”ஒரு தடவை எங்க ஊருக்கு வாங்க!” - குப்பையையும் அழகாக்கிய உத்திரமேரூர் பேரூராட்சிSponsoredத்திரமேரூர் பேருராட்சிக்கு ஒரு காலைப்பொழுதில் சென்றோம். அதன் அலுவலகத்தில் நுழையும் முன்பே மூலிகைத் தோட்டம், சுவர்களில் அலங்காரச் செடிகள் என நம்மை இயற்கையோடு வரவேற்றது. உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவனை சந்தித்துப் பேசினோம். அவரது காரில் நம்மை ஏற்றிக்கொண்டவர் திடக்கழிவு மேலாண்மைத் திட்டச் செயல்பாடுகள் குறித்து விவரித்துக்கொண்டே உத்திரமேரூரைச் சுற்றிக் காண்பித்தார். குப்பையில்லாத வீதிகள், ஒவ்வொரு வீட்டுக்கு வெளியேயும் செடிகள், ஆங்காங்கே தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு செய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள், டயர்களில் செய்யப்பட்ட பொம்மைகள் அடங்கிய பூங்காக்கள் என ஊரே அழகாகக் காட்சி அளிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை செய்யும் இடத்துக்குச் சென்றோம். அந்த இடமே ஒரு நந்தவனம் போல பசுமையாகக் காட்சியளிக்கிறது.

மட்காத பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு அந்தப் பகுதியையே அழகுபடுத்தியிருக்கிறார்கள். அவற்றைக் கொண்டு ராட்சத பொம்மைகள், சேர்கள், அலங்காரப் பொருள்கள் என ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மரங்கள், காய்கறித் தோட்டங்கள், மூலிகைத் தோட்டங்கள் எனச் சிறிய அளவிலான விவசாயப் பண்ணையும் இருக்கிறது. காய்கறி கழிவுகளை அங்கு வளர்க்கப்படும் விலங்குகளுக்கு உணவாகக் கொடுக்கிறார்கள். லவ் பேர்ட்ஸ், வாத்து, கோழி, முயல் போன்றவையும் அங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.

Sponsored


Sponsored


அதைத்தொடர்ந்து நம்மிடம் பேசிய செயல் அலுவலர் மா.கேசவன், ``உத்திரமேரூர் பகுதியில் 150 வீடுகளுக்கு ஒரு பிரிவு என 34 பிரிவாகப் பிரித்திருக்கிறோம். இரண்டு இடங்களில் சேமிப்பு மையங்களை ஏற்படுத்தி அங்கேயே தரம் பிரித்துவிடுவோம். ஒரு நாளைக்குச் சராசரியாக 3 டன் மட்கும் குப்பை கிடைக்கிறது. அதில் மட்காத குப்பை சுமார் 25 சதவிகிதம் இருக்கும். மட்கும் குப்பைகளை `வின்ரோ’ முறையில் கொட்டி அதன் மீது சாணம் தெளிக்கிறோம்.

தினமும் தண்ணீர் தெளித்து 15 நாள்களுக்கு ஒரு முறை திருப்பிப் போடுவோம். மூன்று மாதங்களில் அவை இயற்கை உரமாக மாறிவிடும். அதைச் சலித்து எடுப்போம். அதுபோல் 30 நாள்கள் மட்டுமே ஆன குப்பைகளைக்கொண்டு மண்புழு உரம் தயாரிப்போம். மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டியில் மணல், களிமண், ஜல்லி, மண் பல அடுக்குகளாக நிரப்பி அதில் பாதி மட்கிய அளவில் உள்ள குப்பைகளைக் கொட்டுவோம். பாதி மட்க வைத்துக் கொடுப்பதால் சமைத்த உணவைப் போல மண்புழுக்கள் இதை உணவாக எடுத்துக்கொள்ளும். மண்புழு உரம் தயாரிப்பதற்காகவே ஆப்பிரிக்க வகை புழுக்களைப் பயன்படுத்துகிறோம். இந்த வகை மண்புழுக்கள் அதிக அளவுக் குப்பைகளை சாப்பிட்டுவிட்டு, அதிக அளவு உரத்தைக் கொடுக்கும். இனப்பெருக்கமும் அதிக அளவில் செய்யும்.

ஒரு நாளுக்கு சுமார் 30 கிலோ வரை மண்புழு உரம் கிடைக்கிறது. இயற்கை உரம் 300 கிலோவிலிருந்து 500 கிலோ வரை கிடைக்கிறது. தேவையான அளவுக்கு ஆட்கள் வசதி, இடவசதி, தண்ணீர் வசதி ஆகியவை இருந்தால்தான் மண்புழு உரம் தயாரிக்க முடியும். மண்புழு உரங்களை வாரச்சந்தையில் விற்பனை செய்வோம். இயற்கை உரத்தை 2 ரூபாய்க்கும், மண்புழு உரத்தை 5 ரூபாய்க்கும் விவசாயிகள் வாங்கிச் செல்கிறார்கள். இந்தப் பகுதியில் இயற்கை விவசாயிகள் அதிக அளவில் இருக்கிறார்கள். அதனால், நாங்கள் உற்பத்தி செய்யும் உரங்கள் தேக்கமடைவதில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு `பசுமை விகடன்' நடத்திய நிகழ்ச்சியில் கழிவுகளை விரைவாக மட்க வைக்க `வேஸ்ட் டீகாம்போஸர்’ என்னும் புதிய யுக்தியைப் பற்றி தெரிந்துகொண்டோம். அதையும் இங்குச் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். குப்பைகளை வீட்டிலேயே உரமாக்கிக் கொள்ள இப்பகுதி மக்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறோம். இதனால் இங்குள்ள 6500 வீடுகளில் 2500 பேர் அவர்களது வீட்டிலேயே குப்பைகளை உரமாக்கிக் கொள்கிறார்கள். பிளாஸ்டிக் பொருள்களை மட்டுமே எங்களிடம் கொடுக்கிறார்கள்.

தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்களைத் தூக்கி எறியாமல் ஒருபொருளை அப்படியே இன்னொரு பொருளாக மாற்ற `அப்சைக்கிள்’ முறையைப் பயன்படுத்துகிறோம். பழைய டயர்களைக் கொண்டு குதிரை, டைனோசர், கொரில்லா உள்ளிட்ட பொம்மைகளை உருவாக்கி இருக்கிறோம். வருடத்துக்கு ஒருமுறை பள்ளி மாணவர்களுக்கு, தேவையற்ற பொருள்களைக் கொண்டு அழகு பொருள்களை செய்ய  போட்டி வைத்து பரிசுகளைக் கொடுப்போம். பிளாஸ்டிக்கைத் தமிழகத்தில் உருக்குவதற்கு அனுமதி கிடையாது. அதனால், பிளாஸ்டிக் பொருள்களை கிலோ 2 ரூபாய்க்கு பெங்களூரில் இருப்பவர்கள் வாங்கிச் செல்கிறார்கள். பொது இடங்களில் மலம் கழிப்பதைத் தவிர்க்க இலவசமாகக் கழிவறைகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறோம்.

பூச்செடிகள், மூலிகைகள், மரக்கன்றுகள் ஆகியவை உற்பத்தி செய்வதற்கு நர்சரி வைத்துள்ளோம். உற்பத்தி செய்யும் செடிகளை மூலிகைக் கண்காட்சி வைத்து விற்பனை செய்வோம். தோட்டங்களில் விளையும் கீரை காய்கறிகளையும் சந்தையில் விற்பனை செய்வோம். உத்திரமேரூர் பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட குளங்களைத் தூர்வாரியிருக்கிறோம். பெரும்பாலான குளங்கள், இருந்த அடையாளமே தெரியாமல் இருந்தன. அவற்றை அரசு ஆவணங்களைக் கொண்டு தேடிக் கண்டுபிடித்திருக்கிறோம். இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. உத்திரமேரூர் பேரூராட்சிக்கு 9001, 14000 என இரண்டு ISO தரச்சான்று வழங்கப்பட்டிருக்கின்றன. மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இவ்வளவு பணிகளையும் செய்ய முடியும். இப்பகுதி மக்கள் எங்களுக்கு நன்றாகவே ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்” என்கிறார் மகிழ்ச்சியாக.Trending Articles

Sponsored