"தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட ஆபரேஷன்" - விதிமுறை மீறல்களை விளக்கும் மனித உரிமை ஆர்வலர்!



Sponsored



லங்கையில் சிங்கள ராணுவத்துக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரின்போது ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட சமயத்தில், தமிழ்நாட்டு மக்களிடையே ஓர் அசாதாரண சூழல் நிலவியது. அதேபோன்றதொரு பதற்றமான மனநிலைக்குத் தமிழக மக்களை தற்போதைய ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டுள்ளதாகக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஒருசில நிகழ்வுகளில், போலீஸாரே வாகனங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், போராடிக்கொண்டிருந்த மக்களை குறிபார்த்துச் சுடுவதுமான கொடூரக் காட்சிகளைப் பார்க்கும்போது, போலீஸாரின் செயல்கள் சிங்கள ராணுவத்தினரை நினைவுப்படுத்துவதாகக் கூறுகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வெளிப்படையாகவே மனித உரிமை மீறல்கள் நடைபெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக மனித உரிமை ஆர்வலரும், போராட்டக் குழுவின் வழக்கறிஞருமான ஹென்றி திபேனை தொடர்பு கொண்டு பேசினோம்.

Sponsored


``தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீது நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் போலீஸார் முற்றிலுமாக விதிமுறைகளை மீறியிருப்பது அம்பலமாகியுள்ளது. மக்கள் போராட்டம் நடைபெறும் அசாதாரண சூழலின்போதும், பதற்றமான சூழ்நிலை நிலவும்போதும், எந்த மாதிரியான விதிமுறைகளை போலீஸார் கையாள வேண்டும் என்பது பற்றி சட்டத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகள் என்பது குறிப்பிட்ட ஒரு மாநிலத்துக்கு மட்டுமானது அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொதுவானது. 

Sponsored


தூத்துக்குடியில் போலீஸார் எப்படி விதிமுறைகளை மீறினார்கள் என்பது குறித்துத் தெளிவாகச் சொல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, அமைதியான முறையில் ஒன்றுகூடுதல், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் (Peaceful assembling and unlawful assembling) என்பது குறித்து அந்த விதிமுறைகளில் சொல்லப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்று, தாக்குதலுக்கு உள்ளான மக்கள், `சட்டவிரோதமாக ஒன்று கூடுதல்' என்ற விதிமுறைக்குள் வரவே இல்லை. காரணம், சம்பவம் நடந்த தினத்தன்று இரண்டு பகுதிகளில் மட்டுமே 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. தூத்துக்குடி தெற்கு மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்லை  பகுதியில்தான் தடை உத்தரவு போடப்பட்டிருந்தது. அப்படி இருக்கும்போது `போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால், அவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினோம்' என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? அமைதியான முறையில் ஒன்று கூடுதல் என்ற விதிமுறையின்கீழ் மக்கள் இருக்கும்போது, அவர்கள் மீது போலீஸார் எப்படித் தடியடி நடத்த முடியும்?

அப்படியே அவர்கள் `சட்டவிரோதமாக ஒன்று கூடினார்கள்' என்ற வரையறைக்குள் வருகிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும்,

அதுகுறித்த தகவலை அந்த மக்களிடம் மாவட்ட நிர்வாகமோ, போலீஸாரோ தெரிவித்திருக்க வேண்டும் அல்லவா, ஏன் தெரிவிக்கவில்லை... அப்படி எச்சரிக்கை விடுத்த பின்னரும், மக்கள் தடையை மீறி ஒன்றுகூடியிருப்பார்கள் எனில், மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தாசில்தார் உத்தரவுக்குப் பின்னரே போலீஸார் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும். அதுபோன்று சட்டரீதியான அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும் அதற்கும் விதிமுறைகள் உள்ளன. 

கூட்டத்தினர் கலைந்துசெல்ல ஏதுவாக, கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசியிருக்க வேண்டும். அப்படியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை என்றால், அவர்கள்மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்திருக்க வேண்டும். அதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகும் மக்கள் கலைந்து செல்லவில்லை என்றால்தான், முதலில் லேசான தடியடி நடத்தலாம். சட்டத்தில் லேசான தடியடி என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு என்பது மக்களைப் பயமுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டியதே தவிர உயிரைப் பறிப்பதற்காக அல்ல என்பதே விதிமுறை. எனவே, போலீஸாரின் இத்தகைய நடவடிக்கையைப் பார்க்கும்போது கூட்டத்தைக் கலைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தெரியவில்லை. நீண்ட நாள்களாக அந்த மக்கள்மீது இருந்த கோபத்தின் வெளிப்பாடாகவே அவர்களின் துப்பாக்கிச் சூடு சம்பவம் தெரிகிறது. காரணம் பல நாள்கள் போராட்டத்தைக் கைவிடக் கோரியும், அந்த மக்கள் அதைத் தொடர்ந்து கொண்டிருந்ததால், எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது. போராட்டம் தொடங்கப்பட்டு நூறாவது நாளில் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டுகிறார்கள். இதைப்பார்த்த ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்து காட்டிவிட்டார்கள். அவர்களுடைய திட்டம் வெற்றி பெற்றுவிட்டது. அரசாங்கம் சொல்வது போன்று மக்கள் வன்முறையில் ஈடுபட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாகி விட்டது என்பதெல்லாம் கபட நாடகம். இனி இதுபோன்று போராட்டம் நடத்தினால், இதுபோன்ற கதிதான் அனைவருக்கும் ஏற்படும் என்பதை உணர்த்த அரசாங்கம் மேற்கொண்ட ஆபரேஷன். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் காத்திருந்த அரசாங்கம், தற்போது வஞ்சம் தீர்த்துள்ளது. உண்மையிலேயே தவறுதலாக நடந்திருந்தால், முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்திருப்பார்களே! ஆனால், இந்த மாநிலத்தை நிர்வகிக்கக் கூடியவர்கள் மக்கள் முன்பு வரத் தயங்குகிறார்கள். இதைவிட அவமானம் அவர்களுக்கு வேறில்லை. இந்த விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக மனித உரிமை மீறல் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரும் ஆதரவாக நிற்க வேண்டும்" என்றார்.



Trending Articles

Sponsored