“கருணாநிதி சொன்னால், அது அவர் கருத்து!” 'பரதமுனி' பற்றி பத்மா சுப்பிரமணியம்மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் பகுதியில் பரதமுனிக்கு கோயில் அமைத்திருக்கிறார் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம். அதன் திறப்புவிழாவை ரகசியமாக நடத்தி முடித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது.

Sponsored


கடந்த 2003 ம் ஆண்டு பரதமுனிக்கு கோயில் எழுப்ப இருப்பதாக ஜெயலலிதாவிடம் மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் என்ற கிராமத்தில் 5 ஏக்கர் நிலமும், 27 லட்சம் பணமும் பெற்றார் பத்மா சுப்பிரமணியம். தி.மு.க ஆட்சி அமைந்தபோது 2007ல் பரதமுனி கோயில் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பத்மா சுப்பிரமணியம் சார்பில் முதல்வரிடம் வாழ்த்து கேட்கப்பட்டிருந்தது. அப்போது கொதிப்படைந்த கருணாநிதி 'நீ தமிழன் தானே' என தன் உதவியாளரிடம் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, ‘பரதமுனிதான் பரதநாட்டியம் தொடங்கினார் என்றால் யார் நம்புவது? திராவிட இயக்கக் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை மெல்ல மெல்ல அழிக்கப்பார்க்கிறார்கள். அதுதான் அடிக்கல் நாட்டுவிழா அழைப்பு. அது அழைப்பு அல்ல. யாருக்கோ தேவையான பிழைப்பு. நம்மை தாழ்த்தும் அந்த நினைப்பை வேரறுக்க வேண்டும்’ என்றார். அதைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிற்கு கருணாநிதியின் வசனத்திற்கு நடனம் அமைத்துக் கொடுத்தார் பத்மா சுப்பிரமணியம். நிலத்தைப் பெறுவதற்காக பெயரை மாற்றிய பிறகு கனிமொழியின் சிபாரிசின் பேரில் 'பரதமுனி' ட்ரஸ்டை பரத-இளங்கோ என மாற்றினார். கலைஞர் கருணாநிதியே அதற்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், யாருக்கும் தெரியப்படுத்தாமல் வெள்ளிக்கிழமை மாலை ரகசியமாக 'பரதமுனி'யின் கோயில் திறப்பு விழாவை நடத்தி முடித்துவிட்டார் பத்மா சுப்பிரமணியம்.

Sponsored


Sponsored


இந்நிலையில் அந்த விழாவுக்கு சென்றோம். பரதநாட்டிய கலைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் குறைவானவர்களே விழாவில் கலந்து கொண்டனர். திறப்பு விழா முடிந்த நிலையில் பத்மா சுப்பிரமணியத்தை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டோம். ”இந்த கோயில் திறப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என ஆச்சர்யப்பட்டவர் சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினார்.

"பரத முனிக்கு கோயில் எழுப்பி இருக்கிறீர்கள்! 'பரதமுனி' யார்?"

மேடைக் கலைகளுக்கு ஆதி குரு. மேடைக்கலைகள் என்று சொன்னால் நாடகம், நடனம், இசை என எல்லாவற்றையும் பற்றி நூல்கள் இருக்கின்றன. அவைதான் ஆதிநூல். அவருடைய முகத்தை வைத்து தெற்காசியாவில் வழிபாடு செய்கிறார்கள். தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பல இடங்களில் நானே நேரில் பார்த்திருக்கிறேன்.

" 'பரதமுனி' என்ற ட்ரஸ்ட் பெயரை  பரத - இளங்கோ  என மாற்றினீர்கள். அப்படி என்ன பிரச்னை அதில் இருக்கிறது?"

ஒரு பிரச்னையும் கிடையாது. முன்னரே இதே 5 ஏக்கரில் ஆசிய கலைகள் பற்றிய ஒரு மியூசியம் செய்வதற்கான வேலைகள் தான் இங்கு நடந்துவருகிறது. பரதமுனிக்கு வியாழக்கிழமை தோறும் வழிபாடு நடத்துவார்கள். எந்த ஒரு அரங்கதிற்கு போனாலும் பிரம்மா, விஷ்ணு, சிவன், பரதர் இந்த நான்கு முகத்தையும் மாஸ்க்  வைத்து, அதன்பிறகுதான் ஆராதனையே செய்கிறார்கள். அதனால் பரதமுனியை நான் ஆசிய கலாசாரத்தின் மையமாக பார்க்கிறேன். ஆசிய கலாசாரம் என வரும்போது தமிழ் கலாசாரமும் சேர்ந்துதான் வருகிறது. ஆரம்பத்திலிருந்தே அழைப்பிதழ்களில் தெளிவாக குறிப்பிட்டு வருகிறோம். பரதர் பெயரில் மியூசியமும், அரங்கம் இளங்கோவடிகள் பெயரிலும் இருக்க வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டோம். அதுபோல் காஞ்சி மகாசுவாமி பெயரில் மூலவர், அபிநவ குப்தர் பெயரில் கருத்தரங்கம், தங்கும் இடத்திற்கு ஜப்பானில் 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாசிரியர் ஜியாமி பெயரிலும் அமைத்திருக்கிறோம். இவை அனைத்துமே ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டதுதான்.

"மோடியை வரவழைத்து திறக்க முயற்சி செய்து வந்ததாக சொல்லப்பட்டதே!?"

'திறக்கணும்னு நெனச்சப்ப திறந்துடணும்.' அதனால்தான் திறந்திருக்கிறோம். நாங்கள் மோடியை அழைக்கவும் இல்லை. அவர் வந்து திறக்க வேண்டும் என்ற எண்ணமும் எங்களுக்கு இருந்ததில்லை.

"அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த இடத்தை உங்களுக்கு கொடுத்தது யார்?"

ஜெயலலிதாதான் இந்த இடத்தை எங்களுக்குக் கொடுத்தார். கலைஞர் அதையே திரும்ப கொடுத்தார்.

"அரசாங்கம் கொடுத்த நிலம் என்பதால், அமைச்சர்களையாவது அழைத்திருக்கலாமே?"

கலைக்கும் அமைச்சர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. தேவையில்லாமல் அவர்களை எதற்கு அழைக்கணும். இங்கே கலைஞர்கள்தானே வந்தார்கள். பரத கலைக்கு 85 வயதான கலைஞர் ஒருவர் வந்து திறந்து வைத்தார். அவர் திறப்பதில் அர்த்தம் இருக்கிறது. புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஒரு சிற்பக்கூடத்தை திறந்து வைப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதனால் அவர்களை வைத்து ஏன் திறக்கவில்லை என கேட்கக் கூடாது. எல்லாவற்றிற்கும் மந்திரிதான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

"பரத முனி என ஒருவர் இல்லை என கருணாநிதி உங்களிடம் சொல்லி இருக்கிறாரே?"

அப்படி சொன்னால் அது அவருடைய கருத்து. அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. உங்களுக்கும் ஒரு கருத்து இருக்கலாம். அதுபோல் எனக்கும் ஒரு கருத்து இருக்கும்.

"பரத இளங்கோ என பெயர் மாற்றம் செய்தால்தான் நிலம் தருவதாக கலைஞர் உங்களிடம் கூறினாரா?"

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அவருக்கு இது புரியவில்லை. ட்ரஸ்ட் பெயரில் இளங்கோ கலந்திருப்பதே அவருக்கு தெரியாது. அவருக்கு ஏதோ தவறாகச் சொல்லி கொடுத்து இருக்கிறார்கள். பிறகு அவரே வருத்தப்பட்டார். ஒரு கலாசார நிகழ்வை அரசியலாக்கக் கூடாது என இரண்டு முதல்வரும் நினைத்திருக்கிறார்கள். அதனால்தான் எனக்கு எந்த சிக்கலும் இதுவரை இல்லை.

"ஆகம விதிப்படி பரதமுனி கோயில் எழுப்பியது தவறு என்ற கருத்து உள்ளதே?"

இது எனக்கு வேண்டாத வேலை. எனக்கு நிறைய வேலை இருக்கு. இதெல்லாம் ஒரு கருத்தரங்கத்தில் பேச வேண்டியது. அதனால் இதுபோன்ற கேள்வியெல்லாம் வேண்டாம். இதற்கு நான் பதில் சொல்லி மாளாது. எல்லா பொது ஜனங்களும் இதைப்பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. எது யாருக்கு தெரியுமோ அவர்கள் பேசட்டும். அப்படி தெரிந்தவர்கள் பேசினால் நான் கருத்தரங்கத்தில் பதில் சொல்வேன்.

"பரதம் தோன்றுவதற்கு முன் சதிராட்டம்தான் இருந்ததாக வரலாறு கூறுகிறதே!?"

(சற்று கோபமாகிறார்) இருக்கட்டுமே. ரொம்ப நல்லதுதான். நானும் இதைச் சொல்லி இருக்கிறேன். வேண்டும் என்றால் நாலுவருடம் என்னுடைய வகுப்பிற்கு நீங்கள் வாருங்கள். நான் சொல்லித்தருகிறேன்.  

"அரசாங்கம் கொடுத்த இடத்தைத் தவிர்த்து, கிராம களத்துமேடு பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்ததாக ஒரு புகார் இருக்கிறதே?"

எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நான் ரொம்ப சௌக்யமாக இருக்கிறேன். பரதரும் சௌக்யமாக இருக்கிறார். பஞ்சாயத்தில் இருந்து வந்து எனக்கு மரியாதை செய்தார்கள் பார்த்தீர்களா? பிரச்னைகளை மையப்படுத்தி எழுதுவது உங்கள் சுதந்திரம். ஆனால் எனக்கு எந்த பிரச்னையும் கிடையாது. யாரோ சொல்லியதை கேட்டு நீங்க வந்து என்னை பார்தீங்க ரொம்ப நன்றி. இன்னும் இங்கே நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கும். நான் உங்களுக்கு அழைப்பிதழை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் தொடர்ந்து வரவேண்டும்.Trending Articles

Sponsored