``இவங்க சொகுசா விமானத்துல வந்து போக எங்க நிலம்தான் கிடைச்சதா?” - கொதிக்கும் விவசாயிகள்



Sponsored



காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் அருகே புதிய விமான நிலையம் அமைவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக இரண்டாயிரம் ஏக்கர் அளவில் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருப்பதால் அப்பகுதி விவசாயிகள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், உள்நாட்டு முனையம், பன்னாட்டு முனையம் என இரண்டு முனையங்கள் இருக்கின்றன. சமீபத்தில்தான் இரண்டாவது ஓடுதளம் அமைக்கப்பட்டது. தற்போது ஒரு நாளில் மட்டும் 250 விமானங்கள் வந்து செல்கின்றன. ஆண்டுக்குச் சுமார் இரண்டு கோடி பேர் இந்த விமானநிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது உள்ள சூழலில் இந்த விமான நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டபோது, அனகாபுத்தூர், பொழிச்சலூர், பம்மல், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதன் பிறகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களிலும் விமான நிலையம் அமைப்பதற்கான நிலங்கள் தேர்வு செய்யப்பட்டன. போக்குவரத்து, நிலப்பிரச்னை போன்ற காரணங்களால் அந்த இடங்களில் விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட்டது விமான நிலைய ஆணையம்.

Sponsored


இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சிறுப்பாக்கம் அருகே விமான நிலையம் அமைப்பதற்காக வருவாய்த் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலையையொட்டி தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்வே பாதையும் உள்ளது. அப்பகுதியில்தான் 2000 ஏக்கர் நிலம் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் 8000 ஏக்கர் நிலம் இருந்தால் மட்டுமே பணியைத் தொடங்க முடியும் என்ற சூழல் உள்ளதால் இன்னும் பல கிராமங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

Sponsored


அப்பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பவரிடம் பேசினோம், ``தேசிய நெடுஞ்சாலையை அருகே உள்ள அச்சிறுப்பாக்கம், தேன்பாக்கம், வெங்கடேசபுரம், கோட்டைபுஞ்சை, இரும்புலி, தொழுப்பேடு, அரப்பேடு, ஆயக்குன்னம், ஆத்தூர், கொளத்தூர், மேட்டுக்கொளத்தூர், புட்டமங்களம், தூதுவிளம்பட்டு போன்ற கிராமங்கள் புதிய விமான நிலையம் அமைவதால் அப்பகுதி பெரிய அளவில் பாதிக்கப்படும். இந்தப் பகுதிகளில் 60 சதவிகிதம் புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றன. பத்து வருடம் முன்பு தொழிற்பேட்டை அமைப்பதற்காக இந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால், தொழிற்பேட்டை அமைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட்டது. வணிக பயன்பாட்டிற்காக நிலம் எடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள 80 சதவிகித மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தால் மட்டுமே இது போன்ற திட்டங்களைக் கொண்டு வரமுடியும். இப்பகுதியில் விமானநிலையம் வந்துவிட்டால் சுற்றுவட்டாரங்களில் அதிகஅளவு ஒலிமாசு ஏற்படும். அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி கிடைக்காது. புகை வெளியேற்றும் தொழிற்சாலைகள் அமைக்க முடியாது. இதனால் விமான நிலையத்தைச் சுற்றி சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்படும். தனியார் நிறுவனம்தான் விமான நிலையத்தை அமைக்கிறது. இதில் நிலத்தைக் கையகப்படுத்தி கொடுப்பது மட்டுமே அரசாங்கம் செய்யும். இதனால் நிலம் கையப்படுத்துதலில் பெரிய அளவில் ஊழல் நடைபெறும். தனியார் நிறுவனம் கொடுக்கும் பணம் முழுமையாக விவசாயிகளுக்கு வந்து சேராது.” என்கிறார்.

அரப்பேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், ``எங்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறெந்தத் தொழிலும் தெரியாது. நகரத்தில் உள்ளவர்கள் சொகுசாக வந்து போவதற்காக எங்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது நியாயமா? இந்த அறிவிப்பு வந்ததும் ரெண்டு நாளா தூக்கமே இல்ல. எங்க ஊர்ல இருந்து விவசாயிகள் எல்லாம் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறோம். அவரும் இதுவரை எங்களுக்குத் தகவல் வரவில்லை எனச் சொல்கிறார். இப்பகுதியில் விமான நிலையம் வரக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

செய்யூர் தாசில்தார் லட்சுமியிடம் பேசினோம், ``தற்போதுதான் நான் செய்யூர் தாலுகாவுக்குப் பொறுப்பேற்றுள்ளேன். 2016 ம் ஆண்டு நிலத்தை ஆய்வு செய்ததாகச் சொல்கிறார்கள். வேறெதுவும் எனக்குத் தெரியாது” என்றார் சுருக்கமாக.

சென்னையின் புறநகர் பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் இருக்கிறது. சென்னையின் அசுர வளர்ச்சியால் மாவட்டத்தின் கிராமங்கள் அவற்றின் இயல்புத்தன்மையை இழந்து நிற்கின்றன. தொழில் வளர்ச்சியால் ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர், படப்பை, திருப்போரூர் போன்ற இடங்களில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் வந்துவிட்டதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதிய அளவு விவசாயத்துக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இந்த நிலையில் மாவட்டத்தில் கடைக்கோடியில் இருக்கும் இந்தக் கிராமங்களும் வளர்ச்சி என்ற மாயைக்குத் தப்பவில்லை. ஏற்கெனவே 6 வழிச்சாலைக்காக காஞ்சிபுரம் விவசாயிகள் போராட தொடங்கியிருக்கிறார்கள். போலவே, தற்போது சேலத்தில் 8 வழிச் சாலைக்காக நிலங்களை கைப்பற்றவே தொடங்கிவிட்டார்கள் இந்த நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  



Trending Articles

Sponsored