கொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்!``ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அந்த நிறுவனம் வந்த புதிதில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. பெரிய பெரிய நகரங்களில் இருக்கக்கூடிய அளவுக்கு நமது ஊரும் மேன்மை அடையும், அனைத்து வசதிகளும் இந்தத் தொழிற்சாலையின் மூலமாகக் கிடைக்கும் என்று நம்பினோம். ஆனால், கிடைத்தது என்னவோ நோய்களும், உடல் ஊனங்களும்தான், நாங்கள் மட்டுமின்றி எங்கள் குழந்தைகளும் இதனால் காது கேட்காமல், கண் பார்வைக் குறைவோடு பிறக்கத் தொடங்கினர். காலம் கடந்த பிறகே புரிந்தது, இது நல்லதல்ல நஞ்சென்று."

இது கொடைக்கானல் யுனிலிவர் மெர்க்குரி தொழிற்சாலையில் பணிபுரிந்த முன்னால் ஊழியர் ஒருவரது கண்ணீரால் எழுதப்பட்டது.

Sponsored


Sponsored


Photo Courtesy: DMalhotra

Sponsored


தண்ணீரில் எழுதும் எழுத்துகளைப் போல் அல்ல கண்ணீரில் எழுதுவது. அது கல்வெட்டைவிட அழுத்தமானது. ஆழமான வலிகள் நிரம்பியது. அதை உதாசீனப்படுத்தியவர்கள் வரலாற்றில் கறுப்புப் புள்ளிகளால் காலத்துக்கும் சுட்டிக்காட்டப்படுவார்கள். அப்படி ஒரு வலி மிகுந்த எழுத்துகளால் கூறப்பட்ட அநீதியைக்  கொடைக்கானலுக்கு இழைத்த யுனிலீவர் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின்  வரலாறு இன்றும் நம் மனதை உருக்கிக்கொண்டிருக்கிறது.

இது நடந்து 36 வருடங்கள் இருக்கும். வளர்ந்த நாடுகளில் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றிய விழிப்பு உணர்வு வளர்ந்துகொண்டிருந்த தருணம் அது. அனைவரும் தத்தம் நிலத்தையும் வளத்தையும் காக்கவும், இதுவரை தங்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்த தொழிற்சாலை உற்பத்திகள் அதேபோல் குறைவின்றிக் கிடைத்து பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கவும் சில (சதி)திட்டங்களைத் தீட்டினர். அங்கே வேண்டாம் என்று நிறுத்தப்படும் அனைத்துத் தொழிற்சாலைகளையும் வளரும் நாடுகளுக்கு உதவி என்ற பெயரில் கொண்டுவருவது. வேலைவாய்ப்பு, மின், போக்குவரத்து, வெளிநாட்டுக் கடன்கள்  போன்ற வசதிகளின் மூலம் ஆசைகாட்டி அங்கே தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன. மக்களுக்குப் புதுவிடியல் அளிக்க வந்த விடிவெள்ளிகள் போல் தம்மைக் காட்டிக்கொண்டார்கள். அப்படி இந்தியாவுக்குள் வந்த ஒரு நிறுவனம் தான் சீஸ்போரோக்-பாண்ட்ஸ் என்ற நிறுவனம். இவர்களுக்குச் சொந்தமாக அமெரிக்காவில் மெர்க்குரித் தொழிற்சாலை இருந்தது. சுற்றுச்சுழலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அதை அங்கே தடைசெய்து விட்டனர். 1982-ம் ஆண்டு இந்தியா வந்தவர்கள் , யுனிலீவர் என்ற நிறுவனத்தின் உதவியை நாடினார்கள். யுனிலீவர் நிறுவனம் 1987-ம் ஆண்டு அதை வாங்கியதோடு கொடைக்கானலில் அவர்களது தொழிற்சாலையையும் தொடங்கினார்கள்.

ஏன் கொடைக்கானல்?

உலோகங்களில் திரவ வடிவத்தில் இருக்கக்கூடியது மெர்க்குரி மட்டுமே. அதைத் தொழிற்சாலையில் பயன்படுத்தும்போது உறையவைப்பதற்கு என்று குளிரூட்டப்படும் வசதிகள் வேண்டும். அதற்குப் பெருமளவில் பொருள்செலவுகள் ஆகும். கொடைக்கானல் இயற்கையாகவே குளிர்ப்பிரதேசம் என்பதால் அதற்கான செலவுகளைக் குறைக்கலாம். முதலில் ஊட்டியைத் தேர்வு செய்தவர்கள் அங்குத் தேயிலை விவசாயம் தடையாக இருக்கும் என்பதால் இங்கு வந்தவர்கள் சோலைக் காடுகளுக்கு நடுவே ஆக்கிரமித்துக்கொண்டனர். மலைப்பிரதேசங்களில் மிகக் குறைந்த சம்பளத்துக்கு வேலையாட்கள் கிடைப்பார்கள் என்பது மற்றுமொரு காரணம்.

அனைத்தும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சிறிது சிறிதாக அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களுக்கு உடல்நலத்தில் மாற்றங்கள் தெரியத் தொடங்கின. அமெரிக்காவில் இருந்து மெர்க்குரி இறக்குமதி மூலம் தெர்மாமீட்டர் போன்ற உபகரணங்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்துகொண்டிருந்த அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்களுக்குத் தொடர்ச்சியாக சிறுநீரகம், கல்லீரல் தொடர்பான நோய்கள் வரத்தொடங்கின. பலருக்கு மலட்டுத் தன்மையும் ஏற்பட்டிருந்தது. இந்தக் குறைபாடுகளுக்கு ஆட்பட்டு உயிர்ப்பலிகளும் நடக்கத்தொடங்கின. மெர்க்குரிக்கு எதிரான தமிழகக் கூட்டணி என்ற அமைப்பாகக் கூடிய சமூக ஆர்வலர்கள் அந்த ஆலை அதன் கழிவுகளைச் சரியான விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேற்றுவது இல்லை என்றும் அதனால் சூழல் சீர்கேடுகள் மற்றும் நீர் மாசுபாடுகள் ஏற்பட்டு அது மக்களின் உடல்நிலையைப் பாதிப்பதாகவும் பேசத்தொடங்கினார்கள். அப்பகுதியின் மிக முக்கியமான சோலைக் காடுகளுக்குள் அதன் கழிவுகள் குவிக்கப்படுவது பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கையின் மூலம் நிரூபிக்கப்பட்டு 2002-ம் ஆண்டு அந்த ஆலை முற்றிலுமாக மூடப்பட்டது.

யுனிலீவர் நிறுவனத்தால் குவிக்கப்பட்ட 290 டன் கழிவுகள் அவர்களாலேயே அகற்றப்பட வேண்டும் என்று 2003-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாகத் தீவிரமாகப் போராடிய மக்களின் அழுத்தம் காரணமாக யுனிலீவர் நிறுவனக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நிறுவனமும்  மேம்போக்காகச் சில கழிவுகளை அகற்றிவிட்டு கணக்கு காட்டியது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அவர்கள் குறைக்கவேண்டியதாகக் கூறிய மாசு அளவு, அவர்கள் உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். அவற்றைச் சுத்தம் செய்ய சர்வதேசத் தொழில்நுட்பங்கள் தேவை மற்றும் பெருமளவில் பொருள்செலவுகள் ஆகும். அதனால் யுனிலீவர் நிறுவனத்தின்  செலவைக் குறைப்பதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இப்படிச் செய்தது.

அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களுக்கும் அவர்களது சந்ததிக்கும் பெங்களூரைச் சேர்ந்த அமைப்பின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் தொடர்ச்சியாக இருந்த மெர்க்குரிக் கழிவுகளின் தாக்கம் அவர்களின் உடல்நிலையை தொடர்ச்சியாகப் பாதித்துக்கொண்டே இருந்தது தெரியவந்தது. ஆனால், நிறுவனமோ  அவர்கள் பணிபுரிந்த காலத்தில் இதுபோன்ற எந்தவிதக் குறைகளும் இல்லை என்று மருத்துவப் பரிசோதனை ஆய்வுகளை முன்வைத்தனர். இதனால் நிறுவனத்தின் முன்னால் ஊழியர்கள் உயர்நீதிமன்றத்தை நாடினர். இது தொடர்பாக ஒரு குழுவை நியமித்த நீதிமன்றம், இதை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னது. அந்த ஆய்வுக்குழு இப்போதைய உடல்நலக் குறைபாடுகளுக்கு அப்போதைய மெர்க்குரி ஆலைதான் காரணம் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது. ஒரு சிறப்புக் கமிட்டி அமைத்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நடத்திய ஆய்வில் முதல் தோற்றத்திலேயே தெரிகிற அளவுக்கு ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அந்த ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்குத் தொடர்ந்தது. 2011-ல் ஆய்வறிக்கை சமர்ப்பித்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் முடியவில்லை.

சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்தை இந்தியாவில் அதுவும் சூழலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் தொடங்க அனுமதி கொடுத்தது மட்டுமின்றி, இன்றளவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கம்பெனிக்குச் சாதகமான முடிவுகளையே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆலை மூடிப் பதினான்கு ஆண்டுகள் கடந்து இன்னும் நிலம், நீர், காற்று அனைத்திலும் கலந்துவிட்ட அந்த மெர்க்குரி ஆலையின் மாசுகளால் பாதிக்கப்படும் பாம்பர் சோலா, வெள்ளகவி, கும்பக்கரை போன்ற ஊர்மக்கள் இன்றளவும் இந்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகிக்கொண்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க வளரும் நாடுகளில் கார்ப்பரேட் பேராசைகளுக்குக் கொத்தாகப் பலியாகும் மக்கள் கூட்டத்தின் வரிசையில் இன்று கொடைக்கானல் வாசிகளும் நின்றுகொண்டு இருக்கிறார்கள். பிரச்னையின் சூட்டில் மக்களின் உணர்ச்சிகள் கொதிக்கும். அதன் சூடு தனியத் தனிய உணர்ச்சிகளும் தனிந்துவிடுகிறது. அதுவே பெருமுதலைகளின் பலமாக அமைந்துவிடுகிறது. அடுத்தவேளை உணவுக்கு ஓடும் மனிதனால் ஓரளவுதான் போராட முடியும். இதையே ஆயுதமாகக் கொண்டு அவர்களை அந்த நிலையிலேயே வைத்திருக்கும் தந்திரத்தைக் கையாண்டு மேன்மேலும் சுரண்டுகிறார்கள். அவர்களுக்கே அக்கறையில்லை என்று ஒதுங்குவதைவிட அவர்களுக்காக நாம் கேள்வி கேட்பதே மனிதாபிமானத்தின் அடிப்படை தர்மமாகும்.Trending Articles

Sponsored