அதிகார வரம்பை மீறினாரா ராம மோகனராவ்? - அம்பலப்படுத்தும் ஆர்.டி.ஐ.!



றைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் செல்வாக்கைப் பெற்றவரான தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் அலுவலகத்தில், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல... இந்திய அரசியல் களத்தையே அதிரச்செய்தது. எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சோதனை இதுவரை நடந்ததில்லை என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் அப்போது கருத்து தெரிவித்திருந்தனர்.  

அதனைத் தொடர்ந்து அனைவருடைய கவனமும் ராம மோகன ராவ் மீது படிந்திருந்த நிலையில், அவருடைய மகன் விவேக் நடத்திவரும் அலுவலகத்திலும் அதிகாரிகள் அதிரடியாகப் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அந்தச் சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியது. இந்த வருமானவரித் துறை சோதனைக்குப் பின்னரே ராம மோகன ராவின் ஊழல்கள் தொடர்பான விவரங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. மேலும் அவர், அதிகாரத்தைப் பயன்படுத்தி பலவகையிலும் முறைகேடு செய்திருந்ததாகத் தகவல்களும் அம்பலமாகின. அதில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள பத்மாவதி ஹாஸ்பிடாலட்டி என்ற நிறுவனத்துக்கு (Padmavathi Hospitality And Facility Management Services) ராம மோகன ராவ்  தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தை வாங்கிக் கொடுத்தது அம்பலமாகியிருந்ததும் அது தொடர்பான ஒரு  புகாரில்  தெரிய வந்தது. 

Sponsored


Sponsored


அந்த நிறுவனத்தில் ராம மோகன ராவின் மகன் விவேக் பங்குதாரராக இருப்பதன் காரணமாகவே இந்த ஒப்பந்ததத்தை அந்த நிறுவனத்துக்கு வாங்கிக் கொடுத்ததாகவும் கூடுதல் தகவல்கள் மூலம் தெரிய வந்தன. இதையடுத்து, அவர் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். பின்னர், சில மாதங்களுக்குப் பிறகு தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராகப் பதவிக்கு வந்தார். அந்த பதவிக்கு வந்தபின்னரும் அவருடைய அதிகார துஷ்பிரயேகம் மீண்டும் கொடிகட்டிப் பறந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதில் ஒரு பகுதியாக, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான சுப்பா ரெட்டி உள்ளிட்ட  பலருக்கு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஒப்பந்தங்களை வாங்கிக் கொடுத்ததாகத் தகவல் சொல்லப்பட்டது. இப்படி அவருடைய முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் பட்டியல்கள் நீண்டுகொண்டிருக்கும் நிலையில், அவருடைய மகன் விவேக் நடத்திவரும் நிறுவனத்துக்கு ராம மோகன ராவ் தலைமைச் செயலாளராக இருந்தபோது ஒப்பந்தம் வழங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அவருடைய செல்வாக்கின் காரணமாகத் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் ஒப்பந்தங்களை விவேக் வாங்கியிருப்பதும் அம்பலமாகியுள்ளது. 

Sponsored


அறப்போர் இயக்கம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்கப்பட்டதில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசியபோது, "தலைமைச் செயலாளராக ராம மோகன ராவ் இருந்த காலகட்டத்தில், அவருடைய அதிகாரத்தின் கீழ்தான் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் செயல்பாடுகள் நடைபெற்றுள்ளன. அப்படி அவருடைய அதிகாரத்தின்கீழ் வருகிற ஒரு நிறுவனத்தில், தன்னுடைய மகனுக்கே ஒப்பந்தம் வழங்கியிருப்பது அதிகார வரம்பை மீறிய செயல். இந்த ஒப்பந்தம் சுமார் 15 கோடி ரூபாய்க்கு நடைபெற்றுள்ளது. இதில் ஒப்பந்த விதிமுறைகளை அவர் முற்றிலும் மீறியிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளில், அரசு தரப்பில் இருந்து பதில் வந்துள்ளது. 

அதில்,  'தன்னுடைய மகன்தான் என்ற எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை' என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் நடைபெற்றபோது எழுத்துப்பூர்வமாக ஒரு கடிதத்தை, 'இவர், என்னுடைய மகன்... இவருக்கு அரசின் விதிமுறைப்படியே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது' என்பதை அரசாங்கத்துக்கு வெளிப்படையாக அவர் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர் செய்யவில்லை. இதைப் பார்க்கும்போது ஒப்பந்த விதிமுறைப்படி (service violation ) அதிகார வரம்பை மீறிய செயலாகும். இதுகுறித்து சட்டரீதியாக அவர்மீது நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள உள்ளோம்" என்றார். 

ராம மோகன ராவ் பற்றிய ஊழல் வழக்குகள் மீண்டும் தூசு தட்ட ஆரம்பித்துவிட்டன.



Trending Articles

Sponsored