``அழகிரிக்கு செக்... முடிசூட்டு விழாவுக்குத் திட்டம்!” - மாஸ்டர் ப்ளான் ஸ்டாலின்தி.மு.க-வின் இரண்டாவது தலைவர் என்ற வரலாற்றுப் பெருமையை வரும் ஆகஸ்ட்  28-ம் தேதி தனதாக்கிக்கொள்ளப் போகிறார், அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். தலைவர் தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தி.மு.க தலைமைக் கழகம் ஆரம்பித்துவிட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் அதிரடி வியூகத்தை முடக்குவதற்காகவே, அவசரமாக இந்த முடிசூட்டும் படலத்தைத் தி.மு.க தலைமை நடத்தவிருப்பதாகச் சொல்கிறார்கள், விவரமறிந்தவர்கள்.  

தி.மு.க தொடங்கப்பட்டபோது தலைவர் என்ற பதவி இல்லாமல், பொதுச்செயலாளர் என்ற பதவியே உச்சபட்ச அதிகாரமிக்கப் பதவியாக இருந்தது. ``தலைவர் ஆசனம், பெரியாருக்காக” என்ற மறைந்த முதல்வர் அண்ணாவின் அறிவிப்பால், பொதுச்செயலாளர் பதவி அவர் வசமே இருந்தது. தி.மு.க-வின் சட்டதிட்ட விதிப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உட்கட்சித் தேர்தல் நடைபெற வேண்டும். அதன்படி, இதுவரை 14 முறை உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. திமு.க-வின் பொதுச்செயலாளராக இருந்த அண்ணாவின் மறைவைத் தொடர்ந்து 1969-ம் ஆண்டு நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் தலைவர் பதவியை தி.மு.க-வில் கொண்டுவருவதற்கான சட்டவிதிகள் மாற்றம் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில், தி.மு.க-வின் முதல் தலைவராக, மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி 1969-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். பொதுச்செயலாளர் பதவிக்கு நாவலர் நெடுஞ்செழியன் தேர்வு செய்யப்பட்டார். 

Sponsored


Sponsored


1969-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை நடைபெற்ற தி.மு.க-வின் 10 உட்கட்சித் தேர்தல்களிலும் தலைவராகத் தொடர்ந்து கருணாநிதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வந்தார். கடந்த மாதம் அவர் உடல்நிலை நலிவுற்று இருந்தநிலையில், 50 ஆண்டுகள் தி.மு.க-வின் தலைவராக இருந்த பெருமையையும் தன்னகத்தே வைத்துக்கொண்டார் கருணாநிதி. இந்நிலையில், கடந்த 7-ம்தேதி அன்று கருணாநிதி மறைவைத் தொடர்ந்து தி.மு.க-வின் தலைவர் பதவி காலியாகியுள்ளது. அதே நேரம், தி.மு.க தலைவர் கருணாநிதி உயிருடன் இருந்தபோதே, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தி.மு.க-வின் பொதுக்குழுவில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு, செயல் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. அந்தப் பதவியில் ஸ்டாலின் அமர்த்தப்பட்டு அதற்குப் பொதுக்குழு ஒப்புதல் வழங்கியது. தி.மு.க-வின் தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கும் வழங்கப்பட்டன. இதுவரை செயல் தலைவராகவே ஸ்டாலின் நீடித்து வருகிறார். இந்த நிலையில், `ஆகஸ்ட் 19-ம் தேதி அன்று தி.மு.க-வின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெறும்' என்று தி.மு.க தலைமைக் கழகம், கடந்த மாதம் அறிவித்திருந்தது. ஆனால், கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து அந்தப் பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Sponsored


இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தி.மு.க-வின் அவசரச் செயற்குழுக் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் தி.மு.க-வின் வருங்கால தலைவர் ஸ்டாலின் என்பதைப் பலரும் தங்களது பேச்சில் சுட்டிக்காட்டியிருந்தனர். அதன்தொடர்ச்சியாக, தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் முதல்வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளது என்ற தகவல் தி.மு.க வட்டாரங்களில் உலவி வந்தது. ஆனால், அழகிரியின் திடீர் போர்க்கொடியால் ஸ்டாலின் தரப்பு அப்செட்டாகிவிட்டது. குறிப்பாக, செப்டம்பர் 5-ம் தேதி அன்று அழகிரி பேரணி ஒன்றை நடத்தவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்தப் பேரணியில், தன் பின்னால் இருக்கும் ஆதரவாளர்களைத் திரட்டும் முடிவில் அழகிரி வியூகம் வகுத்துவருகிறார். அதனால் ஸ்டாலின் தரப்பு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. ``அழகிரியின் பேரணிக்கு இப்போது கட்சியில் இருக்கும் நிர்வாகிகள் யாரும் பின்னால் அணிவகுத்துவிடக் கூடாது. அதற்கு, கட்சியின் கட்டுப்பாட்டை உங்கள் வசம்  கொண்டுவந்துவிட வேண்டும்” என்று ஸ்டாலினுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது. மேலும், அழகிரியின் பேரணிக்குப் பின்னால் நாம் பொதுக்குழுவைக் கூட்டினால், பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதனால், அவர் பேரணியை நடத்துவதற்கு முன்பாகவே நாம் பொதுக்குழுவை நடத்தி தலைவராக ஸ்டாலினைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு ஸ்டாலின் குடும்பத்தினரும் அவருடைய ஆதரவாளர்களும் அவரிடம் வலியுறுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

மேலும், பொதுக்குழு குறித்தும் தலைவர் பதவி குறித்தும் பொதுச்செயலாளர் க.அன்பழகனிடமும் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவரும் ஓகே சொல்லியபிறகுதான் ஆகஸ்ட் மாத இறுதியில் பொதுக்குழுவைக் கூட்டலாம் என்ற முடிவுக்கு ஸ்டாலின் வந்துள்ளார். இரண்டு தினங்களாகவே பொதுக்குழு தேதி குறித்தும், தலைவர் தேர்தல் குறித்தும் நீண்ட ஆலோசனையைத் தனது வீட்டில் நடத்தியுள்ளார் ஸ்டாலின். அதன்பிறகு ஆகஸ்ட் 28-ம் தேதி பொதுக்குழு நடைபெறும் என்றும், 26-ம் தேதி தலைவர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு கருணாநிதியைப்போல் ஸ்டாலினும் போட்டியின்றி தேர்வு செய்யும் நிலையே இப்போது உள்ளது. கடந்த  2008-ம் ஆண்டு நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் பொருளாளராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு, 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பொருளாளராக மீண்டும் ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே தி.மு.க-வின் இரண்டாவது தலைவர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பதவிக்கு வரவுள்ளார் ஸ்டாலின்.

``அழகிரியின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் ஸ்டாலினின் முடிசூட்டு விழா அமையப்போகிறது'' என்கிறார்கள் தி.மு.க-வினர்.Trending Articles

Sponsored