போராட்டம் நடந்தது. அதன்பிறகு 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்தது. `பாபா' படத்தின்போது பிரச்னை, `நெய்வேலி போராட்டம்' என ராமதாஸ் மீது கோபத்தில் இருந்த ரஜினி, 2004 நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்திக் கொண்டார். 

Sponsored


தேர்தல் நெருங்கும் நேரத்தில் திருவண்ணாமலையில் பேசிய ராமதாஸ், ரஜினியைத் தரக்குறைவாகப் பேசினார். இது ரஜினியை மட்டுமல்ல அவரின் ரசிகர்களையும் கொதிக்க வைத்தது. அதன்பிறகுதான் பா.ம.க., போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் பா.ம.க.-வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கச் சொன்னார் ரஜினி. அதை ஏற்று ரசிகர்களும் எதிர்ப்பு காட்ட ஆரம்பித்தார்கள். இதனால் ரசிகர்களுக்குக் கொலை மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் வர ஆரம்பித்தன. இந்நிலையில்தான் மதுரை வந்த ராமதாஸுக்கு ரஜினி ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டினார்கள். இதனால் அவர்களைத் தாக்கினார்கள் பா.ம.க-வினர். இந்தச் சம்பவத்திற்காக ராமதாஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Sponsored


இந்த நிலையில் ராமதாஸைக் கண்டித்து பரபரப்பு அறிக்கை விட்டார் ரஜினி. அந்த அறிக்கையில் என்ன சொல்லியிருந்தார் தெரியுமா?

``பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களையும், வன்னிய சமுதாய நண்பர்களையும் நான் மனம் திறந்து கேட்கிறேன். உங்கள் மதிப்பிற்குரிய டாக்டர் ராமதாஸ் அவர்களை நான் என்றைக்காவது, எந்த விஷயத்திலாவது எதிர்த்து இருக்கிறேனா? அவருக்கு ஏதாவது தப்பு செய்திருக்கிறேனா? அவரைப் பற்றி ஏதாவது தரக்குறைவாகப் பேசியிருக்கிறேனா? `பாபா’ படத்தில் நான் சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதும் இளைஞர்களைக் கெடுத்து விடும் என்ற குற்றச்சாட்டை கூறி, அந்தப் பட வெளியீட்டுத் தினத்தன்று படச்சுருளைக் கடத்தி, தியேட்டர் திரையைக் கிழித்து, திரையரங்க மேனேஜரைக் கடத்தி, பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, மன்ற நிர்வாகிகளின் வீடுகளைக் கொளுத்தி, அலுவலகங்களைத் தாக்கி, திரையரங்க உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பல கோடி நஷ்டத்தை உண்டாக்கினார்கள்.

வன்னிய சங்க சகோதரர்கள் ஏராளமானவர்கள் என்னுடைய ரசிகர்களாக இருக்கிறார்கள். மன்றங்களில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். நான் உங்களை ஒன்று கேட்கிறேன். டாக்டர் ராமதாஸ் அவர்கள் என்னை விட வயதில் மூத்தவர், என்னை விட படித்தவர், ஒரு பெரும் கட்சியின் தலைவர். அவர் என்னை நேரடியாகச் சந்திக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை, வெறும் தொலைபேசியிலாவது, `தம்பி இந்த மாதிரியான சீன்களையெல்லாம் படத்தில் வைக்க வேண்டாம் அது இளைஞர்களைக் கெடுக்கும்’ என்று சொல்லியிருந்தால், நிச்சயமாக நான் அந்தக் காட்சிகளை நீக்குவதைப் பற்றி சிந்தித்து இருப்பேன். முடிந்தால் அந்தக் காட்சிகளை நீக்கியிருப்பேன். முடியவில்லையென்றால் இதுபோன்ற காட்சிகளை அடுத்தபடத்தில் தவிர்த்திருப்பேன். அல்லது ‘இதுபோன்ற காட்சிகளைத் திரைப்படத்தில் அனுமதித்தால், அது இளைஞர்களைக் கெடுத்துவிடும்’ என்று சினிமா தணிக்கைக் குழுவிடம் இதுபோன்ற காட்சிகளை அனுமதிக்க வேண்டாமென முறையிட்டிருக்கலாம்.

ஒரு பெரியவருக்கு, ஒரு படித்தவருக்கு, ஒரு பெரும் கட்சித் தலைவருக்கு அதுதானே அழகு, நியாயம். அதை செய்யாமல் கோடான கோடி பண முதலீட்டில் தயாரித்த படம் வெளியான பிறகு, இந்த மாதிரியான காட்டுமிராண்டித்தனமான நாச வேலைகளில் ஈடுபடுவது சரிதானா? என்னையும் என் ரசிகர்களையும் கடுமையாக விமர்சித்தால் ரசிகர்களின் உணர்வுகளை மதித்து பா.ம.க., போட்டியிடும் ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கச் சொன்னேன். மதுரையில் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். 

அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல், இரண்டாவது வன்முறை. டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட்சஸ செயல்களிலும், அராஜகங்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாசை என்னுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக நான் எதிர்க்கவில்லை. இந்தத் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன். இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் இருப்பதால்தான் நல்லவர்களும் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர். நான் ஆன்மிகவாதி, எனக்கெதற்கு இந்தப் பழிவாங்கும் உணர்வு? என்று சிலர் கேட்கிறார்கள். நான் ஆன்மிகவாதிதான். ஆனால், ஒரு கன்னத்தில் அடித்தால், இன்னொரு கன்னத்தை காட்டும் அளவுக்கு ஆன்மிகத்தில் இன்னும் உயரவில்லை. அந்த மாதிரி ஆன்மிகவாதியாக ஆவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. 

அந்தத் தவறை ஆயிரம் முறை செய்வேன்: நான் ஒரு தப்பும் செய்யாமல் என்னை அடிப்பவரை நான் அடிப்பது தவறு என்று சொன்னால், அந்தத் தவறை நான் ஆயிரம் முறை செய்வேன். என்னை வாழ வைத்த ரசிகப் பெருமக்களே உங்க பலம் என்னவென்று டாக்டர் ராமதாசுக்குப் புரிய வைத்து விட்டீர்கள், போதும், இனிமேல் கறுப்புக் கொடி காட்டுவதோ, அவர் பேசும்போது கூச்சல் போடுவதோ, சுவரொட்டிகளை ஒட்டுவதோ வேண்டாம். ஜனநாயக ரீதியில் இனி ஓட்டுப் போடுவதில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள். இதையும் மீறி டாக்டர் ராமதாஸ் கட்சியினர் ஜெயித்தால் அது டாக்டர் ராமதாஸ் அவர்கள் செய்த பூர்வஜென்ம புண்ணியம், தோற்றால் அவர் செய்த பூர்வஜென்ம புண்ணியமெல்லாம் தீர்ந்து போச்சுன்னு அர்த்தம். அவர்கள் ஜெயித்தால் நாம் தோற்று விட்டோமென்று அர்த்தமில்லை. அவர்கள் தோற்றுவிட்டால் நாம் ஜெயித்து விட்டோம் என்று அர்த்தமில்லை. அநியாயமாக எங்களை எதிர்த்தவர்களுக்கு நியாயமாக எங்கள் எதிர்ப்பை காட்டி விட்டோம்.

டாக்டர் ராமதாஸ் அவர்களே, மதுரையில் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக அவர்களை நொறுக்கி விட்டீர்கள். நாளை வருங்காலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, லண்டன், கனடா, பாரீஸ் ஏன் ஜப்பானில் நீங்கள் சென்றால் கூட அங்கும் என் ரசிகர்கள் கறுப்புக் கொடி காட்டுவார்கள். என்ன செய்வீர்கள்? அங்கேயும் அடியாட்களைக் கூட்டிக்கிட்டு போய் அவங்களையெல்லாம் அடிச்சு நொறுக்குவீர்களா? வேண்டாம் இந்த வெறிச் செயல்கள். டாக்டர் ராமதாஸ் அவர்களே என்னுடைய நண்பர்கள் வீட்டில் (தி.மு.க. கூட்டணியில்) தஞ்சமடைந்து விட்டீர்கள். இதற்கு மேல் உங்களைப் பற்றி கூற என் மனம் இடம் கொடுக்கவில்லை.'' என அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினிகாந்த்.

அந்த அறிக்கையில் இன்னொரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார் ரஜினி. அது பி.ஜே.பி. ஆதரவு நிலை. ``இந்த நாடாளுமன்றத் தேர்தலில் (2004) என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும்.'' எனச் சொல்லி பி.ஜே.பி. ஆதரவு நிலைப்பாட்டை குறிப்பிட்டார் ரஜினி.

``என் அன்பார்ந்த தமிழ் மக்களே, இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்னை தண்ணீர் பிரச்னை. ஏழைகளிலிருந்து, பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக்கொண்டிருப்பது தண்ணீருக்காக. நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் இந்தக் கடுமையான பிரச்னை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்தை நீக்க இந்த ஒரே வழிதான். குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப் போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச்சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலெல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்து வரும் எந்த ஜீவநதியும் இல்லை. நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயமே. மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும். நான் இந்த ஒரு மாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களைச் சுற்றி வந்தேன். எனக்கு ஒன்று நேரிடையாக, தெளிவாகத் தெரிந்தது. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தக் கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்கப் போகிறதோ எனக்குத் தெரியாது. ஆனால், இந்த தேர்தலில் மத்தியில் அமரப் போவது வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசுதான். இது உறுதி.

என்னைப் பொறுத்தவரையில், இந்திய நாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர் பிரச்னைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ., அரசின் தேர்தல் அறிக்கையில் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் நிச்சயமாக இணைப்போம் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள். திரு.அத்வானி அவர்களே, அதை செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதை செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆக, இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி., கூட்டணிக்குத்தான் என் ஓட்டு.

தமிழக மக்களே, அன்பான ரசிகர்களே, மறுபடியும் சொல்கிறேன். இது எந்தக் கூட்டணிக்கும் என் ஆதரவு அல்ல. இது என் ஓட்டு மட்டும்தான். இதற்காக தமிழக மக்களையோ, என் ரசிகர்களையோ நான் ஓட்டுப் போடும் கூட்டணிக்குத்தான் ஓட்டுப் போட வேண்டும் என்று வற்புறுத்த மாட்டேன். நான் இந்தக் கூட்டணிக்கு ஓட்டுப் போடுவதாலே என் ரசிகர்களும், இந்தக் கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பல கட்சிகளில் இருக்கிறீர்கள். உங்களின் ஓட்டு உரிமையை நான் பறிக்க மாட்டேன். ஆனால், சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே, குறிப்பாக தாய்மார்களே, இளைஞர்களே, மாணவ, மாணவிகளே, படித்தவர்களே நீங்கள் ஓட்டுச் சாவடிக்கு ஓட்டுப் போட போகும்போது `நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்'னு ஓட்டுப் போட போறீங்களா, இல்லை `நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்'னு ஓட்டுப் போட போறீங்களா, இல்லை `தண்ணீ வேணும்'னு ஓட்டுப் போட போறீங்களா? என்று முடிவு பண்ணுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தியுங்கள், செயல்படுங்கள். வாழ்க தமிழக மக்கள்! வளர்க தமிழ்நாடு! நதிகள் இணையட்டும்! இந்தியா ஒளிரட்டும்! ஜெய்ஹிந்த்’’ என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

1999-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு ஐந்தாண்டுகள் முடிவதற்கு முன்பே 2004 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கொண்டது. அந்த ``வாஜ்பாய் அரசுக்குதான் என் ஓட்டு. அவர்கள்தான் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பார்கள்'' எனச் சொன்னார் ரஜினி. அவரின் கணிப்பு பொய்த்துப் போனது. 2004 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வென்று இந்தியாவில் ஆட்சி அமைத்தது. ரஜினி அன்று தோள்கொடுத்த பி.ஜே.பி-தான் 2014-ம் ஆண்டில் மத்தியில் ஆட்சியைப் பிடித்து இந்தியாவை தற்போது ஆண்டு கொண்டிருக்கிறது. காவிரி பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. ``காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் தமிழர் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்'' என இப்பொது ரஜினி எச்சரிக்கிறார். அதற்கு காரணம் என்ன?

தொடரும்... 

இந்தத் தொடரின் பிற பாகங்களைப் படிக்க, காவிரியும் ரஜினியும் க்ளிக் செய்க 



Trending Articles

Sponsored