எஸ்.எஸ்.ரிச்சர்ட் மான்ட்கோமெரி - 'விஸ்வரூபத்தி'ல் கமல் சொன்ன அமெரிக்க கப்பலின் பின்னணி!



Sponsored



`அன்பே சிவம்' படம் 2003-ம் ஆண்டு வெளியானது. அதில் ஒரு காட்சியில் கமல்ஹாசன், 'பெரிய சுனாமிலாம் வரும்' என்று ஒரு டயலாக் பேசியிருப்பார். அதைத்தொடர்ந்து, 2004-ம் ஆண்டு டிசம்பரில் சுனாமி தாக்குதல் ஏற்பட்டபோதுதான், இங்குள்ள பாதிப்பேருக்கு சுனாமி என்கிற வார்த்தையே அறிமுகம். இப்படி, கமல் படத்தில் ஏதாவது ஒரு வரலாற்றுப் பாடம் கட்டாயம் இருக்கும். இந்தமுறை 'விஸ்வரூபம்-2' படத்தில் 'யாருக்கு வரலாற்றுப் பாடம் கேட்க விருப்பம் இருக்கு?' எனக் கேட்டுத்தான், தேம்ஸ் நதி கழிமுகத்தில் மூழ்கிப்போன கப்பலின் வரலாற்றைக் கூறியிருக்கிறார் கமல். லண்டன் நகரமே தண்ணீரில் மூழ்கும் ஆபத்து இந்த வரலாறு. அந்த வரலாற்றின் ஆரம்பப்புள்ளிதான், எஸ்.எஸ்.ரிச்சர்ட் மான்ட்கோமெரி கப்பல். இந்தக் கப்பலால் அப்படி என்ன ஆபத்து என்பதைப் பார்ப்போம்.

எஸ்.எஸ்.ரிச்சர்ட் மான்ட்கோமெரி என்ற அமெரிக்கக் கப்பல், இரண்டாம் உலகப் போரின்போது 6,000 டன்னுக்கு அதிகமான வெடிபொருள்களுடன் பிரான்ஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, தேம்ஸ் கழிமுகமான சியர்னெஸ் என்ற இடத்தில் தரைதட்டி நின்றது. அதற்குக் காரணம், சியர்னெஸில் கடல்நீர் மட்டம் என்பது மாறிக்கொண்டே இருக்கும் என்பதால்தான். பொதுவாக, அமெரிக்க லிபர்டி கப்பல்களுக்குத் தண்ணீருக்குக் கீழ் உள்ள பகுதியின் சராசரி நீளம் 8.5 மீட்டராக இருக்கும். ஆனால், எஸ்.எஸ்.ரிச்சர்ட் மான்ட்கோமெரி கப்பலுக்கு மட்டும் அது 9.4 மீட்டராக வடிவமைக்கப்பட்டிருந்தது. நீர் மட்டம் குறைவான நேரத்தில் கப்பலின் பின்பகுதி தரைதட்டி நின்றது. எஸ்.எஸ்.ரிச்சர்ட் மான்ட்கோமெரி பின்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, கப்பலில் உள்ள வெடிபொருள்களை இடம்மாற்றும் பணி தொடங்கியது.

Sponsored


1944-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி தரைதட்டிய அந்தக் கப்பலில் இருந்து பொருள்கள் வெளியேறத் தொடங்கின. ஆனால், அடுத்த நாளே அந்தக் கப்பல் விரிசல் விடத் தொடங்கியது. கப்பலின் ஒரு பகுதி வெடிபொருளுடன் கடலுக்குள் மூழ்கியது. இதுகுறித்த விசாரணையில் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின. எஸ்.எஸ்.ரிச்சர்ட் மான்ட்கோமெரி கப்பல் தரைதட்டியபோது மிக அதிக சத்தத்துடன் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாம். ஆனால், கப்பலின் கேப்டன் உறங்கிக்கொண்டிருந்ததால் அவருக்கு அந்த ஒலி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், துறைமுகத்தில் அந்தக் கப்பல் கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்தத் தவறு நடந்தது என்றும் கூறப்பட்டது. 

Sponsored


கப்பலில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 910 கிலோ அளவுக்கு வெடிபொருள்கள், 450 கிலோ எடையில் வெவ்வேறு வகையான 4,439 வெடிகுண்டுகள் உட்பட மொத்தம் 1,500 டன் வெடிபொருள்கள் கடலுக்கடியில் கப்பலோடு சேர்ந்து மூழ்கின. கடலில் மூழ்கி 60 ஆண்டுகளுக்குப் பிறகும் 2004-ம் ஆண்டு வெளியான தகவலின்படி, இன்னமும் அந்த வெடிபொருள்கள் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவற்றை வெளியே எடுப்பதில் அதிக அளவு பாதுகாப்பும் பணச்செலவும் ஆகும் என்பதால், அவற்றை 50 அடி ஆழத்தில் அப்படியே வைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அந்தக் கப்பலை முழுவதுமாக வெளியேற்றாமல் அந்தப் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான அனுமதி தொடர்பாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய கப்பலில் இருக்கும் வெடிபொருள்கள் ஒருவேளை வெடித்துவிட்டால் என்னவாகும் என்ற கேள்வி எல்லாருக்குள்ளும் எழும். இவை அனைத்தும் வெடித்தால் அணுகுண்டு சோதனை நடத்துவதைவிடவும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். கடல் தண்ணீர் மட்டும் இரண்டு மைல் தூரத்துக்கும் மேலே வெடித்துச் சிதறும் என்பதுடன், மத்திய லண்டனுக்குள் தண்ணீர் புகுந்து லண்டன் மாநகரமே மூழ்கும் என்று அஞ்சப்படுகிறது. எனினும், வெடிபொருள் தொடர்பான எஸ்.எஸ்.ரிச்சர்ட் மான்ட்கோமெரி கப்பல் ஆபத்து கடல் நீருக்குள் பத்திரமாக இருக்கிறது. அதுவெடிக்கும் அபாயம் இப்போதைக்கு இல்லை என்று கூறுகிறார்கள் சிலர். என்றாலும் இந்தச் சர்ச்சை இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வரலாறு தண்ணீருக்குள் மூழ்கடிக்கப்பட்ட வரலாறு. 

டைட்டானிக் கப்பல் மூழ்கி காதல் காவியம் சொன்னது. ஆனால், எஸ்.எஸ்.ரிச்சர்ட் மான்ட்கோமெரி கப்பல் மூழ்கியதால் எழுந்துள்ள சூழல், லண்டன் நகரத்துக்கு உள்ள ஆபத்துகளையும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. இந்த வரலாறு 'விஸ்வரூபம்' எடுக்காமல் கடலுக்கடியில் உறங்குவதே ஆகச் சிறந்தது என்பதே இங்கிலாந்து மக்களின் மனநிலை. எஸ்.எஸ்.ரிச்சர்ட் மான்ட்கோமெரி எனும் வரலாறு உறங்கட்டும். 



Trending Articles

Sponsored