காடுகளில் வசிப்பவர்களைப் பாதிக்கிறதா தேசியக் காடுகளுக்கான வரைவுக் கொள்கை?



காடுகளின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு மேலாண்மையைக் கருத்தில்கொண்டு தேசியக் காடுகளுக்கான கொள்கை, கடந்த 1952-ம் ஆண்டில் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. காடுகள் என்று குறிப்பிடும் நிலையில், அவற்றில் வசிக்கும் குடிமக்களும் அவர்களின் பாதுகாப்பும் இந்தக் கொள்கையின் கீழ் வரையறுக்கப்படும். இந்நிலையில், காடுகளுக்கான புதிய வரைவுக் கொள்கையை கடந்த மார்ச் 2018-ல், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. இந்த வரைவின் மீதான தங்களின் கருத்துகளைப் பொதுமக்கள் பதிவுசெய்ய காலஅவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இறுதி வரைவு அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இந்த வரைவுக் கொள்கை, வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக மத்தியப் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.

Sponsored


மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சகச் செயலாளருக்கு இதுகுறித்தான கடிதம் எழுதியுள்ள பழங்குடியின விவகாரத்துறைச் செயலாளர் லீனா நாயர், ``காடுகளுக்கான வரைவுக் கொள்கையைத் தயாரிக்க, மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு என்று தனியாக அதிகார வரம்பு கிடையாது. அவர்கள் இந்த வரைவுக் கொள்கையைத் தயாரிப்பதற்கு முன்பு பழங்குடியின விவகாரத்துறையையும், பழங்குடியின மக்களையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Sponsored


மேலும், ``1988-ம் ஆண்டில்தான் காடுகளுக்கான கொள்கையில் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் புதிய வரைவுக் கொள்கை வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அது காடுகளின் காவலர்களான பழங்குடி மக்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் புறந்தள்ளிவிட்டு எழுதப்பட்ட வரைவாகவே தெரிகிறது. மேலும் தனியார்மயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலுக்குப் பெரும் இடத்தை இந்தப் புதிய வரைவு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. குறிப்பாக, காடு வளர்ப்பு மற்றும் வனப்பகுதி வேளாண்மைக்காகத் தனியாரிடம் காடுகளை விட்டுக்கொடுப்பது, காடுகளுக்கான உரிமைச் சட்டம் 2006-ன் கீழ், பழங்குடி மக்களுக்கான நில உரிமையைப் பாதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Sponsored


கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்...

பழங்குடி மக்கள் மற்றும் காடுகளில் வசிப்பவர்கள் என மொத்தம் 30 கோடிக்கும் மேற்பட்டோர் காடுகளையும், அவற்றின் பயன்பாட்டையும் நம்பி வசித்து வருகிறார்கள். நடைமுறையில் இருக்கும் சட்டம், காடுகளில் வசிப்பவர்களால் வழிவழியாகப் பயன்பாட்டில் இருக்கும் நிலங்களை, அவர்களுடைய உடன்பாடு இல்லாமல் எந்தவகையிலும் தனியார் உபயோகிக்க முடியாது என்று குறிப்பிடும் நிலையில், புதிய வரைவுக் கொள்கையானது அதற்கு நேர் எதிராக அமைந்திருக்கிறது. டிம்பர் ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுவரும் தனியார் நிறுவனங்கள், காடுகளைத் தங்களுடைய விவசாயப் பயன்பாட்டுக்கு அளிக்குமாறு நீண்டநாள்களாகக் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், இந்தத் தொழில் நிறுவனங்கள் தனியார் தோட்டங்களிலிருந்து தங்களுக்குத் தேவையான உற்பத்திப் பொருள்களை எடுத்துக்கொள்ளும்படி, 1988-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்கை திருத்தம்வரையில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. பாதுகாக்கப்பட்ட காடுகள் இதனால் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாது. இந்தக் கொள்கை திருத்தத்தை அதன்பிறகு தொடர்ச்சியாக வந்த அரசுகளும் பின்பற்றின. காடுகளில் நில அபகரிப்புப் பிரச்னைகள் ஒருபக்கம் தொடர்ந்தாலும் 2006-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட காடுகள் உரிமைச் சட்டம் அந்தச் சிக்கலை ஓரளவுக்குத் தீர்ப்பதாய் அமைந்தது. ஆனால், 2015-ல் பி.ஜே.பி. தலைமையிலான அரசு, `காடுகளின் வளர்ச்சி மற்றும் வேளாண்மையைக் கருத்தில் கொண்டு' தனியாருக்குக் காடுகளைக் கொடுக்க முன்வந்தது. காடுகளுக்கான கொள்கை 1988-ல் இருந்த கொள்கை முடிவுகள் காரணமாக, அந்தத் திட்டம் அப்போது கைவிடப்பட்டது. இந்த நிலையில் புதிய வரைவுக் கொள்கை தனியாருக்குக் காடுகளில் அனுமதி அளிக்கும் சூழலில், 2015-ல் மேற்கொள்ளப்படவிருந்த சட்டத்திருத்தமும் நடைமுறைக்கு வர வாய்ப்பிருக்கிறது...

பழங்குடியின விவகாரத்துறைச் செயலாளரின் கடிதத்தை அடுத்து, அவர்களுடைய கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் பதில் கூறியுள்ளது. அதைத் தொடர்ந்து, இதுபோன்ற தேசிய விவகாரங்களில் தங்கள் கருத்துகளையும் முன்கூட்டியே பெற்றுக்கொள்ளும்படி, சுற்றுச்சூழல் அமைச்சகத்தை பழங்குடியின விவகாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 



Trending Articles

Sponsored