``இதைவிட மட்டமான பதில் வேறு எதுவும் இல்லை" காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கு குறித்து தலைவர்கள்!



Sponsored



`பிரதமர், அமைச்சர்கள் கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், வரைவுத் திட்டத்துக்கான ஒப்புதலைப் பெறமுடியவில்லை' என்று    காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில் மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. மத்திய அரசின் இந்தப் பதில் தமிழக அரசியல் களத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007ல் 192 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்குமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பில் உத்தரவிட்டது. நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீரின் அளவை 192 டி.எம்.சி-யிலிருந்து 177.25 டி.எம்.சி-யாகக் குறைத்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பு விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தீர்ப்பு குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இதனைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் அமர்வு `காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஆறு வார காலத்துக்குள் காவிரி நதிநீர்ப் பங்கீடு செயல் திட்டத்தை (ஸ்கீம்) வகுக்குமாறு' மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. 

Sponsored


நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மதிக்காமல், கள்ள மவுனம் சாதித்து வரும் மத்திய அரசு, இந்த விவகாரத்தில் திட்டம் (Scheme) என்ற வார்த்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நழுவி வருகிறது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கொடுத்த கால அவகாசமும் முடிந்துவிட்டது. மத்திய அரசின் இந்த மெத்தன நடவடிக்கையால் கொதித்துப்போன தமிழக மக்கள் மீண்டும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Sponsored


இப்படியான நிலையில்தான் காவிரி நீர்ப் பங்கீட்டு விவகாரம் தொடர்பான வழக்கில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது ``காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான வரைவுத் திட்டம் தயாராகி விட்டது. ஆனால், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் ஒப்புதல் பெறமுடியவில்லை. எனவே, ஒப்புதல் பெற இரண்டு வார கால அவகாசம் தேவையாகிறது'' என அனுமதி கோரியது மத்திய அரசு. `இதனைக் கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்கை மே 8 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 மத்திய அரசின் இந்த பதில் தமிழக அரசியல்

களத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவனிடம் பேசியபோது, ``மத்திய அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிற செயல். இப்படியான மட்டமான பதிலாக வேறு எதுவும் நீதிமன்றத்தில் இருந்திருக்காது. உச்சநீதிமன்றம் ஆறு வார கால அவகாசம் கொடுத்திருந்தது. மேலும் அதிகாரிகள்தாம் இதற்கான வரைவு திட்டத்தை தயார் செய்யப்போகிறார்கள். அப்படி தயார் செய்யப்பட்ட கோப்புகளில் கையெழுத்திடவேண்டிய வேலை மட்டுமே முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு உள்ளது. அதனைப் போய் நீதிமன்றத்தில் காரணமாகக் கூறியிருப்பது இந்த அரசின் மீதான நம்பகத் தன்மை எத்தகையது என்பது தெரியவந்துள்ளது. மேலும் கர்நாடகத்தில் வைத்தே இந்த வரைவுத் திட்டத்துக்குப் பிரதமரும், அமைச்சரும் ஒப்புதல் அளித்திருக்கலாம். எனவே, மத்திய அரசின் இந்தக் காரணம் ஏற்புடையது அல்ல. இது தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கிற செயல்"என்றார்  

மத்திய அரசின் இந்த பதில் குறித்துப் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அரச்சலூர் செல்வம் ``கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இப்படி ஒரு பதிலை மத்திய அரசு கூறியிருப்பது வெட்கக் கேடானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்பதை மறந்துவிட்டு பி.ஜே.பி நிர்வாகிகளாக இப்படியான பதிலைக் கூற உத்தரவிட்டுள்ளனர். அந்த அடிப்படையில் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார். இந்த நடவடிக்கையைப் பார்க்கும் போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பது தெரிகிறது. மக்களின் பிரச்னைகளைவிட தேர்தலை முக்கியமானதாகக் கருதும் இந்த ஆட்சியாளர்கள் எங்களுக்குத் தேவையில்லை. மேலும் மத்திய அரசு சார்பில் வைக்கப்படும் இந்த வாதங்களையும் ஏற்றுக்கொண்டு அதற்கு வாய்தா வழங்கும் நீதிபதிகள் இருக்கும் வரை, தமிழக மக்களுக்கு நீதி கிடைக்காது" என்றார் .



Trending Articles

Sponsored