``குழந்தைகள்னா அம்மாவுக்கு அவ்ளோ பிடிக்கும்!" - குழந்தை கடத்தியதாகக் கொல்லப்பட்ட ருக்மணியின் மகன் #VikatanExclusiveSponsored``குழந்தைங்கனா எங்க அம்மாவுக்கு அவ்ளோ ஆசை. அதுதான் எங்க அம்மா உயிரையே பறிச்சுடுச்சு'' என வெடிக்கிறார் ருக்மணியின்  மகன் கோபிநாத். ருக்மணியை இழந்து வாடும் அவருடைய மகன் கோபிநாத்தை பல்லாவரத்தில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். மிகுந்த வேதனையில் இருந்தவர் சில மணி நேரத்துக்குப் பிறகு பேச முன்வந்தார், ``எங்க குழந்தைங்ககிட்ட ரொம்ப அன்பா இருப்பாங்க. எங்க அண்ணன் பிரபாகரனுக்கு ஒரு குழந்தை. எனக்கு இரண்டு குழந்தைங்க. அவங்க மூணு பேரும் எங்க அம்மா கூடதான் இருப்பாங்க. அவங்களைப்போய் குழந்தை கடத்த வந்தவங்கனு அடிச்சு கொன்னுருக்காங்களே பாவிங்க. எங்க அம்மா அப்படியான ஆள் கிடையாது. எங்க அம்மாவைக் கொன்னவங்கள சும்மாவிட மாட்டேன். சட்டரீதியாக அவங்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்காம ஓயமாட்டோம். என் தங்கையின் கணவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். எங்களுடைய ஒட்டுமொத்தக் கவனமும் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பதைத் தவிர, வேறு எதுவும் இல்லை. எங்க அம்மாவை அடிக்கும்போது அதை தடுக்கப்போய்தான் என் தங்கையின் கணவர் தாக்குதலுக்கு உள்ளானார். இந்தக் கொடூரத்தை நிகழ்த்தினவங்களுக்கு இந்த அரசாங்கம் என்ன தண்டனை கொடுக்குதுனு பார்க்கிறேன்" என அழுதார்.

இதைத்தொடர்ந்து ருக்மணியின் மருமகள் மகாலட்சுமியிடம் பேசியபோது, ``எங்க  மாமியார் ரொம்ப அன்பானவங்க. நான் அவங்ககிட்ட சண்டை போட்டாகூட... என்னை ஒரு வார்த்தை சொல்லமாட்டங்க" என அழுதார். அருகில் இருந்த கடைக்காரர் ஒருவரிடம் பேசியபோது, ``அவங்க தப்பே பண்ணியிருந்தாலும் அவங்கள அடிக்கும் அதிகாரம் இந்த மனிதர்களுக்கு இல்லை. ரொம்ப தப்பு. வயதானவங்கனுகூட பாக்காம அடிச்சே கொன்னுட்டாங்க" என்றார்.

Sponsored


Sponsored


 திருவண்ணாமலை அருகே உள்ள அத்திமூர் கிராமத்தில் குலதெய்வம் கோயிலுக்குச் சென்ற ருக்மணியைக் குழந்தை கடத்த வந்தவர் என அடித்தே கொன்றுள்ளனர். வடமாவட்டங்களில் குழந்தைக் கடத்தல் கும்பல் ஊடுருவி இருப்பதாகப் பரவிய வாட்ஸ்அப் வதந்தியால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டவர், திருநங்கை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

 கடந்த ஒரு மாதமாக நடந்துவந்த இந்தச் 'சைலன்ட் கில்லிங்' ருக்மணி மரணத்தின் மூலம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் ருக்மணி. இவர், கடந்த 9-ம் தேதி மலேசியாவைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் மருமகன் கஜேந்திரனுடன் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகேயுள்ள அத்திமூர் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு வழிபடச் சென்றுள்ளார். அப்போது வழியில், குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் வழி கேட்டுள்ளார். பின்னர், மலேஷியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சாக்லேட்டை எடுத்து அந்தக் குழந்தைக்குக் கொடுத்துள்ளார் ருக்மணி. உடனே அந்தப் பெண்மணி, `குழந்தை கடத்த வந்தவர்கள்' எனச் சந்தேகப்பட்டு கத்தியுள்ளார்.

இதையடுத்து ருக்மணியுடன் காரில் இருந்த ஐந்து பேர்மீதும் கிராம மக்கள் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். மிகக் கொடூரமான தாக்குதலில் ருக்மணி என்ற அந்தப் பெண்மணி உயிரிழந்தார். அவருடைய மரணம்தான் இன்று மனித மனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தூக்குத்தண்டனை கைதிக்குக்கூட பேசுவதற்கு உரிமை இருக்கும்போது எந்தத் தவறும் செய்யாத அந்தப் பெண்மணியின் கதறலைக் கேட்கவிடாமல் செய்தது எது?  

வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் வருகிற ஆதாரபூர்வமற்ற செய்திகளையும் எளிதில் நம்பிவிடும் மக்களின் மனோபாவம்தான் இத்தகைய கொடூரத்தின் அடிப்படையாக அமைந்திருக்கிறது. பகுத்தறிந்து சிந்திக்கும் திறன் குறைந்துபோன இம்மக்களின் காதுகளுக்கு ருக்மணியின் கதறல் கேட்காமல் போனதில் ஆச்சர்யமில்லை!

இப்படியான இன்னொரு சம்பவம் பழவேற்காட்டில் நடந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபரை அப்பகுதி மக்கள் அடித்தே கொன்றுள்ளனர். பின்னர், அந்த உடலை அங்குள்ள மேம்பாலத்தில் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, வேலூர் அருகே திருநங்கை ஒருவருடைய ஆடைகளைக் கிழித்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர், அறிமுகம் இல்லாத நபர் என இவர்களைக் கண்டாலே தாக்குதல் நடத்துகிறார்கள். ஒருபக்கம் சமூக வலைதளங்களால் உருவான விளைவு. மற்றொருபுறம் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அனைவருமே விளிம்புநிலை மக்கள். இவர்களை அடித்தால் திருப்பி அடிக்க முடியாத நிலையே. கேட்கவும் யாரும் வரமாட்டார்கள் என்பதே இப்படியான சைலன்ட் கில்லிங் தொடரக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இப்படிப்பட்ட மனநிலை ஏற்படக் காரணம் என்ன என மனநல மருத்துவர் ரங்கராஜனிடம் பேசினோம்...

``அடிப்படையில் இந்த மாதிரியான நடவடிக்கைக்குக் காரணம் `பயம்.’ தன் நிலையில் இருந்து வித்தியாசமான நபரைப் பார்த்தால் பயம் வரும். தெளிவாகச் சொன்னால் இடதுகை ஆசாமிகள் அனைவரும் அமானுஷ்ய சக்தி படைத்தவர்கள் என்ற ஒரு தோற்றம் இங்கே

கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பிம்பம்தான் இடது கைப்பழக்கம் உள்ள அனைவருமே அமானுஷ்ய சக்தி படைத்தவர்கள் என்று நம்புகிறோம். அப்படியான மனநிலை இந்த மக்களிடம் ஏற்பட்டதன் விளைவுதான் இவ்வாறான தாக்குதல் நடக்கக் காரணம். வடமாநிலத்திலிருந்து வந்த ஒருவர் குழந்தையைக் கடத்திவிட்டார் என்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும், அப்படியான கண்ணோட்டத்தில் பார்க்கும் மனநிலை. முஸ்லிம் தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்திவிட்டார்கள் என்று செய்தி வருகிறது. அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து விமான நிலையத்துக்கு வரும் ஒட்டுமொத்த முஸ்லிம் பயணிகளையும் தீவிரமாகச் சோதனையிடுகிற மனநிலை. ஒரு முஸ்லிம் தவறு செய்கிறான் என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்துவது நியாயமா. அப்படியான மனநிலை சிக்கல்தான் இங்குள்ள மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

`குழந்தை கடத்தல்காரன்’ என்று கத்திக்கொண்டு ஒருவரை நான்கு பேர் தாக்குகிறார்கள். அந்த இடத்தில்

மற்றொரு நாலுபேர் சேர்கிறார்கள். இவர்கள் கேட்கிற ஒற்றைக் கேள்விக்கு `இவன் குழந்தை கடத்தல்காரன்' என்று பதில் வருகிறது. அப்போது நான்கு பேரின் வாக்கின் மீது நம்பிக்கை வைத்து எந்த விசாரணையும் இல்லாமல் அனைவரும் சேர்ந்துகொண்டு தாக்குதல் நடத்தும் மனநிலை. இந்த நாலு பேர் 40 பேராகச் சேரும்போதுதான் அதை `மாப் பிஹேவியர்' என்று சொல்கிறோம்'' என்றார். 

 உளவியல் சிக்கல் இப்படியென்றால், இந்தத் தாக்குதல் குறித்து மனித உரிமை ஆர்வலர் மார்க்ஸ் பேசுகையில்,

``மக்கள் மத்தியில் அறக் கண்ணோட்டம் குறைந்து வருவதுதான் இப்படியான பிரச்னைகள் ஏற்படக் காரணம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைப் பார்த்துப் பயப்படுகிற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. மனிதனுக்கு மிகவும் அடிப்படை நம்பிக்கை. அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது; சிதைக்கப்படுகிறது. தன்னையும் தன் குடும்பத்தையும் தவிர்த்து மற்ற அனைவரையும் எதிரியாகப் பார்க்கிற மனநிலை மிகவும் ஆபத்தான ஒன்று. இப்படியான மனித உரிமை மீறல்களை சமூக அக்கறை உள்ளவர்கள் ஆராய்ந்து தீர்வு சொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது" என்றார்.

சக மனிதன் பேசுவதைக்கூட கேட்கக் கூடாத மனநிலை வந்துள்ளதே இந்த ஆபத்தை நாம் எப்படி சரி செய்யப்போகிறோம்? Trending Articles

Sponsored