ஈ.பி.எஸ் BSc... ஓ.பி.எஸ் BA... கல்வியமைச்சர் S.S.L.C... உங்கள் ஊர் எம்.எல்.ஏவின் கல்வித் தகுதி என்ன?



வ்வோர் ஆண்டும் உயிர் பலி வாங்கிக்கொண்டிருக்கிறது நீட் தேர்வு. பொறியியல் படிப்புகளுக்கு முழுக்கமுழுக்க ஆன்லைன் கலந்தாய்வு; பள்ளிகளில் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிப்பது; கட்டாயக் கல்வித் திட்டத்தின்கீழ், தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் 25 சதவிகிதம் ஒதுக்கீட்டில் நடைபெறும் முறைகேடு எனக் கல்வியின் பெயரில் மக்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வியிலிருந்து கல்லூரி வரை இதே நிலைதான். டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது முதல் அடிப்படை விஷயங்கள் அனைத்துக்கும், கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எந்த அடிப்படைத் தகுதிகளும் இல்லாமல் இருக்கும் ஒரே துறை அரசியல்தான்.

Sponsored


தமிழகத்தில் உள்ள 234 தொகுதி எம்.எல்.ஏ-க்களின் கல்வித் தகுதி குறித்து, கோவையில் உள்ள சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார். அதன்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 98 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்ததுபோக, மீதம் உள்ள 117 தொகுதிகளில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் (அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் உள்பட) இருக்கின்றனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து, அவர் தொகுதியில் (ஆர்.கே.நகர்) நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரனும் எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் ஒருவராக இருக்கிறார். 

Sponsored


அ.தி.மு.க-வில் 18 எம்.எல்.ஏ-க்கள் 10-ம் வகுப்புவரைகூடப் படிக்கவில்லை. 4, 5, 6, 7, 8, 9 ஆகிய வகுப்புகள் வரைதான் அவர்கள் படித்துள்ளனர். இந்த லிஸ்ட்டில், தி.மு.க-வில் 9 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸில் 2 எம்.எல்.ஏ-க்களும் இருக்கின்றனர். ஆக, தமிழகத்தில், 29 எம்.எல்.ஏ-க்கள் 10- ம் வகுப்புவரைகூடப் படிக்கவில்லை. அ.தி.மு.க-வில் 16 எம்.எல்.ஏ-க்கள் 10-ம் வகுப்பை மட்டும் நிறைவுசெய்துள்ளனர். அதேபோல, தி.மு.க-வில் 13 எம்.எல்.ஏ-க்களும், காங்கிரஸில் 1 எம்.எல்.ஏ-வும் 10-ம் வகுப்பை மட்டும் முடித்துள்ளனர். ஆக, 30 எம்.எல்.ஏ-க்களின் தகுதி எஸ்.எஸ்.எல்.சி-தான். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முதல், பல அமைச்சர்கள் எஸ்.எஸ்.எல்.சி-தான் முடித்துள்ளனர். 

Sponsored


ப்ளஸ் டூ வகுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யாமல், தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வில் தலா ஒரு எம்.எல்.ஏ இருக்கின்றனர். மேலும், அ.தி.மு.க-வில் 16 எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க-வில் 6 எம்.எல்.ஏ-க்களும், கடையநல்லூர் தொகுதி முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ அபுபக்கரும் ப்ளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆக, ப்ளஸ் டூ முடித்துள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 23 (16+6+1= 23). 

அ.தி.மு.க-வில் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் டிப்ளோமா முடித்துள்ளனர். அதேபோல, தி.மு.க-வில் ஒரு எம்.எல்.ஏ ஐ.டி.ஐ படிப்பும், மற்றொரு எம்.எல்.ஏ டிப்ளோமா படிப்பையும் முடித்துள்ளனர். சுயேச்சையாகக் களமிறங்கி, ஆர்.கே.நகரில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க-வினரைக் களங்கடித்த டி.டி.வி.தினகரன், சிவில் இன்ஜினீயரிங் படிப்பை நிறைவு செய்யவில்லை. இதேபோல, அ.தி.மு.க-வில் ஒரு எம்.எல்.ஏ-வும், தி.மு.க-வில் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தங்களது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யவில்லை. தி.மு.க தலைவர் கருணாநிதி போர்ட் எக்ஸாம் வரை நிறைவு செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றிபெற்று, மூவர் அணியாக வலம்வரும் தனியரசு, எம்.ஏ., எல்.எல்.பி படித்திருக்கிறார். தமிமுன் அன்சாரி, எம்.ஏ பொலிடிக்கல் சயின்ஸ் முடித்திருக்கிறார். நடிகர் டு எம்.எல்.ஏ-வாக ப்ரமோஷன் பெற்றுள்ள கருணாஸின் தகுதி ப்ளஸ் டூ.

அமைச்சரவையை எடுத்துக்கொண்டோம் என்றால், மொத்தமுள்ள 28 அமைச்சர்களில், 17 அமைச்சர்கள்தாம் டிகிரி முடித்துள்ளனர். குறிப்பாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் 10-ம் வகுப்பைத்தான் நிறைவு செய்துள்ளார். உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், ப்ளஸ் டூ முடித்துள்ளார். ஆக, பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாதவர் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், கல்லூரிப் படிப்பை முடிக்காதவர் உயர்கல்வித் துறை அமைச்சர். மேலும், துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில்தான், பி.ஏ டிகிரியை நிறைவுசெய்துள்ளார். 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் பட்டியலில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், வெற்றிவேலும் தங்களது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யவில்லை. அதே பட்டியலில், இரண்டு பேர் 9-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளனர்.

ஆக, மொத்தம் அ.தி.மு.க-வில் 63, தி.மு.க-வில் 54, காங்கிரஸில் 5 எம்.எல்.ஏ-க்கள் டிகிரியை முடித்துள்ளனர். ஆனால், இதிலும் பல்வேறு கோல்மால்கள் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சர், கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் ஒரு தொகை கொடுத்து, டிகிரி வாங்கிவிட்டாராம். இப்படி, கோல்மால் செய்து டிகிரி வாங்கியவர்கள் ஏராளம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் டேனியல் ஏசுதாஸ் கூறுகையில், ``35 மாணவர்களுக்குப் பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்குப் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன. ஆனால், நம்மை ஆளக்கூடிய ஆட்சியாளர்களுக்கு, எந்தத் தகுதியும் இல்லாமல் இருப்பது, மிகவும் வருத்தமான விஷயம். `காமராஜர் எல்லாம் என்ன படிச்சாரு..? அவர் சிறப்பாக ஆட்சி செய்யவில்லையா’ என்று சிலர் கேட்கலாம். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் காமராஜரும் இல்லை. மேலும், காமராஜர் காலத்தில் நீட் தேர்வும் இல்லை. படித்த இளைஞர்கள் பலர்  வேலை வாய்ப்பில்லாமல் அவதிப்படுகின்றனர். அதற்கான, நடவடிக்கை எடுக்காமல், தங்களது சம்பளத்தை லட்சக்கணக்கில் உயர்த்திவைத்துள்ளனர்” என்றார். 

பதற்றத்தை வரவழைக்கிறதே எம்.எல்.ஏ-க்களின் கல்வி குறித்த பட்டியல்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உங்கள் தொகுதியைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் தொகுதி எம்.எல்.ஏவின் கல்வித்தகுதியை தெரிந்துகொள்ளுங்கள்:



Trending Articles

Sponsored