"ஸ்டாலின் தவறான கருத்தை சட்டப் பேரவையில் பதிவு செய்துள்ளார்!" - தமிழிசைSponsoredமத்திய அரசு மீது ஏற்கெனவே இந்தி மொழி திணிப்பு குற்றச்சாட்டு உள்ள நிலையில், தற்போது இணையவழி நூலகத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், 'மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில், தொடங்கப்பட்டிருக்கும் இணைய வழி நூலகத்தில், தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு தி.மு.க கடும் கண்டனம் தெரிவிக்கிறது' எனக் கூறியுள்ளார்.  

மேலும், 'இந்த இணையவழி நூலகத்தில் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் மட்டுமே இடம் பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னக மொழிகள் அனைத்தும் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு தெற்கு, வடக்கு என்ற பிளவு மனப்பான்மையை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு. வேண்டும் என்றே திட்டமிட்டு வெறுப்பையும், விரோதத்தையும் பரப்பக்கூடிய மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது.

Sponsored


அனைத்து நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் நம் இந்திய நாடு குறித்தும், இந்த நாட்டினுடைய பண்பாடு குறித்தும் அறிந்து கொள்வதற்கு இந்த இணையவழி நூலகம் உதவும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மூன்று லட்சம் எழுத்தாளர்களின் ஒரு கோடி நூல்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றபோது தமிழகத்தைச் சார்ந்த வரலாற்று நூல்கள் மற்றும் புகழ்ப் பெற்ற எழுத்தாளர்களின் நூல்கள் இதில் இடம் பெறவில்லை என்பது வேதனையளிக்கிறது' என அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்துச் சட்டமன்றத்தில் பதிவு செய்த ஸ்டாலின், ''நமது தமிழ் மொழியும் இடம் பெறுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்துப் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ''இதுகுறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்" என்று கூறியுள்ளார்.   

Sponsored


ஸ்டாலின் கருத்துக்கு பி.ஜே.பி தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்துப்பேசிய, பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்,  ''நேற்று அவர் அப்படியொரு அறிக்கையை  வெளியிட்டிருப்பது பற்றி  நானும் தெரிந்து கொண்டேன். ஸ்டாலின், கூறியிருப்பது தவறான கருத்து. அனைத்து மொழிகளையும் பதிவு செய்யும் வழிவகை அந்த தேசிய இணையதள நூலக மையத்தில் உள்ளது. ஏறக்குறைய ஏழு லட்சம் நூலகப் பதிவுகள் அந்த இணையத்தில் உள்ளன. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பதிவும் அதில் உள்ளது. குறிப்பாக அந்த இணைய தளத்திலிருந்து தமிழ் புத்தகங்களே அதிகளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில், 'தேசிய இணையவழி நூலக செயலி' ( ஆப்)ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியில், உடனடியாக அனைத்து மொழிகளையும் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை. இதுகுறித்து அந்த செயலியை அறிமுகப்படுத்தும்போதே அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். மேலும் அதில் உள்ள அந்தக் குறையை படிப்படியாகக் குறைப்போம் என்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அந்தத் திட்டத்தின் ஆரம்பக் கட்டம் இது. திட்டத்தை  முழுமையாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. எனவே இணையவழி நூலகத் திட்டத்தில், தமிழ் திட்டமிட்டு  ஒதுக்கப்படுவதாக ஸ்டாலின் கூறியிருப்பது தவறானது. தமிழை ஒதுக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு  இல்லை. அப்படி பாரபட்சம் பார்த்து  புறக்கணித்து  பி.ஜே.பி என்ன சாதிக்கப் போகிறது?அந்தத் திட்டத்தில், உள்ள குறைப்பாட்டைச் சரி செய்ய தமிழக பி.ஜே.பி சார்பில் வலியுறுத்தப்படும். இதனை அரசியல் ஆக்குவதற்காகவே ஸ்டாலின் இப்படியான குற்றச்சாட்டைக் கூறுகிறார். அவருடைய அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" என்றார்.Trending Articles

Sponsored