``கூட்டணியின்போது பகுத்தறிவெல்லாம் பேச மாட்டர்கள்!" - தமிழிசை செளந்தரராஜன்



பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா அண்மையில் தமிழகம் வந்தபோது  '#gobackamitshah' ஹேஷ்டேக் மிகவும் டிரெண்டான சூழ்நிலையில், அந்த ஹேஷ்டேக்கால் தமிழக பி.ஜே.பி. தலைவர்கள் சற்றே கலக்கம் அடைந்தனர். தமிழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றதுடன், பி.ஜே.பி. தேர்தல் நிர்வாகிகள் மத்தியில் உரை நிகழ்த்திவிட்டு திரும்பிச் சென்றார். ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிப்பதாக அமித் ஷா ஆற்றிய உரை, தற்போது அரசியல்களத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. 

குறிப்பாக ``தமிழகத்தில் ஊழல் செய்யாத கட்சிகளுடன் பி.ஜே.பி. கூட்டணி அமைக்கும்" என்று அமித் ஷா தெரிவித்த கருத்து, அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக்  கவனிக்கப்படுகிறது.

Sponsored


அதேநேரத்தில் அமித் ஷாவின் இந்த அதிரடிப்பேச்சு, தமிழக பி.ஜே.பி. தலைவர்களுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. இதுகுறித்து பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

Sponsored


Sponsored


``வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தொண்டர்களை தயார் செய்வதற்கு, அனைத்து மாநிலங்களிலும் எங்கள் கட்சித் தலைவர் அமித் ஷா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவரின் தமிழ்நாட்டுப் பயணமும் அமைந்துள்ளது. தேர்தலை முன்னிட்டு, சில சிறப்புப் பணிகளும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் பி.ஜே.பி. சார்பில் இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கட்சியின் முழுநேர தேர்தல் ஊழியர்கள் மற்றும் சக்தி கேந்திரா, மகா கேந்திரா போன்ற பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், கட்சியின் அமைப்புரீதியாக தமிழகத்தில் 49 மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து, சக்தி கேந்திரா, மகா கேந்திரா பொறுப்பாளர்களை ஏற்கெனவே நியமித்துள்ளோம். தேர்தலை நோக்கி, இதுபோன்று தொடர்ந்து எங்கள் கட்சிப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. எங்கள் கட்சியின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள்தான், தமிழகத்தில் பி.ஜே.பி-யை விமர்சித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பி.ஜே.பி. மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் தேசியத் தலைவரான அமித் ஷா விரிவான ஆலோசனை நடத்தினார். அதில், முடிக்கப்பட்ட பணிகள், இனி நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து நாங்கள் அவரிடம் விரிவாக எடுத்துரைத்தோம். தமிழக பி.ஜே.பி-யின் இத்தகைய செயல்பாடுகள் பற்றி அமித் ஷா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவரும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். பிரதமர் மோடி அடுத்தமுறை தமிழகம் வருவதற்குள் கட்சியின் அனைத்துப் பணிகளும் முழுமை அடைந்து இருக்க வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக உள்ளது. அவரின் அறிவுரைப்படி நாங்கள் பணிகளை விரைவாக முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

``தமிழகத்தில் பி.ஜே.பிக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறதே?"

``தமிழகத்தில் நடக்கும் அனைத்துச் செயல்பாடுகளும் எங்கள் கட்சியின் தேசியத் தலைவருக்குத் தெரியும். அவர் மிகவும் அனுபவம்வாய்ந்த தலைவர் என்பதால், நாங்கள்  சொல்லித்தான் அவருக்கு இங்குள்ள பிரச்னைகள் தெரிய வேண்டும் என்பதல்ல. 'மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களைக்கூட இங்குள்ள சிலர் ஏன் எதிர்க்கிறார்கள் என்று  தெரியவில்லை' என அமித் ஷா கவலை தெரிவித்தார். மேலும், மாநிலத் தலைவர் என்ற முறையில் இங்கு நடக்கிற அனைத்தையும் அவருக்குத் தொடர்ந்து தெரிவித்து வருகிறேன்.  'தமிழகத்தில் நடப்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உங்கள் பணியைச் செய்யுங்கள். மாநிலத்தில் நம் கட்சி பலம்பெற வேண்டும் என்பதே மக்களுக்காகத்தான். பி.ஜே.பி. பற்றி எதிர்மறையாகப் பேசுபவர்களைப் பற்றி கவலை வேண்டாம்' என்று அமித் ஷா அறிவுரை வழங்கினார். அவருடைய அந்த நம்பிக்கை, எங்களை மேலும் ஊக்கப்படுத்தியுள்ளது.

``தமிழகத்தில் பகுத்தறிவாளர்கள் நிறைந்த அரசியல் கட்சிகள் அதிகம் உள்ளன. கொள்கைரீதியாக அந்தக் கட்சிகள் பி.ஜே.பி-யை ஏற்றுக்கொள்வார்களா?"

``தமிழகத்தில் அப்படியானவர்கள் இருந்தாலும் பி.ஜே.பி-க்கு எனத் தனி மக்கள் செல்வாக்கு இருக்கிறது. தமிழகத்தில் அதுபோன்ற மக்கள்தான், பி.ஜே.பி.-க்கு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 19.2 சதவிகித வாக்குகளை வழங்கினார்கள். பகுத்தறிவாளர்கள் என்று சொல்லக்கூடியவர்களும், ஏற்கெனவே கடந்த காலங்களில் எங்களுடன் கூட்டணி வைத்துள்ளார்களே? எனவே, தேர்தல்வரும்போது பகுத்தறிவைப் பற்றி எல்லாம் பேசாமல், வியூகங்களை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள்".



Trending Articles

Sponsored