''நீங்க சொன்னதும் கை, கால உடைச்சுக்கிட்டேனே சார்..!" காஞ்சி போலீஸ் - ரவுடி தியாகு கூட்டணி.. அதிர்ச்சி ஆடியோ #VikatanExclusive



சில ரவுடிகளுக்கு, போலீஸாரே மறைமுகமாக உதவிசெய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு சொல்லப்படும் வேளையில், காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர் தற்கொலைக்குப் பிறகு, ரவுடி தியாகுவும் ஒருசில போலீஸாரும் பேசிக்கொள்ளும் ஆடியோ, போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

காஞ்சிபுரம் ரவுடிகளில் டாப் லிஸ்ட்டில் இருப்பவர், பொய்யாக்குளம் தியாகு. ஸ்ரீதர் தற்கொலைக்குப் பிறகு, அவர் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தார் தியாகு. இதனால் பட்டு ஜவுளி வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் என எல்லோரையும் போனில் மிரட்டிவந்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருசிலர் மட்டுமே புகார் கொடுக்க, கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்றார். போலீஸ் துணையுடனே மீண்டும் ஜாமீனில் வெளியேவந்த தியாகு, கடந்த ஆறு மாதமாக தலைமறைவாக இருந்துகொண்டு எல்லோரையும்  மிரட்டிவந்தார். தியாகுவுக்குப் பயந்து சிலர் தலைமறைவானார்கள். சிலர், செல்போன் எண்ணை மாற்றிக்கொண்டார்கள். கடந்த சில தினங்களுக்கு முன், பணம் கொடுக்காத ஜவுளிக்கடை அதிபர் ஒருவரின் கடையில் வேலைசெய்பவர்களை, ஆட்களை அனுப்பி அரிவாளால் வெட்ட, காஞ்சிபுரமே பதறிப்போனது. இவ்வளவு கொடூரங்கள் அரங்கேறியும் தியாகுவைக் காவல் துறையினரால் பிடிக்க முடியவில்லை.

Sponsored


Sponsored


காஞ்சிபுரம் வட்டாரத்தில் உள்ளவர்களோ, “எஸ்.பி-யின் ஸ்பெஷல் டீமில் உள்ள பெரும்பாலானோரும், காஞ்சிபுரம் சரக காவல் துறையினரும் தியாகுவுக்கு நெருக்கமாக இருப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். ரவுடிகளுக்குப் பிரச்னை ஏற்படும்போது, உடலில் காயம் ஏற்படுத்திக்கொள்ள அறிவுறுத்துவது, ஜாமீன் எடுக்க உதவுவது, வீட்டுக்கே சென்று பார்ப்பது என ரவுடிகளுக்கும் காஞ்சிபுரம் காவல் துறையினருக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருந்துவருகிறது. இந்த நிலையில், எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி ரவுடிகளைப் பிடிக்கத் தீவிரமாக இருக்கிறார். ஆனால், பெரும்பாலான காவல் துறையினர் தியாகு போன்ற ரவுடிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதால், குற்றவாளிகளைப் பிடிக்க முடிவதில்லை. எஸ்.பி.,சந்தோஷ் ஹதிமானி மீட்டிங்கில் சொல்வதை ரவுடியின் வீட்டுக்குச் சென்று, அதை அப்படியே ஒப்பித்துவிடுகிறார்கள். ஸ்பெஷல் டீமில் உள்ள பெரும்பாலானோருக்கு ரவுடிகளின் நடமாட்டம் நன்கு தெரியும். ஆனால், பிடித்துக் கொடுத்துவிட்டால் மாமூல் வராது என்பதால், அவர்களைத் தப்பவைப்பதில் குறியாக இருக்கின்றனர். 'புகார் கொடுக்க மக்கள் முன்வர வேண்டும்' என எஸ்.பி சொல்கிறார். ஆனால், எஸ்.பி-க்குப் புகார் கொடுத்த சில நிமிடங்களிலேயே தியாகுவுக்குத் தகவல் சென்றுவிடுகிறது. இப்படியிருக்க, நாங்கள் யாரை நம்பி புகார் கொடுக்க முடியும்” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Sponsored


எஸ்.பி அதிரடியால் ஸ்பெஷல் டீமில் உள்ளவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது, என்கவுன்டர் வரை செல்லலாம் என்பதால், காவல்துறை நண்பர்கள் சிலர் அறிவுறுத்தலின்பேரில், கடந்த வெள்ளிக்கிழமை கோர்ட்டில் சரண்டர் ஆனார், ரவுடி தியாகு. தியாகுவைப்போல வசூல் ராஜா, தினேஷ் உள்ளிட்ட ரவுடிகளும் கோர்ட்டில் சரண்டர் ஆகும் முடிவில் இருக்கிறார்கள். இந்த நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி., ஸ்பெஷல் டீமில் உள்ள காவல் ஆய்வாளர் மணிமாறன், ஏட்டு சீனுவாசன் ஆகியோர் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்றைத் தியாகுவுக்கு நெருக்கமான ஒருவர் நமது அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தார்.

இந்த ஆடியோ, காவல் துறையினருக்கும் ரவுடிகளுக்கும் உள்ள நெருக்கத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக நமக்கு வந்த அந்த ஆடியோவில், 

தியாகு: ''நேத்து, தம்பி ஒருத்தர புடிச்சி வந்தீங்களே... அவனுக்குக் கையகால ஒடச்சீங்களாண்ணே..?''

சீனுவாசன்: ''லாடம் கட்டுணதைப் பார்த்தேன். அப்புறம் சிட்டியில குண்டாஸ் போடச்சொல்லி அனுப்பிட்டாங்க.''

தியாகு: ''தம்பியயெல்லாம் கால ஒடிச்சி அனுப்பறீங்க… அவங்கள ஒடிக்காம அனுப்புறாங்களேண்ணா?''

சீனுவாசன்: ''குண்டாஸ் போடறாங்க. அதனால் எதுவும் பண்ணலை.''

தியாகு: ''என்னப்பத்தி ஏதாவது சொன்னானாண்ணா அவன்?''

சீனுவாசன்: ''தினேஷ் (ஸ்ரீதர் கூட்டாளி) கூடச் சேர்ந்துகொண்டுதான் உன்னை விட்டுட்டாங்க…'' எனச் சொல்லும்போதே சட்டென, ''நீ எங்கயும் வாயை விடாத. அவ்வளவுதான் சொல்லுவேன்.''

தியாகு: ''நான் ஏன் வெளியே சொல்லப்போறேன்? உண்மையிலேயே சொன்னானாண்ணே அவன்?''

சீனுவாசன்: ''டேய் எனக்கே தெரிஞ்சுதான் அங்க உட்கார்ந்திருந்தேன்.''

தியாகு: ''கரெக்ட்டுண்ணா… கரெக்ட்டுண்ணா… சென்னை ஜெயில்தானே போறாப்ல. அங்க பார்த்துக்கலாம்ணே… ஒண்ணும் பிரச்னை இல்லே.''

சீனுவாசன்: ''பத்திரமா பார்த்துக்கங்க. நீ எதுவும் சொல்லிக்காத… ஏன்னா, நான்தான் சொன்னேனு க்ளீனா தெரிஞ்சுடும்.''

தியாகு: ''நான் தம்பிய பார்த்துக்குறேன்.''

சீனுவாசன்: ''அண்ணன் வர்றார்டா… பாடி வருதுடா…'' (ஸ்ரீதர் உடல் கொண்டு வரப்படும்போது)

தியாகு: ''எப்பண்ணே வருது பாடி?''

சீனுவாசன்: ''அண்ணன் செம போதையில இருக்கிறேன்.''

தியாகு: ''அண்ணா… அண்ணா... தம்பிக்கு எப்படியாது நாலஞ்சு போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் அனுப்பிவிடுண்ணா…''

சீனுவாசன்: ''சரி… சரி… இன்ஸ்பெக்டர் மணிமாறன்கிட்ட பேசுறியா?''

தியாகு: ''வணக்கம் சார்.''

மணிமாறன்: ''தியாகு நல்லா இருக்கியா… ஆபரேஷன் முடிஞ்சுதாப்பா?''

தியாகு: ''நாளைக்கு பண்ணிடுவாங்க சார். மூணு ஆபரேஷன்றதால கொஞ்சம் டிலே ஆகுது.''

மணிமாறன்: ''பெயில் ஆயிடுச்சா, இல்லையா…''

தியாகு: ''இல்ல சார். போட்டா, கேன்சல் பண்ணிடறாங்க சார்.''

மணிமாறன்: ''ஏன் கேன்சல் பண்றாங்க? நீ பெயில் போடுறேனு என்கிட்ட சொல்லவே இல்லையே!''

தியாகு: ''நான் சொல்லிட்டேன் சார்… நேத்து 3.30 மணிக்கு பிரபாகரன் இன்ஸ்பெக்டர் போன் பண்ணாரு சார். நீ ஆபரேஷன்லாம் பண்ணிக்காத… ஹாஸ்பிட்டலை விட்டுப்போ'னு போன் பண்ணி மிரட்டுறாரு சார். நான் நீங்கனு நெனச்சு,‘சார் நான் உங்கிட்டதான் சொன்னனே சார்… திருந்தி ஒழுங்கா இருக்குறேன். காலை ஒடிச்சுக்கணே'னு சொன்னேன். அப்புறந்தான் நீங்க இல்லனு தெரியும். அப்புறம் நான், மணிமாறன் இன்ஸ்பெக்டரைத் தவிர யாருகிட்டேயும் பேசமாட்டேனு சொல்லிட்டேன். இப்படி அவர் மிரட்டுறார் சார்.''

மணிமாறன்: ''சரி, நீ எதுவும் தேவையில்லாம வார்த்தைய விடாதே. அவரும் ஒரு இன்ஸ்பெக்டர்.''

தியாகு: ''நான் எதுவும் சொல்லலை சார். நான் உங்க பேச்சைக் கேட்குறேன் சார். நீங்க சொன்னீங்கனு கையையும் ஒடச்சிக்கினேன். காலையும் ஒடச்சிக்கினேன் சார்!''

மணிமாறன்: ''நாளைக்கு உன் ஃப்ரெண்டு ஸ்ரீதர் இருந்தானே… அவன் வேலையாத்தான் ஏர்போர்ட்டுக்கு டீமோட போயிட்டு இருக்கேன். அந்த வேலையை முடிச்சுட்டு உன்னை நேரா வந்து பார்க்குறேன்.''

தியாகு: ''அய்யோ, ஏன் சார்?''

மணிமாறன்: ''வார்த்தைகளை மட்டும் போலீஸிடம் விட்டுடாதே. ஒருத்தன் வார்த்தைகளையும் விட்டுடாதே. ஒருத்தன் (ஸ்ரீதர்) போலீஸ்கிட்ட வார்த்தைகளைவிட்ட ஒரே காரணத்தால, அவன் எவ்வளவு பெரிய கோடீஸ்வரனா இருந்தாலும் அவன் நிலைமை என்னனு தெரிஞ்சுக்க?''

தியாகு: ''சரிங்க சார்…''

மணிமாறன்: ''தீபாவளி முடிஞ்சுவந்து, நேராவந்து டீமோட பார்க்குறேன்.''

இவ்வாறு அந்த ஆடியோ முடிகிறது...

இதுதொடர்பாக, அந்த ஆடியோவை நமக்கு அனுப்பிவைத்தவரிடம் பேசினோம். ''ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டபோது பேசிய ஆடியோவைத்தான் வெளியிட்டிருக்கிறேன். தியாகு சில தினங்களுக்கு முன் பேசிய பல ஆடியோக்கள் இன்னும் இருக்கின்றன. அதில் ஒரு ஆடியோவில், 'போலீஸ்தான் என்னை மிரட்டிப் பணம் வாங்கச் சொல்றாங்க. ஸ்பெஷல் டீமில் உள்ள எல்லோருக்கும் நான் பணம் கொடுக்கிறேன்.

எல்லோரும் என்னிடம் பணம் வாங்குகிறார்கள். ஸ்பெஷல் டீமிடம் சொல்லித்தான் போன வாரம் வாலாஜாபாத் கம்பெனிக்காரனிடம் ஐந்து லட்சம் வாங்குனேன். நீங்க எங்க வேணும்னாலும் போங்க. நீ எங்க போனாலும் எல்லோருமே என்னோட லிங்க்ல இருக்குறாங்க. நானே எல்லாத்தையும் கொண்டுபோய்ச் சேர்த்து வெச்சிக்கலை. அந்த ‘…………’ பசங்களுக்கும்தான் பணத்தைக் கொடுக்கிறேன். நான் சரண்டர் ஆனா, என்னைக் கஸ்டடியில எடுத்தா போலீஸுக்குப் பணம் கொடுக்கணும்' என அந்த ஆடியோவில் தியாகு ஒருவரை மிரட்டுவது பதிவாகி இருக்கிறது. இந்த ஆடியோவை வெளியிட்டால், காவல் துறைக்குதான் அசிங்கம் ஏற்படும்” என்றார்.

போலீஸிடம் தியாகு பேரம் பேசியது உள்ளிட்ட பல ஆடியோக்கள் இன்னும் இருக்கின்றன. விரைவில் அவையும் வெளியாகலாம். இந்த ஆடியோவை காஞ்சிபுரம் எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானிக்கு அனுப்பிவைத்தோம். விசாரணை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

மேற்கண்ட விவரங்களை சொல்லி சீனுவாசனிடம் பேசினோம். “என்னன்னு தெரியலீங்களே சார் எனக்கு” என்றார். பிறகு அந்த ஆடியோவை அவருக்கு அனுப்பி வைத்தோம். அதைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு போன் செய்தோம். ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. சிறிது நேரம் கழித்து போன் செய்தோம். அவர் போனை எடுக்கவே இல்லை.

அதைத்தொடர்ந்து வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம் பேசினோம். “அப்படியா எனக்கு தெரியலியே.. நான் ஒரு முறை அவனை பிடிச்சிருக்கேன். அவங்க அம்மா வந்து வழக்கறிஞரோட என்னை பார்த்திருக்காங்க. நான் பேசுவதற்கு சாத்தியமே கிடையாது. அவன் ஒரு பொறுக்கி பையன்… அவன்லாம் ஒரு ஆளு… சரியா தெரியல… வேணும்னா என்னுடைய பர்சனல் நம்பருக்கு அதை அனுப்புங்க.”  என்றார். அவருக்கும் வாட்ஸ்அப்பில் ஆடியோவை அனுப்பி வைத்தோம். மீண்டும் அவருக்கு போன் செய்தோம். ரிங் அடித்துக் கொண்டே இருந்தது. எந்த பதிலும் இல்லை.

இது தொடர்பாக அவர்கள் மேலதிக விளக்கங்கள்  தர விரும்பினால் அதனை பரிசீலைனைக்குப் பிறகு பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.



Trending Articles

Sponsored