"வல்லூர் அனல்மின் நிலையம் அனுமதியின்றியே இயங்குகிறது" - அதிர்ச்சி கிளப்பும் அரசின் அறிக்கை



Sponsored



ரசின் அனல்மின் நிலையங்களும், காமராஜர் துறைமுகமும், இரண்டு எண்ணெய் நிறுவனங்களும் எண்ணூரின் பல்லுயிர்த்தன்மையை முற்றிலுமாகச் சிதைக்கிறார்கள் என்பதுதான் இந்தப் பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக வைக்கும் குற்றச்சாட்டு. இந்தப் பகுதியில் ஓடும் கொசஸ்தலை ஆற்றின் மீது படிந்திருக்கும் சாம்பல் மண்டலமே அதற்கு சாட்சி. தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது மத்திய சுற்றுச்சூழல் துறையின் அறிக்கை ஒன்று. அந்த அறிக்கையைப் பற்றி பார்க்கும் முன்பு, அதன் பின்னணியைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

புகார் அளித்த மீனவர்கள் 

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகர் அருகே அமைந்திருக்கிறது வல்லூர் அனல்மின் நிலையம். தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் மத்திய அரசின் NTPC (National Thermal Power Corporation Limited) ஆகிய இரண்டில் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது இந்நிறுவனம். இந்த அனல்மின் நிலையம் வெளியேற்றும் சாம்பல் கழிவுகள் தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றை மாசுபடுத்துகின்றன என்றும், இந்த நிறுவனம் கட்டிவரும் புதிய சாம்பல் குட்டையானது சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த அலையாத்திக் காடுகளை அழித்தே கட்டப்படுகிறது என்றும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அரசிடம் புகார் தெரிவித்துவந்தனர். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம், பேரிடர் மேலாண்மை ஆணையம், தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மைக் குழுமம், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை ஆகிய துறைகளிடம் இந்த ஆண்டில் தொடக்கத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமானது, இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு கடந்த மே மாதம் முதல், வல்லூர் அனல்மின்நிலையத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்தது. அந்த அறிக்கையைத்தான் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது மத்திய சுற்றுச்சூழல் துறை.  

Sponsored


Sponsored


என்ன பிரச்னை?

எல்லா அனல்மின் நிலையங்களும் தங்களின் சாம்பல் கழிவுகளை 100 சதவிகிதம் முழுமையாகக் கையாள வேண்டும் என்பது விதி. அதன்படி அந்தச் சாம்பல் கழிவுகளை கற்கள் தயாரிக்கவோ, அல்லது வேறு ஏதேனும் வழியில் மறுசுழற்சி செய்யவோ தரவேண்டும். அதுவரைக்கும் இந்தக் கழிவுகளை அனல்மின் நிலையத்துக்கு அருகிலேயே தேக்கிவைப்பார்கள். அதற்கான அமைப்புதான் சாம்பல் குட்டை. இந்தச் சாம்பல் குட்டையில் தேங்கும் சாம்பல் கழிவுகளில் காட்மியம், குரோமியம், செலினியம், பாதரசம், ஈயம் போன்ற கன உலோகங்களும் கலந்திருக்கும். இவை நேரடியாக நிலத்தில் சேமிக்கப்பட்டால் இந்த உலோகங்கள் நிலத்தடி நீரில் கலக்கவும் வாய்ப்புண்டு. எனவே, இந்தக் குட்டையில் சாம்பல் கழிவுகளைச் சேமிக்கும் முன்பாகவே, இந்தக் கழிவுகள் பூமிக்குள் செல்லாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் போன்ற ஒரு பூச்சு குட்டையின் அடிப்பரப்பில் பூசப்படும். இதற்கு பிளாஸ்டிக் லைனர் என்று பெயர். அதன்பின்தான் சாம்பல் கழிவுகள் சேமிக்கப்படும். சரி... தற்போது பிரச்னைக்கு வருவோம். 

1500 மெகாவாட் திறன்கொண்ட வல்லூர் அனல்மின்நிலையமானது இதற்கு முன்பு ஒரே ஒரு சாம்பல் குட்டையை மட்டுமே கொண்டிருந்தது. அது முழுமையாக நிரம்பிவிட்டதால், 140 ஏக்கரில் இரண்டாவது சாம்பல் குட்டையைக் கட்ட முடிவு செய்தது இந்நிறுவனம். இதற்காகச் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காகவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. அதில் இரண்டாவது சாம்பல் குட்டையை அனல்மின் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் கட்டப்போவதாக அதில் கூறியிருந்தது. ஆனால், தற்போது கட்டிக்கொண்டிருப்பதோ வேறு இடத்தில். அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு முற்றிலும் எதிராக இந்நிறுவனம் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். 

இந்தப் பகுதியில் இதற்காக நீண்டகாலமாகப் போராடி வரும் ஊரூர் குப்பம் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதி சீனிவாசன் கூறுகையில், ``வல்லூர் அனல்மின் நிலையம், சாம்பல் குட்டை கட்டுவதற்காக விண்ணப்பித்த இடத்திலிருந்து, வேறு இடத்தில் சாம்பல் குட்டையைக் கட்டுவதாகப் பல மாதங்களுக்கு முன்பாகவே அரசிடம் புகார் அளித்தோம். தற்போது அதனை அரசே இந்த அறிக்கையின் மூலம் உண்மை என ஒப்புக்கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கும் புதிய சாம்பல் குட்டையானது, CRZ-1 பகுதியில் வருகிறது. அதாவது மிகவும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. எனவே, இந்த இடத்தில் எவ்வித வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. ஆனால், அரசோ அதை மதிக்காமல் கொசஸ்தலை ஆற்றின்மீதே கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கட்டிவரும் இரண்டாவது சாம்பல் குட்டைக்காக ஆற்றையே ஆக்கிரமித்து கட்டுவதுடன், எண்ணூரின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியமான அலையாத்திக் காடுகளையும் அழித்துவருகிறது. ஏற்கெனவே, இந்தப் பகுதியில் சூழலியல் சீர்கேடுகள் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்த அரசு, தற்போது இந்தப் பகுதி பொதுமக்களுக்கும் தீங்கிழைக்கிறது" என்கிறார்.

``இந்த அறிக்கையில் இன்னும் பல விஷயங்கள் தெரியவந்துள்ளன. வல்லூர் அனல்மின் நிலையமானது காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம் 1981 மற்றும் நீர்மாசுபாடு தடுப்புச் சட்டம் 1974 ஆகிய சட்டங்களின் படி இயங்குவதற்கான அனுமதி கடந்த 1/04/2018 அன்றோடு முடிந்துவிட்டது. அனுமதியின்றிதான் தற்போது இயங்கிவருகிறது. இந்தக் காரணத்திற்காகவே தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால், எடுக்காமல் இருக்கிறார்கள். இதேபோல, புதிதாகக் கட்டப்பட்டுவரும் சாம்பல் குட்டையானது இதற்கு முன்பு விண்ணப்பத்தில் கூறப்பட்டிருக்கும் இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் முறையாக இந்நிறுவனம் தெரிவிக்கவில்லை. அதிகச் செலவாகும் என்பதால் அந்த இடத்தைக் கைவிட்டிருக்கின்றனர். மேலும் தற்போது செயல்பாட்டில் இருக்கும் சாம்பல் குட்டையானது பிளாஸ்டிக் லைனர் இல்லாமல்தான் இருக்கிறது. இதனால் இந்தப் பகுதி நிலத்தடி நீரில் கன உலோகங்கள் கலக்கவும் வாய்ப்பிருக்கின்றன. முறைப்படி இந்த நிறுவனமானது, வெளியேறும் சாம்பல் கழிவுகளை 100 சதவிகிதம் அளவுக்கு மறுசுழற்சிகாகத் தரவேண்டும். அந்த விதியையும் மீறியிருக்கிறது. இதுதவிர உரிய அனுமதியின்றி சுடுதண்ணீரையும் வெளியேற்றிவருகிறது. இதெல்லாம் ஒருபுறம் என்றால், மறுபுறம் காமராஜர் துறைமுகமும் எண்ணூரின் கழிமுகப்பகுதியைப் படிப்படியாக ஆக்கிரமித்துவருகிறது. 

சென்னையில் உள்ளே இருக்கும் கால்வாய்கள் அனைத்தும் எண்ணூர் வழியாகத்தான் கடலில் கலக்கும். ஆனால், அந்தத் தொடர்பை அனல்மின் நிலையங்களும், எண்ணெய் நிறுவனங்களும் அறுத்துவிட்டதால் தற்போது சிறுமழை வந்தால்கூட அத்திப்பட்டு புதுநகரில் தண்ணீர் தேங்கிவிடும். இதுவே பெரிய மழையோ அல்லது வெள்ளமோ வந்தால் நிச்சயம் இந்தப் பகுதியில் பேரழிவு ஏற்படும்." என அதிர்ச்சியளிக்கும் பல உண்மைகளை முன்வைக்கிறார் கடல்வள மையத்தைச் சேர்ந்த பூஜா குமார்.

வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் பல ஆண்டுகளாக தாங்கமுடியாத வாதையை அனுபவித்துவரும் இந்தப் பகுதி மக்கள், இத்தனை ஆண்டுகளாக எதையெல்லாம் கூறினார்களோ, அதையேதான் அறிக்கையும் உறுதி செய்திருக்கிகிறது. இத்தனைக்கும் இது எண்ணூர் கழிமுகத்தில் இயங்கும் ஒரே ஒரு நிறுவனத்தைப் பற்றி மட்டும்தான். மற்றவற்றின் நிலை? தற்போது இந்த அறிக்கையை ஆதாரமாக வைத்து மீண்டும் அரசு அலுவலகங்களிடம் புகார் கொடுக்கப்போவதாக தெரிவிக்கின்றனர் மீனவர்கள். எண்ணூர் மக்களின் வாழ்க்கை, சென்னையின் சூழலியல்... இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் அச்சாணி இது. வரும் ஆண்டுகளிலும் தொடரக் கூடாது!

Note:  இந்தப் பிரச்னை தொடர்பாக வல்லூர் அனல்மின் நிலையம் ஏதேனும் விளக்கங்கள் கூற முற்பட்டால், அதை பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

மத்திய சுற்றுச்சூழல் துறையின் அறிக்கை இணைப்பு: http://environmentclearance.nic.in/writereaddata



Trending Articles

Sponsored