ஜின்னா புகைப்படம் விவகாரம்... பற்றி எரியும் அலிகார் பல்கலைக் கழகம்... போலீஸ் தடியடி !



Pic Courtesy : ANI

Sponsored


த்தரப்பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில், கலவரம் வெடித்துள்ளது. பாகிஸ்தானைக் கட்டமைத்த முகமது அலி ஜின்னாவின் புகைப்படத்தை அகற்றக்கோரி இரு தரப்பினருக்கு இடையே மோதல் நடந்துள்ளது. இந்த மோதலைக் கட்டுப்படுத்த போலீஸார் லத்திச் சார்ஜ் செய்ததில் 28 மாணவர்கள் பலத்தக் காயமடைந்துள்ளனர். மேலும் அங்கு பதற்றம் நீடிப்பதால் பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர் . 

Sponsored


உத்தரப்பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகம் 'அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம். `இது 1875 ம் ஆண்டு முகமது ஆங்கிலோ-ஓரியன்டல் கல்லூரி என்ற பெயரில் நிறுவப்பட்டது. அதன் பின்னர் `அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Sponsored


இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக இருந்த அமித் அன்சாரி, இந்தப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.பெரும் தலைவர்களையும், திறமையான கல்வியாளர்களையும் உருவாக்கிய இந்தப் பல்கலைக்கழகத்தில்தான் தற்போது மிகப்பெரிய அளவிலான மோதல் வெடித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை அன்று பி.ஜே.பி நாடாளுமன்ற உறுப்பினர் சதீஷ் கவுதம், பல்கலைக்கழகத் துணைவேந்தர் தாரிக் மன்சூருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், `பாகிஸ்தானைக் கட்டமைத்த முகமது அலி ஜின்னாவின் படத்தைக் கல்லூரி மாணவர் சங்கத்திலிருந்து அகற்றவேண்டும்' என்று கோரியுள்ளார்.

இதற்குப் பல்கலைக் கழகம் தயக்கம் காட்டியதாகத் தெரிகிறது. ஆனால், அந்தப் பல்கலைக் கழகத்தில் உள்ள வலதுசாரி மாணவப் பிரிவினர் ஜின்னாவின் படத்தை அகற்ற வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளனர். அப்போது மற்றொரு மாணவர் பிரிவினர் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருதரப்பு மாணவர்களும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தின்போது இரு தரப்பு மாணவர்களுக்கிடையே மோதல் வெடித்தது. இந்தத் தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனாலும் இருதரப்பு மாணவர்களும் கலைந்து செல்லாத நிலையில், போலீஸார் திடீரென அவர்கள் மீது லத்திச் சார்ஜ் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 28 பேர் பலத்தக் காயமடைந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

 இந்தச் சம்பவம் குறித்து அலிகார் பல்கலைக் கழகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷபீ கிட்வாய் பேசுகையில், ``இந்தப் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் ஜின்னா ஆவார். மாணவர் சங்க உறுப்பினராகப் பொறுப்பேற்ற ஜின்னா, இந்தச் சங்கம் மேம்படுவதற்கு காரணமாகவும் இருந்தவர். மாணவர் சங்க உறுப்பினர்களாக இருக்கக் கூடியவர்களின் புகைப்படங்களை இங்கே வைப்பதற்கு பாரம்பர்ய உரிமை உள்ளது. அப்படி இருக்கும்போது அரசியல், மத காரணங்களைவைத்து ஜின்னாவின் புகைப்படத்தை மாநிலஅரசாங்கம் அகற்ற நடவடிக்கை எடுத்திருப்பது தவறு. இந்த நிலையில்தான் வலதுசாரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மற்றொரு தரப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, மாநில அரசாங்கம் புகைப்படம் அகற்றும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்" என்று தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். 

இதற்கிடையில் பல்கலைக்கழக மாணவர் சங்கக் கட்டடத்திலிருந்து முகமது அலி ஜின்னாவின் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதிகாரபூர்வமான தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்தநிலையில், வன்முறைச் சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர்,``இந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியும். இந்த விவகாரம் குறித்து மாநில அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது'' என்று கூறியிருக்கிறார்.

 அதேபோன்று துணைமுதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியாவும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ``ஜின்னா இந்த தேசத்தின் விரோதி. ஒரு போதும் இந்திய மக்களின் இதயங்களில் அவர் நிலை பெற முடியாது" என்று கூறியுள்ளார். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் ஒருவர் பேசுகையில், ``ஜின்னா எங்களுடைய இதயத்தில் இருக்கிறார். அவருடைய புகைப்படத்தை அகற்றுவதால் அவருடைய புகழ் மறைந்துவிடாது' 'என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து அலிகார் பல்கலைக்கழகத்தில் பதற்றம் நீடிப்பதால், ஏராளமான போலீஸார் அங்கே பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசும் இப்பிரச்னையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 



Trending Articles

Sponsored