"விதிமீறலா... விதிப்படியா?" - ஈஷாவை விளாசிய சி.ஏ.ஜி... சில கேள்விகளும் விளக்கங்களும்!Sponsored"ஈஷா பவுண்டேஷன், 2005 முதல் 2008 வரை, 11,973 ச.மீ பரப்பளவில் முன்பு கட்டிய கட்டிடங்களுக்கு, ஹாகாவை கலந்து ஆலோசிக்காமல், கிராமப் பஞ்சாயத்து அனுமதி வழங்கியதை, கோவை மாவட்ட வன அலுவலர், கள ஆய்வு மேற்கொண்டு கண்டறிந்தார். மேலும், பூலுவாப்பட்டியில் பாதுகாக்கப்பட்ட வன சரகத்தின் உள்ளடக்கிய, யானைகள் வசிக்கும்,  நடமாடும் இடமான பகுதிகளில் ஈஷா கட்டிடம் கட்டியதற்கு, வனத்துறை விளக்கம் கேட்டும் (2012 பிப்ரவரி மற்றும் ஏப்ரல்), பவுண்டேஷன் தொடர்ந்து கட்டிடம் கட்டியது. (கடந்த 2017 ஜூலை வரை) ஹாக்காவின் ஒப்புதல் நிலுவையில் இருந்துள்ளது" 

இதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, பழங்குடி மக்களோ சொல்லவில்லை. தமிழக சட்டசபையில், சி.ஏ.ஜி தாக்கல் செய்துள்ள அறிக்கையில்தான் இந்த அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, ஈஷாவுக்கு எதிராக,  பழங்குடி மக்களும், சூழல் செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் நிலையில்,சி.ஏ.ஜி அறிக்கையிலும், ஈஷாவின் விதிமீறல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 

Sponsored


தமிழ்நாடு பயோ டைவர்சிட்டி அண்ட் க்ரீனிங் திட்டத்தின் கீழ்(TBGT), பல்லுயிர் பெருகுவதற்காக வனத்துறைக்கு, குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில், குடிநீர்த் தொட்டி அமைப்பது. மரம், செடி வளர்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதுகுறித்த அறிக்கையில்தான், ஈஷா போன்ற பகுதிகளில், இப்படி அனுமதியின்றி கட்டிடம் கட்ட அனுமதித்தால் எப்படி பல்லுயிர் பெருகும்? யானை காப்பகங்களில் நகரமயமாக்கலா? என்று ஈஷா விவகாரத்தில் வனத்துறையை விளாசியதுதான் அந்த அறிக்கையின் சாராம்சம் 

Sponsored


“மலைப்பகுதியில் சூழலியல் ஏற்புள்ள இடமாகவும், சுற்றுப்புறம் கொண்ட பகுதியாகவும் உருவாக்க, தமிழக  அரசு மலைப்பகுதியை காக்கும் சூழலை (Hill Area Conservation Authority) ஹாகா, கடந்த 1990-ம் ஆண்டு அமைத்தது. அதன்படி, இரண்டு குடும்பங்களுக்கு மேல் வாழ உகந்த அனைத்துப் பெரிய கட்டிடங்கள் கட்டுவது, 300 ச.மீட்டர் பரப்பளவுக்கு மேலாக, வணிக மற்றும் அலுவலக கட்டிடங்கள் கட்டுவது போன்ற எல்லா மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும், ஹாகாவிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஈஷா பவுண்டேஷன், 1994 முதல், 2008 வரை பூலுவாப்பட்டி கிராமத்தில், பூலுவாப்பட்டி கிராமத்து பஞ்சாயத்து அனுமதியுடன். 32,856 சதுர அடி பரப்பளவில் பல்வேறு கட்டிடங்கள் கட்டியுள்ளது. அந்த பவுண்டேஷன் வனத்துறையிடமிருந்து, தடையில்லா சான்றிதழ் மற்றும் ஏற்கெனவே 69, 193 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிய கட்டிடங்களுக்கு மற்றும் 52, 393 சதுர மீட்டரில் கட்ட இருக்கும் கட்டிடங்களுக்கும், 3, 34, 331 சதுர மீட்டர் பரப்பளவில் வாகனம் நிறுத்துமிடத்துக்கும், சாலைகள், விளையாட்டு மைதானம் போன்றவற்றுக்கு 2011 அக்டோபரில் ஹாகாவிடம் அனுமதி கோரியது. கோவை மாவட்ட வன அலுவலர் கள ஆய்வு மேற்கொண்டு, 2005 முதல் 2008 வரை, 11, 973 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிய கட்டிடங்களுக்கு, ஹாகாவை கலந்தாலோசிக்காமல், கிராம பஞ்சாயத்து அனுமதி வழங்கியதை கண்டறிந்தார்.

குறிப்பாக, பூலுவாப்பட்டியில்  பாதுகாக்கப்பட்ட வனச் சரகத்தின் உள்ளடக்கிய, யானைகள் வசிக்கும்/நடமாடும் பகுதிகளில், கட்டிடம் கட்டியதற்கு, 2012-இல் வனத்துறை விளக்கம் கேட்டும், ஈஷா பவுண்டேஷன் தொடர்ந்து கட்டிடம் கட்டியது என்று கள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு, தடையில்லா சான்றிதழ் கோரியதை, வனத்துறை திருப்பிய அனுப்பிய பிறகும், கட்டுமானப் பணிகள் தொடரமால் தடை செய்ய எந்த ஒரு தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 

மேலும், 2017-ம் ஆண்டில், வருவாய்துறை தாசில்தாரிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றுவிட்டதாக துறையை மீண்டும் அணுகிய ஈஷா பவுண்டேஷன், ஹாகாவை அணுகுவதற்காக, வனத்துறையிடம் தடையில்லா சான்றை கோரியது. அதற்கு, ‘அங்கு கட்டிடங்கள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹாகா அறிக்கை செய்த இடத்தில், ஈஷா கட்டிய ஒப்புதல் பெறாத கட்டங்களை இடிக்க, தனிநபர் ஒருவரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது’ என்று கூறி, முதன்மை, தலைமை வனக்காப்பாளருக்கு, கோவை மாவட்ட வன அலுவலர் மேலனுப்பு செய்தார்.

முக்கியமாக, 2012-இல், கட்டிடங்கள் கட்டும்போது அளிக்கப்பட்ட அறிக்கையின் பேரில் நடவடிக்கை எடுக்க வனத்துறை தவறியது. அதேபோல, ஹாகாவுக்கு பரிந்துரை செய்வதற்கு முன்பே, வனவிலங்குகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை கட்டுப்படுத்தவும் மற்றும் தண்ணீர்த் தொட்டிகளை உருவாக்கும் பணியை நிறைவு செய்ய வற்புறுத்தவில்லை” என்று சி.ஏ.ஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

யானைகளின் வழித்தடங்களை மறித்து, கட்டிடங்களை கட்டுவது.. பழங்குடி மக்களின் இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியது தொடர்பாக, ஈஷாவுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஈஷா மறுத்துவரும் நிலையில், சி.ஏ.ஜி யின் இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் மோகன்ராஜ் கூறுகையில், "ஹாகா என்பது பெயரளவில்தான் மலைப் பகுதியை

பாதுகாக்கும் குழுவாக இருக்கிறது. ஆனால், மலைப்பகுதியை பாதுகாப்பதற்கு அந்தக் குழு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தொடர்பாக அந்தக்குழு அறிக்கை தயார் செய்ய வேண்டும். ஆனால், 28 ஆண்டுகளில், ஒரு அறிக்கையைகூட இவர்கள் தயார்படுத்தவில்லை. அதாவது, பாதிப்புகளைக் கண்டறிந்து, அதைச் சரிபடுத்துவது தொடர்பாக பரிந்துரையை அரசுக்கு அளிக்க வேண்டும். ஆனால், இவர்கள் அறிக்கை தயார் செய்யாததால், அங்கு நடக்கும் பிரச்னைகள் வெளியே தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதனால்தான், இதுபோன்ற கட்டிடங்கள் முளைத்துள்ளன. ஈஷா அதில் ஒரு பகுதிதான். இதைப் போலவே க்வாரிகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கட்டிடங்கள், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வருவாய் கிராமங்களில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளன.

ஈஷா கட்டிடங்கள் தொடர்பாக, அரசு ஆவணங்களிலேயே விதிமுறைகள் இருப்பதாக கூறியிருந்தாலும், கடைசி நேரத்தில் அதிகாரிகள் கூடி பேசி ஒப்புதல் வழங்கிவிட்டனர். தற்போதும், ஈஷாவில் தொடர்ந்து கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அது யோகா மையம் இல்லை. கேளிக்கை விடுதி. சுற்றுலாத் தளத்தின் கீழ்தான், அதற்கு அனுமதியே வழங்கியுள்ளனர்.  வனம் மற்றும் நகர் பகுதிக்கு இடையே, 2 கி.மீ தொலைவுக்கு இடைத்தாங்கல் மண்டலம் (Buffer Zone) அமைத்து அங்கு வனத்தை பாதுகாக்க வேண்டும். அந்தப் பகுதியில் குறிப்பிட்ட விவசாயத்துக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும். ஆனால், இதுபோன்ற பிரச்னைகள் வரும்போதுதான், ஹாகா குறித்தே தெரிய வருகிறது. இதுகுறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், இவர்கள் கூறுவதை யாரும் மதிப்பதில்லை. இது, மேலும் ஊழலுக்குத்தான் வழிவகுக்கும். தற்போது, அவர்கள் கட்டிடங்களை கட்டியே முடித்துவிட்டனர். இனி, இதை இடிப்பது சந்தேகமே.வழக்கு இருக்கும்போதே, ஈஷா தொடர்ந்து கட்டிடம் கட்டிவருகிறது. அதை, அரசோ, நீதிமன்றமோ, அந்த வழக்கை தொடர்ந்தவர்களோ கூட கேட்கவில்லை. இதற்கு பின்னால், மிகப்பெரிய சதி இருக்கிறது" என்றார் விளக்கமாக.

2017-இல் ஆதியோகி சிலை திறப்பதற்காக மோடி வருவதற்கு முன்பு, பழைய ஆவணங்களில் ஈஷா செய்த விதிமீறல்கள் இருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், அவரது வருகைக்குப் பிறகு அதற்கெல்லாம் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பிரமாண்ட ரிசார்ட் மற்றும் யோகா சென்டர் அமைப்பதற்கும் கட்டிடங்களை கட்ட உள்ளனர். 

இந்நிலையில், ஈஷாவிடம் இதுதொடர்பாக நாம் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம்.

"1990-ம் ஆண்டே அரசாணையில் தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில், 1994-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஈஷா யோக மையம், ஹாகாவிடம் அனுமதி பெறுவதற்கு முன்பே கட்டிடம் கட்டியது ஏன்.. ?"

"இயற்கையைப் பாதுகாப்பதற்காக ஏராளமான பணிகளை செய்வதாக கூறும் ஈஷா, அதற்காக அரசு கூறியுள்ள விதிகளை கடைபிடிக்காதது எந்த விதத்தில் நியாயம்?"

'ஈஷா யோகா மையத்துக்கு எதிராக இருக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்றை நிரூபித்தால் கூட, நான் அனைத்திலும் இருந்து விலகிக் கொள்கிறேன்', என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜக்கி வாசுதேவ் கூறிருந்தார்.

"தற்போது,  சி.ஏ.ஜி அறிக்கையில் ஈஷா செய்த தவறுகள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, திரு. ஜக்கி வாசுதேவ் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?" 

இதற்கு ஈஷா, "தமிழக பொருளாதாரப் பிரிவைப் பற்றி, இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவர்வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசிற்காக வரையப்பட்ட அவரது கண்ணோட்டமாகும். இதுகுறித்து பொருத்தமானவகையில் பதில் அளிப்பது தமிழக அரசின் பொறுப்பு. இந்த விஷயத்திற்குள் தேவையில்லாமல் ஈஷா அறக்கட்டளையின் பெயரையும் சில விரோத எண்ணம் கொண்ட குழுவினர் இழுத்துவிட்டிருக்கின்றனர்.  ஈஷா யோக மையம் வனத்தையோ அல்லது ஆதிவாசிநிலத்தையோ அல்லது வேறுவகையான நிலங்களையோ ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ஈஷா யோக மையம், வனநிலத்தில் கட்டப்படவில்லை. ஈஷா யோக மையத்திற்கு சொந்தமான பட்டா நிலத்தில் மட்டுமே மையம் கட்டப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு, தமிழக வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், இதனை சரி பார்த்தபின்,  ஈஷா மையம் முழுக்க முழுக்க பட்டாநிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது என்றும், வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும் தெள்ளத் தெளிவாக பதிவு செய்துள்ளனர். (ஆவணக்குறிப்புஎண்: CFCIT/07/2013).

தமிழக வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஈஷா யோக மையத்தின் கட்டிடங்கள் யானை வலசைப்பாதையில் அமையவில்லை என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி (RTI) அனைவரும் தெரிந்து கொள்ளலாம், ஆவணக்குறிப்புஎண்: WL5/35913/2013. மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகமும், இந்திய வனவிலங்கு அறக்கட்டளையும், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியமும், யானைகள் பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் பல்வேறு விஞ்ஞானிகளும், ஈஷாமையம், யானை வலசைப்பாதைக்கு அருகில் கூடஇல்லை என்பதை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈஷா அறக்கட்டளை எழுப்பியுள்ள அத்தனை கட்டிடங்களுக்கும், ஜுலை 2017-ம் ஆண்டிற்கு முன்னமே, 58-வது ஹாகா சந்திப்பில், மலைத்தளபாதுகாப்பு குழுமம் அனுமதி வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் தடையின்மைச் சான்றிதழை வழங்கிய பின்னரே ஹாகா தன் ஒப்புதலை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது" என்று பதில் அளித்துள்ளது.Trending Articles

Sponsored