``கபினி அணை நிரம்பியதாலேயே தண்ணீர் கிடைத்துள்ளது!" - விவசாயிகள்



நீண்டநெடுங்காலமாக நீடித்துக்கொண்டிருக்கும் காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்தது போன்ற தோற்றம் இருந்தாலும், கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து, அளவுக்கு அதிகமாக தண்ணீர் நிரம்பி, அங்குள்ள அணைகளின் முழு கொள்ளவு நிறைந்த பின்னரே, உபரி நீர் தமிழகத்துக்கு காவிரியில் வெளியேற்றப்படும். இதுதான் காலங்காலமாக இருந்துவரும் நடைமுறை. 

Sponsored


இதைவிடுத்து, ``காவிரி மேலாண்மை ஆணையம் சொன்னால் என்ன அல்லது வேறு எந்த அமைப்பு சொன்னால் என்ன?; எங்களுக்கு எங்கள் மாநில அரசியலும், எங்கள் மாநில விவசாயமும்தான் முக்கியம்" என்ற ரீதியில்தான் கர்நாடக மாநில அரசும், அரசியல் கட்சிகளும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த அடிப்படையில், கடந்த சில தினங்களாக கர்நாடகத்தில் பெய்துவரும் கனமழையால் கபினி அணை நிரம்பியது. இதையடுத்து, கபினி அணையில் இருந்து நேற்று காவிரியில் 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தென்மேற்குப் பருவமழை, கேரளாவிலும், கர்நாடகத்திலும் தீவிரமடைந்ததால் கபினி ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கு நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அதே அளவு தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. 

Sponsored


இந்தத் தண்ணீர், இன்று இரவுக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அரசு, தமிழகத்துக்கான தண்ணீரை திறந்துவிட மறுக்கும்போதெல்லாம் பருவமழை விவசாயிகளுக்குக் கைகொடுக்கும். அதேபோல, இந்த ஆண்டும் பருவமழையே கைகொடுத்துள்ளது. தமிழகத்துக்கு உரிய தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், அந்த உத்தரவை மதிக்காமல் தமிழகத்துக்கு தர மாட்டோம் என்று தெரிவித்து வந்த கர்நாடக அரசு, கபினி அணை நிரம்பியதால், கடந்த இரு தினங்களாக காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. அணைக்கு வரும் உபரி நீர், தற்போது தமிழகத்துக்கு வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது.

Sponsored


இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட்டதற்காக, கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு, மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக கமல் தன்னுடைய ட்விட்டர் பதிவில் 'கபினியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதற்காக கர்நாடக முதல்வருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன். காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படத் தொடங்கிய பிறகும், இரு மாநில நட்பால் மட்டுமே, அடைக்கப்பட்டிருக்கும் பல கதவுகள் திறக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

கடந்த மாதத்தில் கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்ற குமாரசாமியை, பெங்களூரு சென்று கமல் சந்தித்தார். விவசாயிகளின் நலன்களுக்காகவே, தான் குமாரசாமியைச் சந்தித்ததாக அவர் கூறினார். அணை நிரம்பியதால் தண்ணீர் வெளியேறி காவிரியில் விடப்படும் நிலையில், குமாரசாமி தண்ணீர் திறந்துவிட்டுள்ளார் என்று கமல் தெரிவித்திருப்பதற்கு பல்வேறு தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் குமாரசாமி, ``தமிழகத்துக்கு தற்போது தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துகொண்டிருப்பதால், இந்த மாதத்தில் 10 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்குத் திறந்துவிடுவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்காக கர்நாடக அரசின் உறுப்பினர்களை நியமிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை" என்றார்.

கர்நாடக முதல்வருக்கு கமல்ஹாசன் நன்றிதெரிவித்திருப்பதாகக் கூறியுள்ள கருத்து பற்றியும், தமிழகத்துக்கு தண்ணீர் வந்துகொண்டிருப்பது குறித்தும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிறுவனர் அய்யாக்கண்ணுவிடம் பேசினோம்.

``மத்திய அரசு அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் இந்த மாதத்துக்கு 14 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதுபோக மீதமிருப்பது 20 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே. இப்போது கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துள்ளதால் கபினி அணை நிரம்பியுள்ளது. மழை பெய்யவில்லையென்றால், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க மாட்டார். இப்போதைய சூழ்நிலையில், அவர்களால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாது. இருந்தாலும்கூட, அதுபோன்ற உபரித் தண்ணீரையும் வேறுபகுதிக்குத் திருப்பிவிட முயற்சிசெய்வார்கள். எனவே,

குமாரசாமியை கமல் சந்தித்ததாலேயே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது என்று சொல்வதெல்லாம் ஒரு சாக்குதான். கபினி தண்ணீர் என்பது வெள்ளநீர். அதை வேறு எங்கும் விடமுடியாது. காவிரியில்தான் திறந்துவிட்டாக வேண்டும்.

கமல்ஹாசன் சந்திப்பு பற்றி குமாரசாமி கூறுகையில், 'என்னிடம் தண்ணீர் திறந்துவிடுமாறுதான் கமல் கோரினார். அவர் அரசியல் ஏதும் பேசவில்லை' என்றார். ஆனால், குமாரசாமி சொல்வதெல்லாம் முற்றிலும் பொய். முதலில், கமல்ஹாசன் எப்படி காவிரியில் தண்ணீர் கேட்க முடியும்?

எது எப்படியானாலும், எங்களின் நோக்கம் என்னவென்றால், யார் கேட்டு காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் விவசாயிகளான எங்களுக்கு மகிழ்ச்சியே. விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் கிடைத்தால், அது யார் சொல்லி நடந்தாலும் நல்லதுதான். கமல்ஹாசன் சொல்லி, குமாரசாமி தண்ணீர் திறந்துவிட்டிருந்தாலும், அல்லது அவர் சொல்லாமலேயே திறந்துவிட்டிருந்தாலும் எங்களுக்கு மகிழ்ச்சியே. விவசாயிகள் அனைவருமே அநாதைகள் போன்றவர்கள்தான். எங்களைக் காப்பாற்ற யாருமே இல்லை. அப்படி, எங்களைக் காப்பாற்ற யாராவது முன்வந்தால் ரொம்ப சந்தோஷம்தான். அது கமல்ஹாசனாக இருந்தாலும் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். அநாதைகளான விவசாயிகளை யாராவது காப்பாற்றி, காவிரியில் தண்ணீர் திறந்துவிட ஆவன செய்தால் சந்தோஷம்தான். இதைவிட நாங்கள் வேறென்ன சொல்ல முடியும்" என்றார் ஆதங்கத்துடன்.



Trending Articles

Sponsored