நம் ஜிமெயில் இன்பாக்ஸை யார் யாரெல்லாம் படிக்கிறார்கள் தெரியுமா? #GmailSponsoredனிநபர்களின் பிரைவசி குறித்த பிரச்னை சிலிக்கான் வேலியில் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. இந்தமுறை பிராது வந்திருப்பது பெரியண்ணன் கூகுள் மீது. ``ஜிமெயில் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்களை அவர்களின் அனுமதியின்றி, ஜிமெயில் தொடர்பான சேவைகள் வழங்கும் தேர்ட் பார்ட்டி நிறுவனங்கள் படிக்கின்றன; இதற்கு கூகுளே துணைநிற்கிறது" என்பதுதான் தற்போது அந்நிறுவனத்தின் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு. உண்மையில் பிற நிறுவனங்கள் நம் மின்னஞ்சல்களைப் படிக்க அனுமதிக்கிறதா கூகுள்? ஆம். படிக்க அனுமதிக்கிறது. இவ்வளவு ஏன்? அந்நிறுவனங்களின் ஊழியர்கள் கூட நம் ஜிமெயிலில் இருக்கும் மின்னஞ்சல்களைப் படிக்கமுடியும். இதைக் கூகுளே ஒப்புக்கொண்டுள்ளது. ஏன் கூகுள் இப்படிச் செய்கிறது? விரிவாகப் பார்ப்போம்.

உண்மையை வெளிக்கொணர்ந்த வால்ஸ்ட்ரீட் ஜர்னல்

பயனாளர்களுக்கு ஏற்ற பிரத்யேக விளம்பரங்களைக் காட்டுவதற்காக இனிமேல் அவர்களின் ஜிமெயில் இன்பாக்ஸை ஸ்கேன் செய்யமாட்டோம் எனக் கடந்த ஆண்டுதான் அறிவித்திருந்தது கூகுள். இதற்கு பதிலாக பயனாளர்களின் பிரவுசிங் ஹிஸ்டரி, வயது, இருப்பிடம் போன்றவற்றின் அடிப்படையில் மட்டுமே விளம்பரங்கள் காட்டப்படும் எனவும் தெரிவித்திருந்தது. ஒருவேளை இப்படி Personalized ஆக கூகுள் விளம்பரங்கள் காட்டுவது பயனாளர்களுக்குப் பிடிக்கவில்லை எனில் இந்த வசதியை நிறுத்துவதற்கான வசதியையும் கூகுள் தந்திருந்தது. ஆனால், கூகுள் சொன்னதுபோல பயனாளர்களின் இன்பாக்ஸை படிப்பதை இன்னும் நிறுத்தவில்லை என்கிறது வால்ஸ்ட்ரீட் ஜர்னல்.

Sponsored


Sponsored


இதற்காக தேர்ட் பார்ட்டி ஜிமெயில் ஆப்ஸ் நிறுவனங்களிடமும், ஊழியர்களிடமும் முழுமையாக விசாரணை நடத்தியிருக்கிறது அந்தப் பத்திரிகை. அதில்தான் பல்வேறு அதிர்ச்சியளிக்கும் விஷயங்கள் தெரியவந்துள்ளன. அதாவது, தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் நிறுவனங்கள் நம் ஜிமெயில் இன்பாக்ஸைப் படிக்க கூகுளே அனுமதிக்கிறது. இன்று ஜிமெயிலோடு இணைந்து செயல்படும் நூற்றுக்கணக்கான ஆப்களுக்கும் இது பொருந்தும். இதற்காகக் கூகுளும், அந்த ஆப் நிறுவனங்களும் சொல்லும் காரணம், ``நாங்கள் பயனாளர்களின் உரிய அனுமதியோடுதான் இன்பாக்ஸைப் படிக்கிறோம். வேண்டுமென்றால் எங்கள் பிரைவசி பாலிசியைப் படித்துப் பாருங்கள்" என்பதுதான். எத்தனைபேர் இன்று பிரைவசி பாலிசியை முழுவதுமாகப் படித்துவிட்டு ஜிமெயில் பயன்படுத்துகின்றனர்? இங்கேதான் இருக்கிறது இந்த நிறுவனங்களின் சூட்சுமம்!

பிற நிறுவனங்கள் இப்படிச் செய்யலாம்... கூகுளே ஏன் இப்படிச் செய்கிறது?

``இணையத்தில் ஒரு சேவை உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது என்றால், நீங்கள் அதற்கு பயனாளரோ அல்லது வாடிக்கையாளரோ இல்லை; அதற்காகக் கொடுக்கும் விலையே நீங்கள்தான்"

இணையத்தின் இலவச நுகர்வோர்கள் குறித்து அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லப்படும் வாசகம் இது. இதேதான் இந்த ஜிமெயில் பிரச்னையிலும். மக்களுக்கு மின்னஞ்சல் சேவையை வழங்குவதற்காக 2004-ம் ஆண்டு ஜிமெயிலைத் தொடங்கியது கூகுள். இன்று உலகெங்கும் சுமார் 140 கோடி மக்கள் ஜிமெயிலைப் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு ஜிமெயிலில் இரண்டுவிதமான சேவைகளை வழங்குகிறது கூகுள். ஒன்று இலவச ஜிமெயில். உலகின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவது இதைத்தான். இரண்டாவது கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் பிசினஸ் சேவை. தனியார் நிறுவனங்கள் பலவும் இவற்றைத்தான் பயன்படுத்துகின்றன. இந்த இரண்டாவது ரக ஜிமெயிலைப் பயன்படுத்துபவர்களுக்கு எவ்வித விளம்பரமும் காட்டப்படாது. இவர்களிடமிருந்துதான் முதலிலேயே கூகுள் பணம் பெற்றுக்கொள்கிறதே? அதனால். 

ஆனால், இலவசமாக ஜிமெயில் பயன்படுத்துபவர்கள் மூலம் கூகுளுக்கு என்ன கிடைக்கும்? நேரடியாக வருமானம் எதுவும் வராது. எனவே, இவர்களுக்கு விளம்பரங்களை அனுப்புகிறது கூகுள். இதன்மூலம் கணிசமாக வருவாயை அள்ளுகிறது. இப்படி அனுப்பும் விளம்பரங்களை மிகத்துல்லியமாகச் சரியான நபர்களுக்கு அனுப்பத்தான் நம் இன்பாக்ஸ் மீது கண்வைக்கிறது கூகுள். இதன்மூலம் நம்முடைய டேட்டாவை எளிதாக ஆராய்ந்து, அதற்கேற்ற விளம்பரங்களை அனுப்ப முடியும். ஆனால், நல்ல பிள்ளையாக இந்த விஷயத்தைக் கடந்த ஆண்டோடு கைவிடுவதாக அறிவித்த கூகுள், தற்போது பிற தேர்ட் பார்ட்டி ஆப் நிறுவனங்கள் மூலம் மீண்டும் அவப்பெயரைச் சம்பாதித்திருக்கிறது.

என்ன சொல்கிறது வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் விசாரணை?

ஆன்லைன் வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும் ஜிமெயில் முகவரிதான் நமக்கான ஆதார் அட்டையே! எந்தவோர் இணையதளம் சென்றாலும், அங்கே நம்மை உறுதிசெய்துகொள்வதற்கு ஜிமெயில் முகவரிதான் உதவும். எனவே. நிறைய நிறுவனங்களின் இணையச் சேவைகளுக்கு நம் மின்னஞ்சல் முகவரியின் மூலம் லாகின் செய்திருப்போம். அப்படிச் செய்யும்போதே நம்முடைய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான அனுமதியை அந்த நிறுவனங்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். இதுதவிர ஜிமெயில்க்கு எனப் பிரத்யேகமாக இயங்கும் சில ஆப்களும் இருக்கின்றன. அவற்றை நம் ஜிமெயில் கணக்கோடு இணைத்துப் பயன்படுத்தும்போது, நம்முடைய ஜிமெயில் தகவல்களைப் பயன்படுத்திக்கொள்ள அவற்றிற்கு அனுமதி கொடுத்துவிடுகிறோம். இந்த அனுமதியின் மூலம் அவர்கள் நம்முடைய இன்பாக்ஸ் மீதான அதிகாரத்தைப் பெற்றுவிடுகின்றனர். பின்னர் வணிகக் காரணங்களுக்காக நம்மைக் கண்காணிக்கவும் தொடங்கிவிடுவார்கள். இதுதான் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை நடத்திய விசாரணையிலும் தெரியவந்திருக்கிறது.

ரிட்டர்ன்பாத் என்னும் அமெரிக்க நிறுவனம் ஒன்று, தன்னுடைய சேவைகளைப் பயன்படுத்தும் சுமார் 20 மில்லியன் மக்களின் ஜிமெயில் தகவல்களை வணிகக் காரணங்களுக்காகச் சேகரித்திருக்கிறது. அந்நிறுவனத்தின் மென்பொருள் ஒன்றை உருவாக்குவதற்காக சுமார் 8,000 மின்னஞ்சல்களைப் பயன்படுத்தியிருக்கிறது. இதேபோல எடிசன் சாஃப்ட்வேர் என்னும் நிறுவனமும் மென்பொருள்களை மேம்படுத்துவதற்கான பயனாளர்களின் மின்னஞ்சல் தகவல்களைப் பயன்படுத்தியுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களுமே தங்கள் பயனர்களிடம், இப்படி உங்களின் மின்னஞ்சல்களைப் படிக்கப்போகிறோம் எனச் சொல்லவில்லை. மாறாக, பிரைவசி பாலிசியை மட்டுமே வைத்து நாசூக்காக தப்பித்துவருகின்றன. இந்த விசாரணையை இந்த நிறுவனங்களில் பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் மேற்கொண்டுள்ளது வால்ஸ்ட்ரீட் ஜர்னல். இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டும்தாம் தற்போது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், இதேபோல பல நிறுவனங்களும் ஜிமெயிலைத் தவறாகக் கையாள்வதும் தெரியவந்திருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறது கூகுள்?

நம்புங்க... நாங்க இருக்கோம்!

விளம்பரங்களுக்காக ஜிமெயிலைக் குறிவைப்பதில் நிறுவனங்களுக்கு நிறைய லாபங்கள் இருக்கின்றன. இன்று நம்முடைய ஆன்லைன் ஷாப்பிங், அலுவலக மின்னஞ்சல்கள், டிக்கெட்கள், வங்கி தகவல்கள் என முக்கியமான தகவல்கள் அனைத்தும் நம் மின்னஞ்சல்களுக்கு வருகின்றன. எனவே, அவற்றை டிராக் செய்வதன்மூலம் நம்மை எளிதாக விளம்பர வலையில் வீழ்த்திவிட முடியும். எனவேதான் ஃபேஸ்புக் அளவுக்கு மின்னஞ்சல்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஃபேஸ்புக் போலவே, தேர்ட் பார்ட்டி ஆப்கள் இங்கேயும் கைவரிசை காட்டுகின்றன. இதுகுறித்து அந்த நிறுவனங்கள் கூறுவதெல்லாம், ``நாங்கள் உங்களின் பெர்சனல் தகவல்களை யாருடனும் பகிர்ந்துகொள்வதில்லை. உங்களின் மின்னஞ்சல் குறித்த தகவல்களை மட்டும்தாம் சில ஆய்வுகளுக்காகப் பயன்படுத்துகிறோம். மேலும், மின்னஞ்சல்கள் மூலம் நாங்கள் பெறும் தகவல்கள் குறித்தும் தெளிவாக எங்களின் பிரைவசி பாலிசியில் விளக்கியிருக்கிறோம். ஒருவேளை இதற்கு உங்களுக்குச் சம்மதம் இல்லையெனில் நீங்கள் எங்கள் சேவையிலிருந்து விலகிக்கொள்ளலாம்" என்பதுதான். ஆனால், கூகுள் இப்படிப் பொறுப்பற்று பதில் சொல்ல முடியாதல்லவா? எனவே, விரிவாக விளக்கமளித்திருக்கிறது அந்நிறுவனம்.

``கூகுள் அல்லாத பிறநிறுவனங்களின் ஆப்களுக்கு அனுமதியளிக்கும் முன்பு, முழுமையாக அவற்றை ஆய்வு செய்தபின்பே அனுமதியளிப்போம். கூகுளின் பணியாளர்கள் மூலம் நேரடியாகவும், பின்னர் ஆட்டோமேஷன் மூலமாகவும் இந்தப் பணிகள் நடக்கும். இப்படிப் பெறப்படும் தகவல்களை அந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன் என்பது குறித்தும் கண்காணிக்கிறோம். உங்களின் தகவல்களை தேவையில்லாமல் யாருடனும் பகிர்ந்துகொள்வதை நாங்கள் அனுமதிப்பதில்லை. 

ஒரு ஆப்பை கூகுள் மூலம் லாகின் செய்யும்போதே, அது எதற்கெல்லாம் அனுமதி கேட்கிறது என்பது தெளிவாக உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் அதைப் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் அவற்றிற்கு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தாலும், தற்போது அவற்றை அக்கவுன்ட் செட்டிங்க்ஸ் சென்று நீக்கிவிட முடியும். ஜிமெயிலுக்கு வரும் ஸ்பேம் மற்றும் ஃபிஷ்சிங் மெயில்களைத் தவிர்ப்பதற்காக அவ்வப்போது ஆட்டோமேட்டிக் முறையில் ஜிமெயில் கணக்குகளை ஸ்கேன் செய்வோம். பயனாளர்களின் ஜிமெயில் இன்பாக்ஸைப் படிக்கிறோம் என இதைத்தான் சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். உங்களின் இன்பாக்ஸைப் படிப்பதற்கு நீங்கள் எங்களுக்கு அனுமதியளித்திருந்தாலோ அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காகவோ மட்டும்தான் உங்கள் ஜிமெயில் தகவல்களைப் படிப்போம்.

நாங்கள் தேர்ட் பார்ட்டி ஆப் டெவலப்பர்களிடமிருந்து பணம் பெறுவதில்லை. ஜிமெயில் பிசினஸ் சேவை மூலம் மட்டுமே கட்டணம் பெறுகிறோம். உங்களின் தகவல்களின் பாதுகாப்புக்குக் கூகுள் என்றைக்குமே முன்னுரிமை தரும்" என விளக்கமளித்திருக்கிறார் கூகுளின் பாதுகாப்புத்துறை நிர்வாகி சுசானே ஃப்ரே. 

ஆனால், இந்த விளக்கத்திலேயே நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. ஒரு தேர்ட் பார்ட்டி ஆப்பிற்கு அனுமதியளிக்கும் முன்பு கூகுளின் நேரடிப் பணியாளர் அதைச் சோதனை செய்வார் என்கிறது கூகுள். ஆனால், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நடத்திய விசாரணையில், இப்படிப்பட்ட பணிகள் எதுவும் நடப்பதில்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும், தேர்ட் பார்ட்டி ஆப்களின் பிரைவசி பாலிசி மட்டுமே மக்களுக்குப் போதுமானதாக இருக்குமா? தங்களின் மின்னஞ்சல்கள் அனைத்தும் யாரோ ஒருவரால் படிக்கப்படுகின்றன என்பது குறித்து அவர்களுக்கு இதனால் தெரியுமா போன்ற கேள்விகளும் எழுகின்றன.

முதலில் ஃபேஸ்புக்; தற்போது கூகுள். இப்படியாக, இத்தனை நாள்கள் நாம் இலவசமாகப் பயன்படுத்திய சேவைகளுக்கெல்லாம், இன்று நம் பிரைவசியை விலையாகத் தரவேண்டிய காலம் வந்துவிட்டது. Trending Articles

Sponsored