கர்நாடகத் தேர்தல்: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் பங்கு என்ன?



Sponsored



ர்நாடகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் என்பது நாளை பிற்பகலில் தெரிந்து விடும். அந்த மாநிலத்தில் 222 தொகுதிகளுக்குக் கடந்த சனிக்கிழமை நடந்த தேர்தலில் சுமார் 72 சதவிகித வாக்குகள் பதிவாகின. 

கர்நாடகத்தைப் பொறுத்தவரை, ஆளும் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி(ஜே.டி.எஸ்), புதிய அரசு அமைவதில் முக்கியப் பங்காற்றும் என்று பரவலான கருத்துக் கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sponsored


காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பிடித்துத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் அந்தக் கட்சிக்குக் கிடைக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பி.ஜே.பி-க்கும் ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது என்றும், பி.ஜே.பி - ஜே.டி.(எஸ்) கட்சிகள், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கும் என்றும் வேறுசில தகவல்கள் கூறுகின்றன.

Sponsored


என்றாலும் ``காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியமைக்கும்" என்று சித்தராமையா உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதேபோல் கர்நாடகத்தில் பி.ஜே.பி. தனித்து ஆட்சியைப் பிடிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா, முதல்வர் பதவிக்கான வேட்பாளர் எடியூரப்பா உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர். மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்தே ஆட்சியமைக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர்களும் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்கள்.

``மக்களின் முடிவு என்னவாக இருக்கும்?" என்பது பற்றி வாக்களித்து விட்டு வெளியே வந்தவர்களிடம் பல்வேறு அமைப்புகளும், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் கருத்துகளைக் கேட்டு, அவற்றின் முடிவுகளை வெளியிட்டன. 

ஓரிரு கணிப்புகள், பி.ஜே.பி. அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும், வேறு சில கணிப்புகள் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பிடிக்கும் என்றும் தெரிவித்தன. ஜே.டி (எஸ்) கட்சிக்குச் சொல்லி வைத்தாற்போல், அனைத்துக் கணிப்புகளுமே 30-40 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால், புதிய அரசு அமைவதில் ஜே.டி (எஸ்) குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளன. எனினும், அந்தக் கூட்டணி ஆட்சி அப்போது இரண்டாண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னர், குமாரசாமி தலைமையில் கட்சி பிளவுபட்டு, பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்தது.

கர்நாடகத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி.-யைச் சேர்ந்த எடியூரப்பா தலைமையில் ஏற்கெனவே கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எடியூரப்பா பதவி விலகியதால், சதானந்த கவுடா, அவரைத் தொடர்ந்து ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் பி.ஜே.பி. சார்பில் முதல்வராக இருந்துள்ளனர். 2013- ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, தற்போதுவரை சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து வருகிறார்.

தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகளைப் பொறுத்து சித்தராமையாவே மீண்டும் முதல்வர் பதவியேற்பாரா அல்லது வேறு யாராவது முதல்வராவார்களா என்பது நாளை தெரிந்து விடும்.

கர்நாடகத்தில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பற்றி அரசியல் பார்வையாளர்கள் சிலர் கூறுகையில், ``இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் என்பது அந்தந்த நிறுவனங்களின் பார்வையைப் பொறுத்து வேறுபடும். தவிர, கருத்துக் கணிப்புகள் என்பது, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளின் முடிவுகளையும் எதிரொலிப்பதாக அமைவதில்லை. அதன் காரணமாகவே, பல நேரங்களில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகிப் போய் விடுவதுண்டு.  

தொகுதி மக்களிடையே கட்சிகளுக்கு உள்ள நற்பெயர், வேட்பாளர்களுக்குத் தொகுதிகளில் உள்ள செல்வாக்கு போன்ற பல காரணிகளைத் தாண்டி, குறிப்பிட்ட கட்சிகளுக்கான அலை, ஆளும் கட்சிக்கு எதிரான அல்லது ஆதரவான நிலை போன்றவை வாக்குப்பதிவில் எதிரொலிக்கும். அதன் காரணமாகவே கருத்துக் கணிப்புகள் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருந்தாலும், ஓரிரு கணிப்புகள் மட்டுமே சரியானதாக அமையும்" என்றனர். கர்நாடக மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை தொடங்குகிறது. பிற்பகல் அல்லது மாலைக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்புகளையும் தாண்டி, கர்நாடகத் தேர்தலில் வெற்றிவாகை சூடப்போவது யார் என்பது இன்னும் 24 மணி நேரத்திற்குள் தெரிந்து விடும்.



Trending Articles

Sponsored