எடியூரப்பா அரசு தப்புமா? வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப உத்தரவு!



Sponsored



Pic Courtesy : ANI 

ர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா பதவியில் நீடிப்பாரா என்பது அம்மாநில சட்டசபையில் இன்று மாலை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தெரிந்து விடும். கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக எண்ணிக்கையில் (104 எம்.எல்.ஏ-க்கள்) உறுப்பினர்களைப் பெற்ற பி.ஜே.பி. ஆட்சியமைத்தது. முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்றார். 

Sponsored


பி.ஜே.பி-க்கு 104 சட்டமன்ற உறுப்பினர்களே இருக்கும் நிலையில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள 111 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், ஹெச்.டி. குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர்கள் சிலர், பி.ஜே.பி-க்கு ஆதரவளிக்கக் கூடும் என்று பரவலாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. என்றாலும், தங்கள் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டுக்கோப்பாக உள்ளதாகவும், பி.ஜே.பி-யை அவர்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Sponsored


இந்நிலையில், பெங்களுருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தைத் தொடர்ந்து, எடியூரப்பா உள்ளிட்ட அனைவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்றனர். 

காங்கிரஸ் - ஜே.டி (எஸ்) கூட்டணி தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பதாலும், அதிக இடங்களைப் பிடித்த கட்சி பி.ஜே.பி. என்பதாலும், எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் ருதாபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து, எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.   

எடியூரப்பா பதவியேற்றதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், அவர் சட்டசபையில் இன்று மாலை 4 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர் போபையாவை தற்காலிக சபாநாயகராக நியமித்து ஆளுநர் உத்தவிட்டுள்ளார். ஆனால், போபையா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தால் அவர் கண்டனத்துக்குள்ளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. போபையா நியமனத்தை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் நியமனத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே சமயம், நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சியில் நேரலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற இடங்கள் - 222 
தற்காலிக சபாநாயரான போபையா வாக்களிக்க முடியாது. எனவே, வாக்களிக்கத் தகுதிபெற்றவர்கள் 221. 
பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான உறுப்பினர்கள்: 111. 
பி.ஜே.பி. சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை - 104. 
காங்கிரஸ் - ஜே.டி (எஸ்). கூட்டணி-இதர உறுப்பினர்கள் - 118.  

எடியூரப்பாவின் பதவி தப்புமா? அங்கு பி.ஜே.பி. அரசு நீடிக்குமா என்பது மாலை 4 மணிக்குப் பின்னர் தெரிந்துவிடும். ஒருவேளை எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடையும்பட்சத்தில் காங்கிரஸ் - ஜே.டி(எஸ்) கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார்.  அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எடியூரப்பா அரசு தப்புவதற்கு இன்னும் 7 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே தேவை என்பதால், கட்சி மாறி சிலர் வாக்களித்தாலோ, வேறுசிலர் அவைக்கு வராமல் புறக்கணித்தாலோ சபையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்படும்.

எப்படி இருப்பினும், தற்காலிக சபாநாயகர் போபையாவின் முடிவே இறுதியானதாகக் கருதப்படும். எடியூரப்பாவின் எதிர்காலம் இன்று மாலைக்குள் தெரிந்து விடும்... அதுவரை காத்திருப்போம்...!



Trending Articles

Sponsored