35000 ஏக்கரிலிருந்து 1,50,000 ஏக்கர்... இயற்கை விவசாயத்தில் வேகமாக முன்னேறும் பாகிஸ்தான்!



விவசாயத்தில் இப்போது இயற்கை விவசாயம்தான் ஹாட் டாபிக். கடந்த ஆண்டு இந்தியாவின் முதன்மை இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் மாறியது. அதை உதாரணமாக எடுத்துக்கொண்டு ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் இயற்கை விவசாயத்தின் பக்கம் தீவிரமாக திரும்பிக்கொண்டிருக்கின்றன. அதில் தமிழகம் பின்தங்கியிருப்பது சோகமான கதைதான். இது ஒருபக்கம் இருந்தாலும், இந்தியாவைப் பொறுத்தளவில் இயற்கை விவசாயத்தில் இன்னும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த விஷயத்தில் பாகிஸ்தான் கொஞ்சம் சீக்கிரமாக விழித்துக்கொண்டிருக்கிறது. 

Sponsored


Photo - Pakistan Agriculture

Sponsored


இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் பாகிஸ்தான், இயற்கையைக் காக்கும் விஷயத்தில் இந்தியாவை விட அதிக ஆர்வம் காட்டி வருகிறது. ஆம், பல ஆண்டுகளாக வறட்சியாக இருந்த மலைகளை பசுமைச் சோலைகளாக மாற்றியிருக்கிறார்கள். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியான ஹெரோஷாவின் பெரும்பாலான வறண்ட நிலப்பரப்பு இன்று காடுகளாக காட்சியளிக்கிறது. அங்கு பில்லியன் கணக்கிலான மரங்கள் நடப்பட்டுள்ளன. காடுகள் அழிப்புக்கு எதிராக ஒரு காட்டையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டமாக இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வழியில் பாகிஸ்தான் அரசும், மக்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். 

Sponsored


பாகிஸ்தான் வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்படி, இயற்கை வேளாண்மையின் மொத்த பரப்பளவு 2005-ம் ஆண்டில் 35,000 ஏக்கராக இருந்தது. அந்த எண்ணிக்கை 2010-ம் ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கராக உயர்ந்தது. பாகிஸ்தான் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் முயற்சியை கடந்த 2005-ம் ஆண்டே தொடங்கிவிட்டது. 2010-ம் ஆண்டு கணக்கின்படி மொத்தமாக 33 சதவிகிதம் விவசாயிகள் அப்போதே இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டனர். வரும் காலங்களில் அதிகமான விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்ப வேண்டும் என அப்போதே அரசாங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்டது. 

இயற்கை உரங்களைப் பயன்படுத்திய விவசாயிகளும் நிலம் முன்பை விட வளமாக இருப்பதாகவும், நீர் குறைவாகச் செலவானதாகவும் தங்கள் அனுபவங்களைப் பயன்படுத்திக்கொண்டனர். அந்த வார்த்தைகள் அதிகமான விவசாயிகளிடம் இயற்கை விவசாயத்தைப் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில் பின்பற்றப்பட்டு வரும் இயற்கை விவசாயமுறை சற்று வித்தியாசமானது. அங்கு இயற்கை விவசாயம் செய்பவர்கள் நாட்டு விதைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் அதிகமாகப் பயன்படுத்துவது இல்லை. அவற்றுக்குப் பதில் இயற்கை உரங்களை அதிகமாகப் பயன்படுத்தி, தண்ணீர்ப் பயன்பாட்டை குறைத்துக் கொள்கிறார்கள். இயற்கை விவசாயத்தில் குறைவான மகசூல் கிடைத்தாலும், ரசாயன பூச்சிக் கொல்லிகளுக்கான செலவுகள் இல்லாதபோது லாபம் அதிகமாகக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள் பாகிஸ்தானிய விவசாயிகள். 

இப்போது பாகிஸ்தானிலிருந்து கோதுமை, காய்கறிகள் ஆகியவை ஏற்றுமதியாகின்றன. மத்திய கிழக்கு ஐரோப்பாவுக்கு பழங்களை  ஏற்றுமதி செய்வதும் அதிகரித்து வருகின்றன. இன்னும் பாகிஸ்தான் முறையான இயற்கை விவசாயச் சான்றிதழ் கொடுக்காமல் இருந்தாலும், பன்னாட்டு நிறுவனங்களின் உதவியோடு விளைபொருள்களின் தரத்தைச் சோதித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். விவசாயிகள் குழுக்களாகச் சேர்ந்து சிறு மற்றும் குறு விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றி வருகின்றனர். 

உலக வங்கிக் கணக்கெடுப்பின்படி, மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களில் 68 சதவிகிதம் பேர் விவசாயம் செய்து வருகிறார்கள். இன்னும் அதிகமானோர் விவசாயம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
``அரசாங்கம் உணவுப் பாதுகாப்பின் தரத்தை உயர்த்துவதற்கு உணவுப் பாதுகாப்பு விதிகளை அறிமுகப்படுத்துகிறது. அதில், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும்போது உணவுப் பாதுகாப்புப் பிரச்னையை அரசாங்கம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இயற்கை வேளாண்மை குறைந்த விளைச்சல் கொடுத்தாலும், அது ஒரு பெரிய அளவில் உணவுப் பாதுகாப்பு பிரச்னையைத் தவிர்க்கும்" என்கிறார், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பாகிஸ்தானிய சங்கத்தின் தலைவர் தன்வீர் ஆரிஃப்,

இதுபோக மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகளும் இயற்கை விவசாயத்தில் பயன்படுகிறது. இதுபோல அதிகமான யுக்திகளை பாகிஸ்தான் விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இந்தியாவில் சிக்கிம் மட்டுமே இயற்கை விவசாய மாநிலமாக மாறியிருக்கிறது, மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களின் (சாகர்மாலா, மீத்தேன், ஹைட்ரோகார்பன்) மீது தனது பார்வையைத் திருப்பியிருக்கிறது. இந்திய அரசு தனது பார்வையை இயற்கை விவசாயத்தின் பக்கம் திருப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணரும் தருணமும் இதுதான். 


 



Trending Articles

Sponsored