பொலிவியாவில் எடுத்த ஓட்டம் திருப்பூரில் நிற்கிறது... தண்ணீருக்கான முதல் போர் நடந்த கதை!பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரம் கொச்சபம்பா (Cochabamba). தண்ணீருக்கான மிகப்பெரிய போர் நடத்தி வெற்றிகண்ட முதல் நகரம். 1997-ம் ஆண்டு, உலக வங்கி பொலிவியாவிற்கு இரண்டரை கோடி டாலர் கடன் கொடுக்கிறது. அப்போது பொலிவியாவிடம் தண்ணீரை தனியார்மயம் ஆக்க வேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அதன்படி, அமெரிக்காவைச் சேர்ந்த ’பெக்டல்’ (Bechtel) என்ற தனியார் நிறுவனம் 1999-ம் ஆண்டு 40 வருடத்திற்கான தண்ணீர் உரிமம் பெற்று கொச்சபம்பாவில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய ஆரம்பிக்கிறது. முதல் மாதம் எல்லாமே சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இரண்டாவது மாதத்தில் இருந்து தண்ணீரை வழங்கும் பெக்டல் நிறுவனம் தண்ணீரின் விலையை ஏற்றுகிறது. அதுவரை அரசாங்கத்தால் இலவசமாகவும், குறைந்த செலவிலும் தண்ணீரைப் பெற்றுவந்த மக்கள் அதிர்ச்சியடைகிறார்கள். 

Sponsored


  photo - democracyctr.org

Sponsored


பெக்டலின் இந்தத் திடீர் விலையேற்றம் மக்களுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்துகிறது. தினமும் தன்னுடைய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தண்ணீருக்கு தர வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இதனால் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக மக்கள் சென்றனர். ஆற்று வழிப்பாதை அமைப்பதாகச் சொல்லி ராணுவம் நிறுத்தப்பட்டது. வீடுகளில் இருக்கும் கிணறுகளில் தண்ணீர் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இலவசமாகப் பெற வேண்டிய தங்களுடைய நீர், கட்டணம் கொடுத்த பின்னர்தான் அவர்களுக்கே கிடைத்தது. இறுதியாக மழைநீரைச் சேமித்து பயன்படுத்தத் தொட்டிகளை அமைத்தனர். இரவோடு இரவாக பெக்டல் நிறுவனம் அந்நகரிலுள்ள வீடுகளில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அடித்து உடைக்கிறது. பூமிக்குள் இருந்து எடுத்தாலும், வானத்தில் இருந்து எடுத்தாலும், அது எங்களுடையது என்று கொக்கரித்தது, பெக்டல் நிறுவனம். பெக்டலின் விலை ஏற்ற அறிவிப்புக்கும், கொடிய நடவடிக்கைகளுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிக்கிறார்கள். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அரசாங்கம் ஏதேதோ சொல்லி மழுப்பிக் கொண்டிருந்தது. உடனடியாக, பணம் கட்டும் வசதியில்லாதவர்களுக்குத் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. 

Sponsored


கொச்சபம்பா பகுதிகளுக்கு தண்ணீரை வழங்கும் பெக்டல் நிறுவனத்தைக் காப்பாற்ற களத்தில் இறங்கியது பொலிவியா அரசு. அதற்காக ராணுவச் சட்டத்தை அறிவித்தது. திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும், முக்கிய பிரதிநிதிகளும் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டார்கள். ஒரு தெருவில் நிராயுதபாணியாக நடந்து வந்து கொண்டிருந்த 17 வயது சிறுவன் சுட்டுக் கொள்ளப்பட்டான். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். போராடிய மக்களின் மீது குண்டு மழை பொழிந்தாலும், அவர்கள் தங்கள் போராட்டங்களைக் கைவிடவில்லை. இறுதியாக 2000-ம் ஆண்டு தண்ணீர் விநியோக உரிமையை நிறுத்திக் கொள்ளுமாறு பொலிவியா அரசாங்கத்தால் பெக்டல் நிறுவனம் நிர்ப்பந்திக்கப்படுகிறது. அதை எதிர்த்து 2001-ம் ஆண்டு உலக வங்கியில் முறையிடுகிறது அந்நிறுவனம். இருந்தாலும் போராட்டம் செய்த  மக்கள் இறுதியாக அந்நிறுவனத்திற்கு எதிராக தங்கள் வாதத்தை உலகறியகச் செய்தனர். இறுதியில் 2006-ம் ஆண்டு தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வெளியேறியது பெக்டல் நிறுவனம். தண்ணீர் தனியார் மயமானதற்கு எதிராக வெடித்த முதல் போரும் அதுதான். அதேபோல, ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனம் மக்கள் எழுச்சியால் பின்வாங்கிய நிகழ்வும் அதுதான். தண்ணீருக்காக நடத்தப்பட்ட முதல் போரை மையமாக வைத்து 2010-ம் ஆண்டு 'ஈவன் தி ரெய்ன்' (Even the Rain) என்ற சிறந்த சூழலியல் திரைப்படம் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

அப்படி விரட்டி அடிக்கப்பட்ட பெக்டல் நிறுவனம்தான், சில ஆண்டுகளுக்கு முன்னர், திருப்பூர் மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் உரிமையைப் பெற்றது. வந்தவுடன் சாதாரண தண்ணீரின் விலையை 4 ரூபாய் 50 பைசா, விலையேற்றி விற்பனை செய்ய துவங்கியது, அந்நிறுவனம். 

கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளான சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள்மூலம் நாளொன்றுக்கு, 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிக்கும் விதமாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'சூயஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 30 ஆண்டுகளுக்கு தண்ணீர் கொடுக்கும் வகையில், 3,100 கோடி ரூபாய் மதிப்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜய கார்த்திகேயன் "கோவையில் உள்ள குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்துள்ளதால், அவற்றை மாற்றியமைக்கவும் பராமரிக்கவும்தான் சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குடிநீர் கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம்தான் நியமிக்கும்" என்கிறார்,  

'குடிநீர்க் குழாய்கள் சேதமடைந்துள்ளதைப் பராமரிக்கவும், மாற்றவும் எதற்குத் தனியார் நிறுவனம்' என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கவும் முடியவில்லை. பொலிவியாவில் போராட்ட மக்களின்மீது நடத்திய துப்பாக்கிச்சூடும், தமிழ்நாட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டை நினைவுப்படுத்தவும் தவறவில்லை. பெக்டல், சூயஸ் என்ற பெயர்கள் மட்டும்தான் வேறு... மற்றபடி எல்லாம் ஒன்றுதான்... தண்ணீர் என்பது தனியாருக்கானது அல்ல என்பதை அரசு உணரப்போவது எப்போது? கார்ப்பரேட் நிறுவனத்துக்கு உரிமம் கொடுக்கும் அரசு பொலிவியாவின் தண்ணீர் போரை நினைவில் கொள்ள வேண்டும். Trending Articles

Sponsored