"எந்தத் தவறும் செய்யாத எங்களை ஏன் தகுதிநீக்கம் செய்ய வேண்டும்?" - கேள்வி எழுப்பும் தமிழ்ச்செல்வன்!



Sponsored



டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களான 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளதால், அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது நம்பிக்கை இல்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாகவும், கடந்த ஆண்டு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் அப்போதைய தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் வழங்கினர். 

Sponsored


அதனடிப்படையில் ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிராக நடந்துகொண்டதால் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்குப் பரிந்துரை செய்தார். அதில், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கமளித்தார். இதையடுத்து, ஜக்கையனின் விளக்கத்தைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டதோடு, மற்ற 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், விவாதங்கள் முடிவுபெற்று தீர்ப்புக்காகத் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தமிழக அரசியலில் புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான், இதன் தீர்ப்பு நேற்று (14-06-2018) மதியம் வழங்கப்பட்டது. இந்த வழக்கில், இருவேறு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதையடுத்து, அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.

Sponsored


இந்த வழக்கின் தீர்ப்புக் குறிப்பு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ``18 எம்.எல் ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்தது செல்லும்" என்றும், மற்றொரு நீதிபதியான சுந்தர்,  ``18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லாது'' என்றும் தீர்ப்பளித்திருந்தனர். இந்த மாறுபட்ட தீர்ப்பு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளதோடு, பல்வேறு தரப்பினருடைய கருத்துகளும் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. 

இதுகுறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். `` `18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்' என ஒரு நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மற்றொரு நீதிபதி, `தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது' எனத் தீர்ப்பளித்துள்ளார். இந்த இருவேறு தீர்ப்புகள் குழப்பத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தத் தீர்ப்பு மக்களின் நம்பியின்மையைச் சிதைத்துள்ளது. மேலும், அரசாங்கத்துக்கு ஆதரவாக இருக்கிறது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் ஓ.பி.எஸ் தலைமையில் இருந்த 11 எம்.எல்.ஏ-க்களை இந்த நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்யவில்லை. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய அந்த மனுவை  நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதேநேரத்தில், எந்தத் தவறும் செய்யாத எங்களை ஏன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்? இதை, குறைபாடு என்று சொல்வதைவிட, அரசின் உத்தரவுப்படியேதான் நீதிமன்றம் நடக்கிறது என்று சொல்ல வேண்டும். இந்த வழக்கின் அடுத்த நிலை என்ன என்பதை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். அதனால், இப்படியே இந்த வழக்கை இழுஇழுவென இழுத்துக்கொண்டே ஆட்சியை நடத்த எண்ணுகிறார்கள். அந்த அடிப்படையில்தான் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. அரசாங்கம் சொல்கிறபடியே நீதித்துறை செயல்படுகிறது என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் அம்பலமாகியுள்ளது. ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கேற்றவாறுதான் தீர்ப்பு இருக்கிறது. இதைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை'' என்றார், சற்றே கோபத்துடன்.



Trending Articles

Sponsored