80 ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் விலை... வருமானம் பார்ப்பது யார்? #VikatanInfographics



வ்வொரு நாளும் விலை உயர்ந்துகொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை தமிழக மக்களை வாகனம் ஓட்டும் எண்ணத்தைக் கைவிடச் செய்யும்போல் இருக்கிறது. பைசாக்கள் அளவில் ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்ததால், அதைப்பற்றி மக்கள் பெரிய அளவில் கவனம்கொள்ளவில்லை. அதேவேளையில், கடந்த வருடம் ஜூன் மாதத்திலிருந்து இப்போதுவரை விலை உயர்வை ஒப்பிட்டுப் பார்க்கும்போது விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது.

Sponsored


15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டுக் கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வை, ஆயில் நிறுவனங்களே நிர்ணயிக்கலாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், ஜூன் 16, 2017 முதல் பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து, பெட்ரோல் - டீசல் விலை தினசரி ஒரு பைசா, இரண்டு பைசா என அதிகரித்து இன்று 80 ரூபாயைத் தாண்டி நிற்கிறது. இந்தப் பெட்ரோல், டீசல் விலையில் யாருக்கு என்ன லாபம் கிடைக்கிறது என்று பார்த்தால், நமக்குக் கிடைக்கும் தகவல்கள் ஆச்சர்யமளிக்கக்கூடியதாய் இருக்கின்றன.

Sponsored


இந்த விஷயத்தில் அதிகம் லாபம் பார்க்கும் அமைப்புகளாக இருப்பது மத்திய, மாநில அரசுகள்தாம். அதிலும், விலை உயர்வால் மாநில அரசுக்கு வரும் வருமானம் என்பது அதிக அளவில் இருக்கும் என்கிறது பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கும் தகவல்கள். ``சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ராக்கெட் வேகத்தில் கூடினால் மட்டுமே அரசுக்கு வரும் வருமானம் என்பது குறையும்; சர்வதேச சந்தை நிலையாக உள்ளபோது அரசின் வருமானம் என்பது அதிகமாகத்தான் இருக்கும்'' என்கிறார்கள், அவர்கள்.

Sponsored


2018 ஜனவரி 1- ம் தேதியின்படி பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் அரசுக்கு அதிகளவில் வருமானம் கிடைத்துள்ளது. இந்த 5 மாத காலத்தில் 16 முதல் 21 சதவிகிதம் மதிப்புக்கூட்டு வரி மூலமாக வருமானம் அதிகரித்துள்ளது. இதனடிப்படையில் பார்த்தால், மாநிலங்களுக்குக் கிடைக்கும் வருவாய் என்பது கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தாவின் விலை உயர்வுதான் பிரதானமாகப் பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கும் நிலையில், இந்த மாநிலங்களின் வரி வருமானம் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தின் மூலம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

டெல்லி - 1.2 கோடி ரூபாய்

மஹாராஷ்டிரா - 7.1 கோடி ரூபாய்

மேற்கு வங்காளம் - 2.4 கோடி ரூபாய்

தமிழ்நாடு - 9.4 கோடி ரூபாய்

இந்தப் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலம் வரும் வரி வருவாயில் அதிக வருமானம் ஈட்டும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது என்று கூறுகின்றன புள்ளிவிவரங்கள். 

எப்படி மாறியிருக்கிறது விலை?

தினசரி விலை நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னால் ஜனவரி 2017-இல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 70.07 ரூபாயாக இருந்தது. அடுத்த ஆறு மாதங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 0.14 பைசா குறைந்து, ஜூன் 1, 2017 அன்று 69.93 ரூபாயாக இருந்தது.

ஜூன் 16, 2017 தினசரி விலை நிர்ணயிக்கப்பட்ட நாளன்று, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 68.02 ரூபாய். ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் 5.87 ரூபாய் அதிகரித்து ஜனவரி 16, 2018 அன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 73.89 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது மே 31, 2018 என்று ஓராண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், 13.33 ரூபாய் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் டீசல் விலை 15.71 ரூபாய் அதிகரித்துள்ளது. 

ஆறு மாதங்களுக்கு முன்பு பைசாக்களில் அதிகரித்த விலை, இப்போது 6 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரிக்கிறது. ஆனால், இதே சமயத்தில் சர்வதேச சந்தைகளில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு எவ்வளவு?

சென்னையில் விற்கப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் யாருக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்று பார்த்தால், மொத்த விலையில் அரசுக்கு மதிப்புக்கூட்டு வரி மூலம் மட்டும் 21.3 சதவிகிதமும், கலால் வரி மூலம் 25.9 சதவிகிதமும் வருமானம் கிடைக்கிறது. 

``இதைவைத்துப் பார்க்கும்போது இனி வருங்காலங்களில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு `ஓவர் டைம்' பார்க்க வேண்டிய சூழ்நிலை கட்டாயம் வர வாய்ப்புள்ளது'' என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். இதுகுறித்து மேலும் அவர்கள், ``சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அரசு வரியைக் குறைக்காமல் வைத்திருந்தது. இதனால்தான் சர்வதேச சந்தைகளில் குறைந்த விலையின் பயனை மக்களால் பெற முடியாமல் போனது. இதுதான் பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கவும் காரணமாகியுள்ளது. இப்படியே போனால், பெட்ரோல், டீசல் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் காரணத்தினால் பொருள்களின் விலையேற்றமும் நிச்சயம் மக்களை வெகுவாகப் பாதிக்கும். கர்நாடகத் தேர்தல் சமயத்தில் 19 நாள்கள் விலையேற்றாமல் இருந்த அரசால், விலையைக் குறைக்கவும் முடியும் என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை. பொருளாதாரரீதியாக வளர்ந்துவிட்டோம் என்று மத்திய, மாநில அரசுகள் வீண்பெருமை பேசாமல் பெட்ரோல் டீசல் விலையைக் குறைத்தால் மக்கள் நிம்மதியடைவார்கள்'' என்கின்றனர், பொருளாதார வல்லுநர்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும். 



Trending Articles

Sponsored