'சூப்பர் மார்கெட்... சூப்பர் விளம்பரம்..!’ பிளாஸ்டிக் பைகள் உலகம் முழுக்க பரவிய வரலாறுமூச்சு இறைக்க இறைக்க எவரெஸ்ட் மலையின்மீது ஏறினால் அங்கேயும் பிளாஸ்டிக் கிடைக்கும். ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக் கொண்டு கடலின் ஆழ்கடல் ஆழத்திற்குச் சென்றால் அங்கேயும் பிளாஸ்டிக் இருக்கும். பனி உறைந்த அண்டார்டிக் பகுதிகளுக்குச் சென்று பார்த்தாலும் அங்கேயும் ஒரு பிளாஸ்டிக் இருக்கும். அந்த அளவுக்கு பிளாஸ்டிக்கின் ராஜ்ஜியம் உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறது. இன்றைய சூழலுக்கு மிகப்பெரிய கேடுகளை விளைவிக்கும் வரிசையில் முதலிடம் பிளாஸ்டிக்குகளுக்குத்தான். இதனை அழிப்பது பற்றிய ஆராய்ச்சிகள் உலகளவில் நடந்து கொண்டிருக்கின்றன. உலகில் அனைத்திற்கும் ஒரு வரலாறு இருப்பதுபோல் பிளாஸ்டிக்கிற்கும் ஒரு வரலாறு உண்டு.  

Sponsored


Photo by Wikipedia

Sponsored


பார்க்க அரிதான தோற்றம் கொண்ட பைகள் 1970-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில்தான் அறிமுகமாகின்றன. பார்க்கப் புதிதாகவும், பளபளப்பான தோற்றத்திலும் இருக்கும் பிளாஸ்டிக் பைகளின் மோகம் மக்களிடையே அதிகரிக்கிறது. அதற்கு ஏற்றார்போல் சந்தையிலும் அவற்றின் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. அதன் பின்னர் மக்கள் அன்றாடம் தாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருட்களையும் எடுத்துச் செல்ல பயன்படுத்துகின்றனர். அப்போது ஆரம்பித்த பாலித்தீன் பைகளின் பெருக்கம் இப்போது உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு 1 டிரில்லியன் என்ற அளவில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.  

Sponsored


Photo by Flickr

 1933-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள நார்விச்சில் ஒரு வேதியியல் ஆலையில் ஆராய்ச்சி செய்யும்போது, பாலிஎத்திலீன் என்ற பொருள் உருவானது. இதுதான் பிளாஸ்டிக் பொருளுக்கான முதல் அச்சாரம். அந்த ஆராய்ச்சி உண்மையில் வேறு பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டதுதான். அப்போது கிடைத்த பாலிஎத்திலீனைக் கொண்டு சிறிய வடிவில் பாக்கெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் நடைமுறைக்கு அப்போது கொண்டு வரப்படவில்லை. அதேசமயம் அப்பொருட்கள் இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் ராணுவத்தால் இரகசியமாகப் பயன்படுத்தப்படுகிறது.  

1965-ம் வருடம் ஒரு பாலித்தீன் பை சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தால் காப்புரிமை கோரப்படுகிறது. அதனைப் பொறியாளர் ஸ்டென் குஸ்டாஃப் துலின் என்பவர் வடிவமைத்தார். அதற்கான காப்புரிமை பெறப்பட்டு ஐரோப்பிய மக்கள் அனைவரும் துணிப் பைகளுக்கு பதிலாக புதிய பாலித்தீன் பைகளைப் பயன்படுத்த ஆரம்பிக்கின்றனர். இது மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தப் போகிறது என்பது அப்போது பயன்படுத்திய மக்களுக்குத் தெரியாது.  

Photo by Creative Commons

1979-ம் ஆண்டு ஐரோப்பாவின் 80 சதவிகித சந்தையை பிளாஸ்டிக் பைகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அதன் பின்னர் பல நாடுகளுக்கும் சென்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் நிறுவனங்களும் தங்கள் பிளாஸ்டிக் பைகளின் தயாரிப்புகள், மறு சுழற்சி செய்யக்கூடிய காகித தயாரிப்புகளை விட மேலானது, அதிக எடையைத் தாங்கக்கூடியது என்றெல்லாம் பரப்புரைகளை மேற்கொள்கின்றன.  

1982-ம் ஆண்டில் அமெரிக்காவின் சேப்வே மற்றும் க்ரோஜெர் என்ற மிகப்பெரிய சூப்பர் மார்கெட்டுகள் முழுவதிலும் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகள் விநியோகிக்கப்படுகிறது. இதனால் மற்ற கடைகளும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்து உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும் பயன்படுத்திக் கொண்டன. 

1997-ம் ஆண்டில் மாலுமியும், ஆராய்ச்சியாளருமான சார்லஸ் மூர் பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய குப்பை குவியலைக் கண்டறிந்தார். அக்கடலில் உள்ள கடல் ஆமைகள், ஜெல்லி மீன்கள் என நினைத்து பிளாஸ்டிக்குகளை உண்டு அதிக அளவில் உயிரிழந்து வருகின்றன என்பதையும் அவர் தெரிவித்தார். மேலும், இவை கடல் உயிரினங்களின் வாழ்விற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை விளைவிப்பதாகவும் கூறினார்.  

2002-ம் ஆண்டு வங்காள தேசத்தில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அப்போது சாக்கடைக் குழாய்களையும், வெள்ள வடிகால்களையும் பிளாஸ்டிக் பைகள் அடைத்துக் கொண்டு மிகப்பெரிய சேதத்தை விளைவித்தது. அதனால் வங்கதேசம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்தது. மெலிதான பிளாஸ்டிக் பைகள் அனைத்திற்கும் தடைவிதிப்பதாக அறிவித்தது. உலகில் பாலித்தீன் பைகளுக்கு முதன்முதலில் தடைவிதித்த நாடு வங்கதேசம்தான். இதேபோல 2017-ல் கென்யாவிலும் பாலித்தீன் பைகள் தடைசெய்யப்பட்டன. 

2011-ம் ஆண்டு உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிய வந்தது. 2018-ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினவிழாவின் கருப்பொருளே 'பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் குறைக்க வேண்டும்' என்பதுதான். இவ்விழாவில் உலக நாடுகள் மற்றும் மிகப்பெரிய நிறுவனங்கள் ஆகியவை பிளாஸ்டிக் கழிவுகளை சமாளிக்க புதிய உறுதிமொழிகளையும், செயல்திட்டங்களையும் அறிவிக்க இருக்கின்றன. Trending Articles

Sponsored