Sponsored
ஆடிக்காற்றில் ஸ்டெர்லைட்டைச் சுற்றியிருக்கும் காற்றாலைகள் வேகமாகச் சுற்றத் தொடங்கிவிட்டன. ஸ்டெர்லைட்டின் வாசலில் இருக்கும் செயற்கை புல்தரை இன்னும் புதராக மண்டிவிடவில்லை. புற்களும் செடிகளும் அளவாக வெட்டப்பட்டு அழகு கெடாமல் பராமரிக்கப்பட்டுவருகின்றன. செக்யூரிட்டிகளும் காவல்துறையினரும் அந்த வஜ்ரா வாகனமும் ஸ்டெர்லைட்டைப் பாதுகாத்து நிற்கின்றன.
இதுவரை பேசாதிருந்த ஸ்டெர்லைட் நிர்வாகம், பேசத் தொடங்கிவிட்டது. சட்ட விதிமீறல்களின்றி, சூழலுக்கும் சுற்றியிருக்கும் மக்களுக்கும் பாதுகாப்பாக தாங்கள் செயல்பட்டுவந்த தன்னிலை விளக்கத்தை, தக்க ஆதாரங்களோடு ஊடகங்கள் முன் வைக்கத் தொடங்கியிருக்கிறது ஸ்டெர்லைட். மறுபக்கம் அந்த ஆதாரங்களின் பிழைகளையும் பிறழ்களையும் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றனர் சில சூழலியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
Sponsored
ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிக்கச் சென்றுவிட்டார். அவரும், இன்னும் சிலரும் சொன்ன `சமூக விரோதிகளை' காவல்துறை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறது. தூத்துக்குடி, இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. தமிழ்நாடு, தன்னியல்பாக தூத்துக்குடியை மறந்து அடுத்தடுத்த பிரச்னைகளில் மூழ்கத் தொடங்கிவிட்டது.
Sponsored
இரண்டு மாதங்களாகியும் ஸ்னோலின் அம்மா இன்னும் வீட்டைவிட்டு வெளிவரவில்லை.
`ப்ளீஸ் ப்பா... குடிக்காதீங்க. நீங்க இந்த உலகத்துல நிறைய நாள் வாழணும். நீங்களும் அம்மாவும் என்ன நல்லா படிக்கவெச்சு, நான் ஒரு
ஸ்னோலின் தன் டைரியில் எழுதியிருந்த இதைப் படித்துவிட்டு, துக்கம் தாளாமல் முன் எப்போதையும்விட மிக அதிகமாகக் குடிக்கத் தொடங்கியுள்ளார் ஸ்நோலின் அப்பா.
ஜான்சியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெண் குழந்தைகளின் அழுகை இன்னும் நின்றபாடில்லை. எந்நேரமும் தேவாலயத்திலேயே குடியிருக்கிறார்கள். அதுதான், அவர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாகச் சொல்கிறார்கள்.
இன்னும் காளியப்பன், தமிழரசன், ஜெயராமன், கந்தையா, கிளாஸ்டன், கார்த்திக், பாரத்ராஜா எனப் பலரின் குடும்பங்களும் ஆழ்ந்த வேதனையில் உழன்றுகொண்டிருக்கின்றன.
இது மே 22 துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களின் கதை. குண்டடிபட்டு வாழ்வை இழந்து, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களின் பட்டியல் மிக நீளம். இதெல்லாம் ஒருபுறம் இருக்க... தூத்துக்குடிப் பகுதி மக்களை இன்னும் ஸ்டெர்லைட்டின் பேரில் கைதுசெய்துகொண்டே இருக்கிறது காவல்துறை. பிணையில் வெளிவந்திருப்பவர்களின் கதைகளும், அவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையையும் பார்த்தால் தலையே சுற்றுகிறது.
குமரெட்டியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். 45 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த வாரம்தான் பிணையில் வெளிவந்திருக்கிறார். இவர் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 133.
``ஸ்டெர்லைட் ஆலைக்குப் பக்கத்தில் இருக்கும் ஊர் எங்களுடையது. இன்று அவர்கள் பேப்பரில், எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் காட்டலாம். ஆனால், அதன் பாதிப்புகளை நேரடியாக அனுபவித்தவர்கள் நாங்கள். எங்கள் குழந்தைகளில் எத்தனையோ பேருக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நாங்கள், மிகவும் அமைதியான வழியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடினோம். அந்த நூறு நாள்களில், நாங்கள் எத்தனையோ மனுக்களைக் கொடுத்தும்கூட, மாவட்ட கலெக்டர் ஒரு நாளும் வந்து எங்களைச் சந்திக்கவில்லை.
நாங்கள் சிறையில் இருந்தபோது, எங்களுக்கான வழக்குரைஞர்களைத் தேடியது, வீட்டுக்குச் செய்தி சொல்வது என எங்களுக்காக உதவிசெய்த வள்ளி மயில் என்கிற பையனை இரண்டு நாள்களுக்கு முன்னர் கைதுசெய்திருக்கிறார்கள். சின்னப்பையன் அவன். 23 வயதுதான். என்ன வழக்கு என்பதுகூட தெரியவில்லை. அவனுக்கும் போராட்டத்துக்கும் துளியளவும் சம்பந்தமில்லை. எங்களுக்கு உதவி செய்த பாவத்துக்கு இப்போது அவனை சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஏன்தான் இந்த அரசு இப்படிச் செயல்படுகிறது என்று எங்களுக்குப் புரியவில்லை" என்று விரக்தியோடு பேசியவர் தொடர்ந்து, ``ஆனால் ஒரு விஷயம். என்ன நடந்தாலும் ஸ்டெர்லைட்டை மட்டும் மீண்டும் திறக்கவிட மாட்டோம்" என்று உறுதியான குரலில் பேசி முடிக்கிறார்.
``ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு 1:30 மணி இருக்கும். திடீர்னு போலீஸ் வீட்டுக்கு வந்தாங்க. பக்கத்துல ஒருத்தரோட அட்ரெஸ் கேட்டாங்க. கூட வந்து வழி காட்டுன்னு அவங்க பைக்ல என்னைக் கூட்டிப் போனாங்க. கொஞ்ச தூரத்துல பைக்கை நிறுத்திட்டு, என்னைய ஒரு ஜீப்ல ஏத்திவிட்டாங்க. எனக்கு ஒரே அழுகை. வீட்டுல என் பொண்டாட்டியும், ஒரு வயசுக் குழந்தையும் தனியா இருக்காங்க. எதுக்கு அரெஸ்ட் பண்றாங்க, என்னன்னு ஒண்ணுமே புரியலை.
போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிப் போனாங்க. அங்க ஒரு ஏட்டுகிட்ட போன் வாங்கி வீட்டுக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொன்னேன். எனக்கு
``மூட்டைத் தூக்கிப் பொழைக்கும் கூலி வேலைதாண்ணே. என்னை மொத்த 45 நாள் ஜெயில்ல வெச்சிருந்தாங்க. வேலைக்குப் போனாதான் காசு. அப்புறம் புள்ளைய எங்கப்பா வீட்டுல விட்டு, என் பொண்டாட்டி வேலைக்குப் போக ஆரம்பிச்சது. இந்த ரெண்டு மாசத்துல படாதபாடு பட்டுட்டோம்ணே. ஆனா, இவ்வளவுக்கு அப்புறமும் ஸ்டெர்லைட்டைத் திறக்கப்போறதா சொல்றாங்க. எங்களுக்கு வேற வழியே இல்லண்ணே. திரும்பவும் நாங்க போராட்டம்தான் பண்ணணும். அந்த கம்பெனிய ஒருபோதும் திறக்கக் கூடாதுண்ணே" என்று கோபத்தோடும் பதற்றத்தோடும் சொல்லி முடிக்கிறார் மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த இருதய ஜெபமாலை.
மணி, வழக்குரைஞர், தூத்துக்குடி:
``போராட்டத்தில் பங்கெடுத்த ஒரே காரணத்துக்காக நூற்றுக்கணக்கானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இன்னும் கைதுசெய்யப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். கடந்த நான்கு நாளில் மட்டும் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். பலரையும் நாங்கள் பிணையில் வெளியில் எடுத்தாலும்கூட, இன்னும் 15-க்கும் அதிகமானோர் சிறையிலேயே இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், பிணையில் வந்திருப்பவர்களையும் தொடர்ந்து மிரட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் மீது பெரிய உளவியல் மிரட்டலை அரசு விடுக்கிறது. இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் ஸ்டெர்லைட் மீண்டும் செயல்படுவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. அரசு அதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பதுதான் எங்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை."
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஷேரன் பர்ரோ (Sharan Burrow) இப்படிச் சொல்கிறார்...
``சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின் அவசியத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் நன்றாகப் புரிந்துவைத்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அறிவுசார் சொத்துகளையும், கட்டடங்களாக, நிலங்களாக நிற்கும் சொத்துகளையும் பாதுகாப்பதில் முனைப்பு காட்டும் கார்ப்ரேட்கள், மக்களின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை ஏன் துளியும் மதிப்பதில்லை?"
உலகளவில் கார்ப்பரேட்கள் நிகழ்த்தும் சுரண்டல்களுக்கு எதிராக ஷேரன் பர்ரோ கேட்ட கேள்விக்கான விடையில் இருக்கிறது ஸ்டெர்லைட் சர்ச்சைகளுக்கான அத்தனை விடைகளும். அது தெரியாதவரை, ஸ்னோலின்களும் ஜான்சிகளும் சுடப்படத்தான் செய்வார்கள்... ரத்தம் தெறித்து சாகத்தான் வேண்டும்... பிணங்களைக் கட்டிப்பிடித்து அழத்தான் வேண்டும்... சிறைபடத்தான் வேண்டும்!
Trending Articles
இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்!'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை
Sponsored