ஆம், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதவர்தான் வாஜ்பாய்..!Sponsoredஅடல் பிகாரி வாஜ்பாய்... இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பி.ஜே.பி-யின் அதீத வளர்ச்சியில் இவரைத் தவிர்த்துவிட்டு எந்தவொரு தலைவரையும் சொல்லிவிட முடியாது எனலாம்.

இந்தியாவின் 10-வது பிரதமராகக் கடந்த 1996-ம் ஆண்டில் பொறுப்பேற்ற வாஜ்பாயின் முதல் பதவிக்காலம் 13 நாள்கள் மட்டுமே நீடித்தது. பின்னர், 1998-ம் ஆண்டில் மீண்டும் பிரதமரானார். ஆனால், இந்தமுறை அவர் பதவியேற்று 13 மாதங்களே பிரதமராக நீடிக்க முடிந்தது. வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை, மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும்  அ.தி.மு.க பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விலக்கிக்கொண்டதால், நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓர் ஓட்டில் தோல்வியடைந்து, பதவி விலகினார். அடுத்து 1999-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைத்தார். ஆனால், இந்தமுறை முழுமையாக 5 ஆண்டுகள் பிரதமர் பதவியை அலங்கரித்த பெருமை வாஜ்பாயைச் சேரும்.

1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய், இந்தி மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். பல்வேறு கவிதை நூல்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். தனக்கே உரிய நகைச்சுவை உணர்வு நிறைந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், வாஜ்பாய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு, பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. பத்மவிபூஷண் விருதையும் வாஜ்பாய் பெற்றுள்ளார்.

Sponsored


Sponsored


50 ஆண்டுக்காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ள வாஜ்பாய், மக்களவைக்கு ஒன்பது முறையும் மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி என வெவ்வேறு மாநிலங்களிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.பி வாஜ்பாய் மட்டும்தான். 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் கடுமையாகக் குரல் கொடுத்து எதிர்த்தவர். 

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான், இமயம் முதல் குமரிவரை இணைப்பை ஏற்படுத்தியுள்ள தங்க நாற்கரச் சாலை திட்டம் திட்டமிடப்பட்டு, கொண்டுவரப்பட்டது. பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி, உலக அரங்கில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த பெருமையும் இவரைச் சேரும். இதுபோன்ற பல சாதனைகளைப் புரிந்தவர். சுதந்திரப் போராட்ட தியாகி, வெளியுறவுத் துறை அமைச்சர், பிரதமர் எனப் பல பதவிகளை வகித்த வாஜ்பாய், அரசியல் நாகரிகத்தின் அச்சாணியாய் விளங்கியவர். 
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருடனும், தி.மு.க-வின் மறைந்த தலைவர் கருணாநிதி உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த மாநிலக் கட்சிகளின் தலைவர்களுடனும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மிகச் சிறந்த நல்லுறவுகளைக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்களைத் தன்வசம் ஈர்த்து, ஒருங்கிணைப்பதில் வாஜ்பாயியின் சாதுர்யத்தை அறிந்து, பி.ஜே.பி-யினரே பல தருணங்களில் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் வாஜ்பாயை விமர்சித்தவர்கள், பின்னாளில் அவரின் திறமைமிக்கச் செயல்பாடுகளைக் கண்டு பாராட்டியும் இருக்கிறார்கள்.

1996-ம் ஆண்டில் பிரதமராக இருந்தபோது, தங்கள் அணிக்குப் போதிய பெரும்பான்மை இல்லை என்பதை உணர்ந்து, நம்பிக்கை வாக்கு கோருவதற்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்தார். அந்தச் சமயத்தில் எதிர்த் தரப்பில் இருந்த எம்.பி-களைப் பணம் கொடுத்து இழுக்க பி.ஜே.பி விரும்பவில்லை. இதையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் ஹெச்.டி.தேவகவுடா பிரதமரானார். 1996-ம் ஆண்டில் வாஜ்பாய் 13 நாள்களில் பதவி விலகியதாலேயே, பி.ஜே.பி மீண்டும் ஆட்சிக்கு வர வித்திட்டது. தேவகவுடா தலைமையிலான ஆட்சி இரண்டு ஆண்டுகள்கூடத் தொடர முடியாமல்போனது. 

கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பின்னர், வாஜ்பாயின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து மெள்ள ஒதுங்கிக்கொண்டார். டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிலேயே தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். என்றாலும், அவரால் நடக்க இயலவில்லை. படுத்த படுக்கையாகவே இருந்த வாஜ்பாய்க்கு, சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்தது. இதனால் வீட்டிலேயே முடங்கியிருந்தார். 

தொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வாஜ்பாய், கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதுமுதல் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் வாஜ்பாயின் உடல்நிலை மோசமடைந்தது. பி.ஜே.பி தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், மருத்துவமனைக்குச் சென்று, வாஜ்பாயின் உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தனர். இந்த நிலையில், அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான வகையில் இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதையடுத்து, பலரும் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.

உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயகத்தைக் கொண்டு திகழும் இந்தியாவில், அரசியல் பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் பெருமை சேர்த்தவர் வாஜ்பாய் என்றால் அது மிகையாகாது. இந்தியா உள்ளவரை... பி.ஜே.பி உள்ளவரை... வாஜ்பாய் என்ற மாமனிதருக்கு எப்போதும் தனி இடமுண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. Trending Articles

Sponsored