'அரிசி, கோதுமையால் இந்திய உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது!' -சர்வதேச விஞ்ஞானிகள் குழு



Sponsored



பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்றபடி இந்தியாவில் உணவுப் பயிர்கள் உற்பத்தியாவது இல்லை. இக்கருத்து பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்டு வருகிறது. அதை நிரூபிக்கும் விதமாகச் சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று நடத்திய ஆய்வில் 'பெருகிவரும் மக்கள் தொகைக்கு அரிசியும், கோதுமையும் சரியான தீர்வாக இருக்காது' என்று தங்களது ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளனர். இப்புதிய ஆராய்ச்சியின்படி, இந்தியா அரிசி, கோதுமை ஆகிய உணவு உற்பத்தியில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தனது கவனத்தை வேறு பாதையில் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 2050-ம் ஆண்டிற்குள் புதிதாக 40 கோடி மக்கள், இப்போதுள்ள மக்கள் தொகையுடன் சேர்ந்துவிடுவர். ஆனால், இப்போதே நீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப்போய் உணவு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுகிறது. அப்படியிருக்கும்போது, வருங்காலத்தில் மேலும் சேரும் 40 கோடி மக்களுக்கு எப்படி இந்திய அரசாங்கம் உணவளிக்கப்போகிறது என்று தெரியவில்லை. அதனால் இந்தியா மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 

Sponsored


தற்போதைய இந்திய நிலவரப்படி, இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சரியான உணவின்றி ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை பொய்த்துப்போனதால் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டதும் இதற்குக் காரணம். இந்திய உணவுகள் பெரும்பாலும் தானியப் பயிர்களை அடிப்படையாகக் கொண்டது. அதனைச் சரியாக பின்பற்றாததால்தான், இப்போது உணவுப் பற்றாக்குறை வழிவகுத்துள்ளது. 

Sponsored


"அரிசி மற்றும் கோதுமை ஆகியவற்றையே உணவாக எடுத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் காலநிலை மாறுபாடு ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால், அரிசி மற்றும் கோதுமையை வைத்துக் கொண்டு எத்தனைக் காலம் நீடித்திருக்க முடியும் என்று தெளிவாக தெரியவில்லை. அதனால்தான் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை மேம்படுத்துவதற்காகத் தனி ஒரு வழியைத் தேட வேண்டியுள்ளது" என்கிறார், கொலம்பியா பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் கைல் டேவிஸ். 

சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் ஆராய்ச்சிக்காக அரிசி, கோதுமை, சோளம், தினை, கம்பு, ராகி ஆகிய ஆறு பயிர்களை எடுத்துக் கொண்டனர். ஆறு பயிர்களிலும் புரதம், இரும்பு, கலோரிகள் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்தனர். ஆய்வின் முடிவில், "கோதுமைக்குச் செலவழிக்கும் நீரில் சோளம், தினை, கம்பு, ராகி ஆகிய நான்கு பயிர்களை 10 மடங்கு அதிகமாக உற்பத்தி செய்ய முடியும். அதனால் அதிகமான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். இதனால் எதிர்கால உணவுப் பற்றாக்குறையை எளிதில் சமாளிக்க முடியும். 1960-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் அரிசி மற்றும் கோதுமையால் அதிகமான உணவுத் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என நம்பப்பட்டது. ஆனால் அதுவே இப்போது மிகப்பெரிய பிரச்னையாக வந்து நிற்கிறது" எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

சில மாநிலங்கள் முன்னரே இந்தப் பயிர்கள் மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து விட்ட்டன. மேலும், இந்திய அரசாங்கம் 2018-ம் ஆண்டை "கம்பு ஆண்டு" என்று அழைப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அரசாங்கம் கம்பு போன்ற மக்களைச் சிறுதானியங்கள் பக்கம் திருப்ப வேண்டும். அதற்கு விவசாயிகளுக்குச் சிறுதானிய பயிர்களை விளைவிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அரசாங்கம்தான் ஏற்படுத்த வேண்டும். அப்போது நிச்சயம் விவசாயிகள் சோளம் போன்ற தானியங்களை விளைய வைப்பார்கள். மக்களும் விவசாயிகளுக்கு உரிய விலையைக் கொடுத்து பொருட்களை பெற்றுக் கொள்வார்கள். அரிசி மற்றும் கோதுமைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைச் சிறுதானியங்களுக்கு கொடுத்துவிட்டால் நிச்சயம் ஒரு விவசாயப் புரட்சியை மீண்டும் ஏற்படுத்த முடியும். 
தற்போது இருக்கும் விளைநிலங்களில் விளையும் உணவுப் பயிர்களே மக்களுக்கு போதுமான அளவில் இல்லை. நிலை இப்படி இருக்கும்போது, வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில், விளைநிலங்களை அழிப்பது மேலும் உணவுப் பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்யுமே தவிர குறைக்காது. 

உணவு உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருந்தாலும், தன் நாட்டு மக்களுக்குத் தேவையான உணவினை உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதே தற்போதைய உண்மை நிலவரம்.



Trending Articles

Sponsored