``காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை?" - மணியரசன் கேள்வி



Sponsored



மிழக விவசாயிகளின் நீண்ட நெடியப் போராட்டத்துக்குப் பிறகு காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்று  முடிந்துள்ளது. மத்திய நீர்வளத்துறை தலைவரும் காவிரி மேலாண்மை வாரிய ஆணையருமான மசூத் ஹுசைன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே பிரபாகர் மற்றும் கர்நாடக  மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகள் பங்கேற்றனர். சுமார் நான்கு மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஜுலை - ஆகஸ்ட் மாதங்களுக்கு உரிய நீரை தமிழகத்துக்குத் திறந்துவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மசூத் ஹுசைன், ``ஜுன் மாதத்தில் தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் வழங்கியுள்ளதால், அதனைக் கழித்துவிட்டு எஞ்சிய நீரை கர்நாடக அரசு வழங்கும் என்று  நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.   

இதுகுறித்துப் பேசிய, `காவிரி உரிமை மீட்புக் குழு'வின் தலைவர் பெ.மணியரசன், ``காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. குறிப்பாக கூட்டம் முடிந்து பேசிய ஆணையத்தின்  தலைவர் மசூத் ஹுசைன், 'ஜூன் மாதத்தில் வரவேண்டிய தண்ணீரைவிடக் கூடுதலாக தமிழகத்துக்கு தண்ணீர் வந்துள்ளது. அதனைக் கழித்துவிட்டு எஞ்சிய நீரை வழங்குமாறு  அறிவுறுத்தியுள்ளோம். அப்படியே  கர்நாடக அரசு வழங்கும் என நம்புகிறோம்' என்கிறார்.

Sponsored


அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்டு 'ஏற்கெனவே பலமுறை உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டும் கர்நாடக அரசு உரிய தண்ணீரை  வழங்கவில்லை. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தின் இந்த முடிவை கர்நாடக அரசு  ஏற்குமா?' என்று கேள்வி எழுப்புகையில்... 'புதிய சகாப்தம் தற்போது தொடங்கியிருக்கிறது. அதனால் கர்நாடக அரசு தண்ணீரைத் திறந்து விடும் என நம்புகிறோம் ' என்று கூறியுள்ளார். அவர், மீண்டும் மீண்டும் நம்புகிறோம் என்று மட்டுமே கூறுகிறாரே தவிர, இன்றையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை கர்நாடக அரசு நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்று கூறவில்லை. இந்த ஆணையத்தின் மிகப் பெரிய நடவடிக்கையே உத்தரவு போடுவது மட்டுமே. அப்படியான அதிகாரமிக்க அமைப்பு எந்த உறுதியான உத்தரவையும் இன்றைய கூட்டத்தில் போடவில்லை. உச்சநீதிமன்றம் அத்தனை முறைக் கூறியும் அதைக் கடைசி வரை கர்நாடக அரசு செயல்படுத்தவே இல்லை. இந்த நிலையில், 'நம்புகிறோம்' என்கிற மசூத் ஹுசைனின் வார்த்தையை கர்நாடக அரசு மதிக்குமா? என்பது சந்தேகம்தான். இன்றைய முடிவு குறித்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி என்ன சொல்கிறார் என்பதைப் பொருத்தே... நமக்கு இந்தப் பிரச்னையின் முழு வடிவம் தெரிய வரும். மேலும் இன்றைய கூட்டத்தில், கர்நாடக அரசு சார்பில் என்ன பேசினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

Sponsored


அதற்குள் இன்றைய கூட்டத்தின் முடிவில் வெளியாகிய தகவலை வைத்து தமிழக முதலமைச்சர் நல்லசெய்தி வந்திருப்பதாகக் கூறுகிறார். காவிரி நீர் தமிழகத்துக்கு வராமலேயே வந்துவிட்டதாக நினைத்து வெற்றிவிழாக் கொண்டாடியவர் அல்லவா? எனவே, அவர் அப்படித்தான் பேசுவார். எனவே, இன்று நடைபெற்றக் காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் அதன் தலைவர் மசூத் ஹுசைன் ஜூலை மாதத்துக்கு உரிய தண்ணீரைக் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று கட்டளையிடாதது ஏமாற்றம் அளிக்கிறது" என்றார்

 தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் நம்மிடம் பேசியபோது, 

``காவிரி மேலாண்மை ஆணையம் தனது முதல் கூட்டத்திலேயே ஜூலை மாதத்துக்கான 34 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க  உத்தரவு பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோம். இந்த உத்தரவை கர்நாடகம் ஏற்றுக்கொள்கிறதா? இல்லையா? என்பதைப் பற்றி தற்போது விவாதிக்க வேண்டிய தேவையில்லை. கர்நாடக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆணையத்தின் உத்தரவை காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதற்கேற்ற வகையில், கர்நாடக அணைகளின் தண்ணீரை அன்றாடம் கணக்கிட்டுப் பகிர்ந்தளிக்கும் நிர்வாக அதிகாரத்தை ஆணையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

உச்ச நீதிமன்றத்துக்கு இணையான காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை நிறைவேற்ற மத்திய - மாநில அரசுகள் உதவ வேண்டும். இதை  மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த ஆணையத் தலைவர் மசூத் ஹுசேன் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். கூட்ட முடிவுகளையும், நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் அவ்வப்போது உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்" என்றார். 



Trending Articles

Sponsored