``தவறான வழக்குகள் நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கின்றன!" - நீதிபதி லோயா வழக்கில் உச்ச நீதிமன்றம்



Sponsored



2002-ம் வருடம் நிகழ்ந்த குஜராத் பெருங்கலவரத்தின்மீது மேலும் மேலுமாக மரணங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. கலவரத்தின் ஓலம் ஓயாத அடுத்த வருடத்தில், குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கலவரத்தின் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிக்கொண்டிருந்த சூழலில், 2005-ல் குஜராத் காவல்துறையினரிடம் விசாரணைக் கைதியாக இருந்த சொராபுதீன் ஷேக் `போலி என்கவுன்டர்’ செய்து சுட்டுக் கொல்லப்பட்டார். சொராபுதீன் மற்றும் அவரின் நண்பர் துளசிராம் ஆகியோர், ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் தொடர்பிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். மேலும், சொராபுதீன்மீது குஜராத், ராஜஸ்தான் என இருவேறு மாநிலங்களில் கொலைக்குற்ற வழக்குகளும் இருந்தன. சொராபுதீனுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் தொடர்பு இருந்ததாகவும் மத்தியப்பிரதேசத்தில் அவர் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்பட்டது. சொராபுதீன் கொல்லப்பட்ட இரு தினங்களில், அவரின் மனைவி கௌசர் பீவியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த என்கவுன்டரை அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா திட்டமிட்டபடி அம்மாநில போலீஸார் செய்து முடித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வழக்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டிய சூழல் எழுந்த நிலையில், குஜராத்துக்கு வெளியே நீதி விசாரணை நடத்தப்பட்டது. 

மும்பை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த விசாரணையைத் தலைமையேற்று நடத்தியவர் நீதிபதி லோயா. 2014-ம் ஆண்டு நாக்பூரில் ஒரு நிகழ்வுக்குத் தன் சக வழக்கறிஞர் நண்பர்களுடன் சென்ற லோயா திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார் (இந்த மரணம் குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன). இதையடுத்து அந்த வருடமே வேறு ஒரு நீதிபதியின் தலைமையில் சொராபுதீன் வழக்கு விசாரிக்கப்பட்டு அமித்ஷா உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய நபர்கள் விடுவிக்கப்பட்டார்கள். கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் `தி கேரவன்’ இதழுக்கான பேட்டியில் பேசியிருந்த நீதிபதி லோயாவின் சகோதரி தன் சகோதரன் லோயாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார். அதற்கேற்ப லோயாவின் தந்தையும் மரணம் நிகழ்ந்த சூழல் குறித்தும் அவரது உடற்கூராய்வு செய்யப்பட்டதில் உள்ள சந்தேகம் குறித்தும் தெளிவாக எடுத்துக் கூறியிருந்தார். அமித்ஷா ஒருமுறைகூட நீதிவிசாரணைக்கு ஆஜராகாதது குறித்து தன் சகோதரர் தன்னிடம் அங்கலாய்த்ததை அந்தப் புலன் விசாரணைக் கட்டுரையில், லோயாவின் சகோதரி பதிவு செய்திருந்தார். இந்தச் சூழலில் லோயா மரணம் குறித்து தனி விசாரணை அமைக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. காங்கிரஸின் டெஹ்சின் பூனாவாலா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பி.எஸ்.லோனே உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இதற்கிடையே செல்லமேஸ்வர், ரஞ்சன் கொகாய் உள்ளடக்கிய உச்ச நீதிமன்றத்தின் நான்கு முக்கிய நீதிபதிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து `நாட்டின் நீதித்துறை மிகவும் அச்சுறுத்தலில் இருப்பதாகவும் லோயா மரணம் தொடர்பான விசாரணை தகுதியற்ற இளைய வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளைக் கொண்டு நடத்தப்படுவதாக'வும் குற்றம் சாட்டினார்கள். 

Sponsored


Sponsored


இந்த நிலையில், பொதுநல வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி கன்வில்கர் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு, ``லோயா மரணம் குறித்துத் தனியாக விசாரிக்க முடியாது” என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும், ``பொதுநலவழக்குகள் வறியவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டது. அதனை தங்களது ஆதாயத்துக்காக தற்போது தனிநபர்கள் கையில் எடுத்திருப்பது வருந்தத்தக்கது. இப்படியான தவறான வழக்குகள் நீதித்துறையின் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்வதால் மற்ற வழக்குகள் தாமதிக்கப்படுகின்றன. லோயா மரணம் குறித்து தனி விசாரணை கோருவதில் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் மட்டுமே உள்ளது” என்று குறிப்பிட்டிருக்கின்றனர். 

தீர்ப்பு வெளியானதை அடுத்து கருத்துக் கூறியுள்ள வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ``இது இந்திய நீதித்துறையில் கறுப்பு தினம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

லோயா மரணம் குறித்தான விசாரணைக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவந்த `தி கேரவன்’ இதழோ, ``உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறினாலும்,லோயா மரணம் தொடர்பாக நாங்கள் பிரசுரித்த 22 கட்டுரைகள் குறித்து எங்களுக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.

``ஆயிரம் மரணங்களின் மீதான மர்மத்தை மறைக்க ஒரு கொலை, அதனை மறைக்க மீண்டும் ஒரு கொலை அதன்மீது நிகழ்ந்த நீதிபதியின் மர்ம மரணம்.... தற்போது அதனையும் மறைப்பதற்கு நீதித்துறையே கொலை செய்யப்படுவதா?'' என்று பொதுநல வழக்கைத் தொடுத்தவர்கள் தரப்பிலிருந்து கேள்விகள் எழுகின்றன. பதில் கிடைக்குமா?



Trending Articles

Sponsored