``சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை ஆதரிக்கும் முன், `காலா’ படம் பார்த்தீர்களா ரஜினி?!’’ - சீமான்



Sponsored



``நிலம் உங்களுக்கு அதிகாரம்; எங்களுக்கு அது வாழ்க்கை". இந்த வசனம் அண்மையில் வெளியான `காலா' திரைப்படத்தில் ரஜினி பேசிய டயலாக். அந்தப் படத்தில் நில உரிமைக்காகப் போராடும் போராளி கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். அந்தத் திரைப்படத்தில் ரஜினி பேசிய டயலாக், தமிழக மக்களின் காதுகளிலிருந்து இன்னும் மறையவில்லை. அதற்குள் தமிழக அரசின் 8 வழிச்சாலைத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேட்டியளித்துள்ளார் ரஜினிகாந்த்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு ரஜினி அளித்த பேட்டியில், ``8 வழிச்சாலை போன்ற பெரும் திட்டங்கள் வர வேண்டும். இதுபோன்றத் திட்டங்களால் நம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும். வேலைவாய்ப்புகள் பெருகும். இதனால் நாடு வளர்ச்சி அடையும். எனவே, இப்படியான பெரிய திட்டங்கள் வரும்போது இழப்புகள் வரத்தான் செய்யும். அந்த இழப்பைச் சந்திக்கக் கூடியவர்கள், மகிழ்ச்சி அடையும் வகையில் அதற்கான இழப்பீட்டையும், மாற்று நிலத்தையும் அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்க வேண்டும்.

Sponsored


முடிந்தவரை விவசாய நிலங்கள் பாதிக்காதவகையில் இதுபோன்ற திட்டங்களைச்  செயல்படுத்தினால் மிகுந்த மகிழ்ச்சி" என்றார். 

Sponsored


ரஜினியின் இந்தக் கருத்தை விவசாயிகள் மற்றும் இத்திட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருப்பவர்கள் எனப் பலரும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ``8 வழிச்சாலைத் திட்டத்துக்காக, தமிழக அரசு நிலத்தை எடுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசுக்கு ஆதரவான கருத்தை ரஜினி தெரிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது. அவருடைய கருத்தின் மூலம் ஒன்றை மட்டும் தெளிவாகத் தெரிந்துகொள்ளமுடிகிறது. விவசாயிகளை 'வலிக்காமல் குத்துங்கள்' என்கிறார். ஐயா ரஜினிக்கு ஒரு கேள்வி. 'உங்களுடைய ராகவேந்திரா மண்டபத்தின் நடுவே இந்தச்சாலை வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? நாட்டின் வளர்ச்சிக்கு என்று விட்டுக்கொடுத்து விடுவீர்களா?'

`காலா' திரைப்படத்தில் நில உரிமை குறித்து, பக்கம் பக்கமாக வசனம் பேசிவிட்டு, இப்படி விவசாயிகளின் நிலத்தை எடுக்கும் அரசாங்கத்துக்கு துணைபோவது துரோகம் இல்லையா? நல்ல வேளை, தூத்துக்குடிச் சென்றுவிட்டு, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை `சமூக விரோதிகள்' எனக் கூறியதுபோல் 8 வழிச்சாலையை எதிர்த்து போராடும் விவசாயிகளையும் நேரில் சென்று சந்தித்தப் பின்னர், அவர்களையும் `சமூக விரோதிகள்' என்று ரஜினி சொல்லாமல் விட்டுவிட்டார்.

மலைகளைக் குடைந்தும், மரங்களை வெட்டியும், விவசாய நிலங்களை அழித்தும், 8 வழிச்சாலை அமைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு ஏன் வந்தது. ஏற்கெனவே கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு 6 வழிச்சாலை உள்ளது. அதேபோன்று சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு உளுந்தூர்பேட்டை மார்க்கமாக நான்கு வழிச்சாலையும் உள்ளது. அப்படி இருக்கும்போது அவசர அவசரமாக விளைநிலங்களைக் கையகப்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் தேர்வெழுதிக் கொண்டிருக்கும்போதே நிலத்தை ஆர்ஜிதப்படுத்த அதிகாரிகள் கல்லை நடுகிறார்கள். மாணவர்களைத் தேர்வுகூட எழுதவிடாமல் நிலம் அளவெடுக்க வேண்டிய அவசரம் ஏன். 8 வழிச்சாலையை நிறைவேற்றியே தீரவேண்டும் என மக்கள் போராடினார்களா? மக்களுக்காக நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் நிறைய இருக்கின்றதே. தமிழகத்தின் தலைநகரில் அனைத்து இடங்களிலும் சாலைகள் உள்ளதா? ஏன், முதலில் அரசுப் பேருந்துகள் ஒழுங்காக உள்ளனவா? மழை பெய்தால் அனைத்துப் பேருந்துகளிலும் மக்கள் குடையைப் பிடித்துக்கொண்டு நிற்க வேண்டிய நிலையில்தான் பேருந்துகள் உள்ளன. ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்க, மக்களின் வாழ்வாதாரத்தில்தான் கைவைக்க  வேண்டுமா?

சாலை போடுவது, விரைவாகச் செல்வதுதான் வளர்ச்சி என்று கற்பித்தவர்கள், நாட்டின் வளர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்கள், இதுதான் வளர்ச்சி என்று ஆதாரத்துடன் விளக்கம் தரமுடியுமா. தொழில் வளர்ச்சியை மட்டும் வைத்துதான் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி கணக்கிடப்படுகிறதா, வேளாண் வளர்ச்சியைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லையா? விவசாயத்தை அழித்து, இங்கே தொழில்புரட்சி ஏற்பட எந்தத் தேவையும் இல்லை. அதையும் மீறி விளைநிலங்களில் கல்லை நட்டார்கள் எனில், எதிர்காலத்தில் குடிநீர் விற்பவர்களும், சாப்பாடு விற்பவர்களும் இருந்ததாக மட்டுமே சரித்திரம் பேசும்" என்றார் கோபமாக.



Trending Articles

Sponsored