நாம் கேன்களில் வாங்கும் மினரல் வாட்டரில் மினரலே இல்லையென்பது தெரியுமா? #Alert



Sponsored



மிழகத்தில் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைவிட கேன் வாட்டர் குடிக்கும் குழந்தைகள் அதிகமாக இருக்கக்கூடும். சென்ற இருபது ஆண்டுகளில் நாம் கண்ட மிகப்பெரிய சாதனை தண்ணீரைப் பாக்கெட்டிலும் கேனிலும் அடைத்ததுதான். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அதிகமானோர் நம்புவது பபுள்டாப் வாட்டர் கேன்களைத்தான். இந்த ஆண்டு தமிழ்நாட்டில், குறிப்பாகச் சென்னையின் முக்கியப் பகுதிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. இந்த வறட்சியைத் தனியார் நிறுவன குடிநீர் வழங்கும் நிறுவனங்களும், தனியார் தண்ணீர் லாரிகளும் 'சரியாக' உபயோகப்படுத்திக்கொண்டன. கேட்டவுடன் கிடைக்கும் தண்ணீர், கேட்டால் இரண்டு நாள்கள் கழித்து கிடைக்கும் அளவுக்கு தண்ணீர்ப் பஞ்சம் இருந்தது. இதனால் மிதமான வருமானங்களை அள்ளிக்கொண்டிருந்த தண்ணீர் நிறுவனங்கள் அதிக லாபத்தை ஈட்ட ஆரம்பித்தன. இன்றைய நிலையில் பபுள் டாப் வாட்டர் கேன் இல்லாமல் வாழ முடியாது என்ற கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறோம். பபுள் டாப் வாட்டர் கேன் மற்றும் லாரி தண்ணீர்தான் குடிநீர் ஆதாரத்துக்கு ஒரே தீர்வா... அதற்கு மாற்று இருக்கிறதா என்றால் அதற்கு 'இருக்கிறது' என்பதுதான் பதில். 

மினரல் வாட்டர் வாங்கும்போது அதில் மினரல் இருக்க வேண்டும்; விஷம் இருக்கக் கூடாது. பிளாஸ்டிக் பாட்டிலுக்குத் தனியாகவும், பபுள்டாப் கேனுக்கு தனியாகவும் சுத்திகரிப்பு முறைகள் உண்டு. இங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் தாதுக்கள் பெரும்பாலும் நீக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறை தண்ணீர் சுத்திகரிக்கும்போதும் விடுபட்ட தாதுக்களுக்காக மீண்டும் தாதுக்களைச் சேர்க்க வேண்டும். கேன்களில் தண்ணீர் நிரப்பும்போது கேன்கள் முறையாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும்... தண்ணீரில் உள்ள தாதுக்கள் நீக்கப்பட்ட நிலையில் இருக்கும் தண்ணீரை 'டி-மினரலைஸ்டு வாட்டர்' என்று சொல்வார்கள். அந்த நீர் குடிக்கத் தகுந்தது அல்ல. அது உடல் நலத்துக்கு கேடு. டி-மினரலைஸ்டு வாட்டரைத் தொடர்ந்து குடித்தால், உடல் நலம் பாதிப்படையும் என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் நுரையீரல் கோளாறு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எனப் பல பிரச்னைகள் மனிதர்களுக்குத் தாக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

Sponsored


இதைப் பற்றி பேசிய சூழலியலாளர் நக்கீரன், ``நீக்கப்பட்ட தாதுக்களுக்குப் பதிலாக தாதுக்கள் மீண்டும் சேர்க்கிறார்களா என்று கண்காணிக்கும் அமைப்பு நம்மிடம் இல்லை. மெட்ரோ வாட்டரை கண்காணிக்க ஓர் அமைப்பு உண்டு. மெட்ரோ இன்ஜினீயர்கள் அடங்கிய அமைப்பு தொடர்ந்து மெட்ரோ தண்ணீரைக் கண்காணிக்கும். பிளாஸ்டிக் கேனின் உள்ளே இருக்கக்கூடிய டாலேட் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த பொருள்கள் தண்ணீருடன் கலக்கும். இது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் தண்ணீர் என்பதை அரசாங்கத்திடம் கேட்க ஆரம்பித்தால் மட்டுமே இதற்கானத் தீர்வு கிடைக்கும். தனியாரிடம் கையேந்தினால் கிடைக்கும் தண்ணீர் இங்கு மோசமான விளைவை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும். மக்கள் மனதிலும் சுத்தமான நீர் ’கேன் வாட்டர்தான்' எனப் பதிய வைத்தது கார்ப்பரேட்டுகளின் வெற்றி. தண்ணீர் என்பது வணிகப்பொருள் அல்ல. அது மக்களின் உரிமைப் பொருள். 

Sponsored


கடந்த கோடையில் ஏற்பட்ட வறட்சியின்போது அரசாங்கத்தால் தண்ணீர் கொடுக்க முடியாத நிலை இருந்தபோது, தனியார் மட்டும் எப்படி தண்ணீரை தடையின்றிக் கொடுத்தது? ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே வாட்டர் கேன் பயன்பாட்டில் இந்திய அளவில் சென்னைக்குதான் முதலிடம். சென்னையில் தண்ணீர்ப் பற்றாக்குறை இருக்கலாம். ஆனால் மழைப் பற்றாக்குறை இருக்காது. சென்னையைவிட மூன்று மடங்கு மழைக் குறைவாக பெய்த இடங்களில்கூட தண்ணீர்ப் பிரச்னை ஏற்படவில்லை. சென்னையில் மட்டும் இது அதிகமாக இருப்பது அரசின் மெத்தனப்போக்குதான் காரணமாக இருக்க முடியும். சுத்தமான குடிநீரை அரசாங்கம்தான் கொடுக்க வேண்டும்" என்றார். 

பொதுவாக ஆர்.ஓ ப்ளாண்ட்டின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் கிடைக்கிறது. அந்தந்த ப்ளாண்ட்களில், தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகிறது. மேலும், தண்ணீர் சுத்திகரிப்பின்போது, அமில மற்றும் காரத்தன்மையை அகற்றுவதன் மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள் கிடைக்காமலே போய்விடுகின்றன. மினரல் வாட்டர் எனச் சொல்லி விற்கப்படும் தண்ணீரில் மினரலே இல்லை என்பதுதான் உண்மை. சுத்திகரிக்கப்பட்ட பாட்டில்களிலும், கேன்களிலும் பளிச்சென பேக்கிங் செய்யப்பட்டு தண்ணீர் வெண்மையாகக் காட்சியளிக்கிறது. 

கேன் தண்ணீர் உடலுக்கு நல்லதா என்பது பற்றி மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம். ``தண்ணீர் சுத்திகரிப்புத் தொழில்நுட்பம் மேலை நாடுகளில் பிரபலமானது. அது அங்கு நிலவும் சீதோஷ்ண நிலைக்கும், அவர்களின் உடலுக்கும் ஒத்துப்போகும். ஆனால், நம் நாட்டின் சூழ்நிலைகளுக்கு ஒத்துப்போகும் எனச் சொல்லிவிட முடியாது. சாதாரணமாகத் தெருக்களில் உள்ள குழாய்களில் கிடைக்கும் நீரும், மாநகராட்சி நீருமே குடிப்பதற்குப் போதுமானது. அந்தத் தண்ணீரை காய்ச்சி ஆற வைத்துப் பயன்படுத்தினாலே போதுமானது. தண்ணீரில் இருக்கும் தாது உப்புக்களும் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்" என்றார். 

தமிழ்நாடு முழுவதும் 1460 நிறுவனங்கள் தண்ணீர் கேன் வியாபாரம் செய்கின்றன. இதில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 376 நிறுவனங்கள் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றன. சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் கேன்கள் விற்பனையாகின்றன. ஒவ்வொரு வருடமும் 10 முதல் 20 சதவிகிதம் உயர்ந்துகொண்டேதானிருக்கிறது. ஆனால், அதைத் தரம் பார்த்து வாங்க வேண்டிய மக்களுக்கு போதிய விழிப்பு உணர்வு இல்லை. 

குடிக்க உகந்த நீருக்கு ISI 14543 என்ற குறியீடு அவசியம். பல கேன் வாட்டர் நிறுவனங்கள் இதைப் பெறுவதில்லை. இன்று 40 ரூபாய் கொடுத்து வாங்கும் தண்ணீர், நாளைக்கு 100, 200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்தால் எப்படி வாங்க முடியும்? 

இதுகுறித்து பேசிய கிரேட்டர் தமிழ்நாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர் சங்க நிறுவனர் எ.ஷேக்ஸ்பியர், ``மக்கள் கேன் வாட்டர் வாங்கும்போது ISI 14543 என்ற முத்திரை இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும். அதேபோல, ஒவ்வொரு நிறுவனத்துக்கும் CML எண் மற்றும் FSSAI முத்திரையும் கொடுக்கப்பட்டிருக்கும். பொதுவாகத் தண்ணீர் சுத்திகரிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் மக்களிடையே வைக்கப்படுகிறது. இதற்கு நிறுவனம் பொறுப்பல்ல. எங்களிடம் இருந்து கேன்கள் வெளியேறும் முன்னர் அதிக முறை பரிசோதிக்கப்பட்டுத்தான் அனுப்பப்படுகிறது. கடைகளில் வைத்து விற்பனை செய்யும்போது காலியாகும் கேன்களில் சில கடைக்காரர்களே குழாய்த் தண்ணீரை பிடித்து விற்பனை செய்கிறார்கள். இதுதான் மக்கள் குற்றம் சாட்டக் காரணம். ஐ.எஸ்.ஐ குறியீடு உள்ள நிறுவனங்கள் தண்ணீரை முறைப்படி சுத்திகரித்துத்தான் அனுப்புகிறது" என்றார். 

இந்நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கும் வேலையை உணவுப் பாதுகாப்புத்துறை மேற்கொள்கிறது. இத்துறையும் பல கொள்கைகளைப் பின்பற்றித்தான் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எப்படி உணவுப் பாதுகாப்பு அனுமதி கொடுக்கிறது என்பது பற்றி உணவுப் பாதுகாப்புத்துறை இயக்குநர் அமுதா ஐ.ஏ.எஸிடம் கேட்டோம். 

``ஒவ்வொரு வாட்டர் கேன் நிறுவனங்களுக்கும் நேரடியாகக் கள ஆய்வு நடத்தி தண்ணீரை பரிசோதித்து வருகிறோம். அப்போது தண்ணீர் முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் இருந்தால் அந்நிறுவனங்களுக்குச் சீல் வைக்கிறோம். மறுபடியும் அந்நிறுவனத்தினர், தண்ணீர் சுத்திகரிப்பதை மேம்படுத்தினால் மட்டுமே திறக்க அனுமதிப்போம். எங்களிடம் அனுமதி கோரும் நிறுவனங்களுக்கு முழுமையாகத் தண்ணீரை சுத்திகரித்தால் மட்டுமே அனுமதி கொடுக்கிறோம். அதன்படிதான் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் FSSAI அங்கீகாரம் கொடுக்கப்படும். இதுபற்றிய புகார்களுக்கு 044-24351051 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம்" என்றார். 

சில நேரங்களில் ஆர்.ஓ தண்ணீரைப் பருகும்போது சற்று இனிப்பாக இருப்பதுபோல தோன்றலாம். இதில் இளநீர் சுவைபோல இருக்கும் ஆர்.ஓ தண்ணீரும் உண்டு. அப்போது நாம் ஏன் இந்தச் சுவை என யோசனை செய்திருக்கிறோமா? வெளியிடங்களுக்குச் செல்ல நேர்ந்தால் வீட்டிலிருந்தே சுத்தமான தண்ணீரை எடுத்துச் செல்லலாம். உணவு விடுதிகளிலும்கூட சூடான நீரையே கேட்டுப் பருகலாம். வீட்டிலும் மெட்ரோ நீரைச் சுடவைத்துப் பருகலாம். 

நாம் நமக்கு உரித்தான தண்ணீரை எப்போதோ தீர்த்துவிட்டோம். இப்போது உறிஞ்சிக்கொண்டிருப்பதெல்லாம் எதிர்கால சந்ததியினரின் பங்கு.



Trending Articles

Sponsored