``அறவழிப் போராட்டக்காரர்களுக்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம் என்றால், குறி பார்த்து சுட்டவர்களுக்கு?" - மக்கள் அதிகாரம்Sponsoredதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள்மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தமிழக அரசியலையே அதிரவைத்தது. இதில், 13 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவிவந்தது. அதன் ஒரு பகுதியாகப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை பொதுச்சொத்துக்குச் சேதம் விளைவித்ததாகக் கூறி பலரையும் போலீஸார் கைதுசெய்தனர். இதில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரைக் கடந்த மாதம் 25- ம் தேதி போலீஸார் கைதுசெய்தனர். 

இந்த நிலையில், ``எந்தக் காரணமும் சொல்லாமல் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேரைப் போலீஸார் பிடித்துச் சென்றுள்ளனர். அந்த ஆறுபேரும் கைதுசெய்யப்பட்டு 48 மணிநேரம் ஆகியும் அவர்களுடைய நிலை குறித்து எந்தத் தகவலையும் அவர்களுடைய குடும்பத்தாருக்கோ அல்லது அந்த அமைப்புக்கோ போலீஸார் இதுவரை தெரிவிக்கவில்லை'' என்று குற்றஞ்சாட்டியிருந்த மக்கள் அதிகார அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, அந்த ஆறு பேரையும் மீட்க ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தார். இதையடுத்து, உடனடியாகக் கைதுசெய்யப்பட்ட அந்த ஆறு பேரையும் போலீஸார் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள பேரூராட்சி ஜெயிலில் அடைத்தனர். 

Sponsored


இந்த நிலையில் அந்த ஆறு பேர்மீது இன்று தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜுவிடம் பேசினோம். ``ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தமிழக அரசு பொய்யான வழக்குகளை எங்களுடைய அமைப்பைச் சேர்ந்த தோழர்கள்மீது பதிவு செய்துள்ளது. உசிலம்பட்டியைச் சேர்ந்த கோட்டையன், கோவில்பட்டியைச் சேர்ந்த சரவணன், ஆலங்குளத்தைச் சேர்ந்த முருகன், திருநெல்வேலியைச் சேர்ந்த கலில் ரஹ்மான், முகமது அனஸ், முகமது இர்ஷத் ஆகிய ஆறு பேர் மீதும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அந்த ஆறு பேரும் ஜாமீனில் வந்துவிடுவார்கள் என்பதால், அவசர அவசரமாக இந்தச் சட்டத்தை அவர்கள்மீது அரசு ஏவியுள்ளது.

Sponsored


இந்த ஆறு பேரில் முகமது அனஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்; மற்றவர்கள் தொழிலாளர்கள். இவர்கள் வன்முறையில் ஈடுபடுவார்களா? ஆனால், இவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகப் பொய்யாக வழக்குப்பதிவு செய்திருந்தது. அதுகுறித்து ஏற்கெனவே அரசிடம் ஆதாரத்தைக் கேட்டிருந்தோம். இந்த நிலையில்தான் இவர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. இப்படிக் கடுமையான சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு இவர்கள் என்ன தவறு செய்தார்கள்? அதற்கான உண்மையான விளக்கத்தைத் தமிழக அரசு தருமா? போராட்டத்தில் நிராயுதபாணியாக நின்ற மக்களைச் சுட்டுக்கொன்ற குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இப்படியான பொய்யான நடவடிக்கைளைத் தமிழக அரசு எடுத்துவருகிறது.

அதில் ஒரு பகுதியாக ஆரம்பத்தில் தி.மு.க பிரமுகர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அள்ளி வீசினார். அதன்பிறகு, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டதாக எங்களுடைய அமைப்பைச் சேர்ந்தவர்கள்மீது பொய்யான வழக்குகளைப் பதிவுசெய்தார். தற்போது என்.எஸ்.ஏ. சட்டத்தை ஏவியுள்ளார். இப்படித் தொடர்ந்து பல்வேறு கட்டுக்கதைகளையும் பொய்களையும் கூறி, செய்த கொலையை மறைக்கப் பார்க்கிறது அரசு. 

அரசின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் செய்த இந்தக் கொலையை எப்படி மறைக்க முயன்றாலும் உண்மை அம்பலமாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் துணை தாசில்தாரின் உத்தரவு மீறப்பட்டிருப்பது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் தவறு செய்யவில்லை என்றால், பேச அனுமதிக்க வேண்டியதுதானே?அதிலிருந்தே இந்த அரசின் படுகொலை நாடகத்தின் உண்மைக் காட்சிகள் வெளியில் வரத்தொடங்கியுள்ளன. தொடர்ந்து, தமிழகத்தில் சமூக நீதிக்காக நடக்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம், பிரதமர் மோடிக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டம், கார்ப்பரேட் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஆகிய அனைத்திலும் தமிழக மக்கள் முன் நிற்பதால், பி.ஜே.பி. அரசு போராளிகளையும் அவர்கள்  சார்ந்த இயக்கங்களையும் ஒடுக்கத் திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தைச் சரியாகச் செயலாற்றி வருகிறது தமிழக அரசு. 

வாழ்வாதாரத்துக்குப் போராடிய மக்களைப் படுகொலை செய்த குற்றவாளிகள்மீது இந்த அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறவழியில் நியாயமாகப் போராடியவர்கள்மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சுகிறது. இதுதான் இந்த நாட்டு மக்களுக்குத் தேசப் பாதுகாப்பா'' என்று கேள்வியெழுப்பினார், சற்றே கோபமாய்.

போராடியவர்கள்மீது வழக்கு என்றால், படுகொலை செய்தவர்களை என்ன செய்யப்போகிறது அரசு?Trending Articles

Sponsored