``எதிர்க்கேள்விகளால் மட்டுமே இவை சாத்தியம்!" விகடன் செய்தியால் மாற்றப்பட்ட பூங்கா கட்டணம்!துரை ராஜாஜி பூங்காவின் நுழைவுக் கட்டணத்தை எந்த முன்னறிவிப்புமில்லாமல் அதிகமாக வசூல் செய்த செய்தி, விகடன் டாட் காமில் கடந்த 21-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அந்தச் செய்தியின் எதிரொலியாகப் பூங்காவின் நுழைவுக்கட்டணம் பழைய முறைக்கே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் 20 ரூபாய் என வசூலிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் தற்போது சிறுவர்களுக்கு ரூ.5 எனவும் பெரியவர்களுக்கு ரூ.10 எனவும் மாற்றப்பட்டுள்ளது.

மதுரையில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ராஜாஜி பூங்கா. காந்தி மியூசியம் அருகில் அமைந்திருக்கும் ராஜாஜி பூங்கா, குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர்களும் குறைந்த செலவில் விடுமுறை தினத்தைக் கழிக்க ஏற்ற இடமாக இருக்கிறது. இதற்கு முன்னர் நுழைவுக் கட்டணமாகக் குழந்தைகளுக்கு 5 ரூபாயும் பெரியவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், சில மாதங்களாக நுழைவுக்கட்டணமானது, பெரியவர்களுக்கு 20 ரூபாயும் சிறியவர்களுக்கு 10 ரூபாய் என இரட்டிப்பாக வசூல் செய்யப்படுவதாகப் பொது மக்களிடமிருந்து புகார்கள் எழுந்தன.

Sponsored


Sponsored


இதுகுறித்து நேரடியாகச் சென்று விசாரித்தபோது, கட்டணம் அதிகமாக  வசூலிப்பது உறுதியானது. மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஸ் சேகரிடம் முறையிட்டு கட்டண விவகாரம் குறித்துக் கேட்டபோது, "இதுவரை அதுபோல அதிக கட்டணம் வசூலித்ததாகத் தெரியவில்லை. முறையான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இல்லையெனில், விசாரணைக்குப் பிறகு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியாகச் சொல்லியிருந்தார்.

Sponsored


பிறகு, 'எதுக்கும்  ஒரு தடவ பார்த்துட்டு வந்துடலாமே!' என்று மைண்ட் வாய்ஸ் சொல்ல, மீண்டும் ராஜாஜி பூங்காவுக்குச் சென்றிருந்த நமக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. பழையபடி 20 ரூபாய் கட்டணத்தையே வசூலித்தனர். "20 ரூபாய் எதுக்குண்ணே வாங்குறீங்க! 10 ரூபாய்தானே அண்ணே டிக்கெட்" என்று கேள்வி கேட்டதற்கு மிரட்டும் தொனியில் பதில் வந்தது. இந்தத் திடீர் கட்டண உயர்வால் பூங்காவுக்கு வந்திருந்த மதுரையின் புறநகர் பகுதி மக்கள், கடும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். 

இதையடுத்து ராஜாஜி பூங்கா கட்டண உயர்வை முன்னிறுத்தி விகடன் டாட் காமில் கடந்த 21.8.2018 அன்று `ஆமாம்... 20 ரூபாய் அவர்களுக்குப் பெரிதுதான்! - மதுரை ராஜாஜி பூங்கா கட்டண கலவரம்' என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, செய்தி வெளியிடப்பட்ட இரண்டே நாள்களில் பூங்காவின் கட்டணம் சீர் செய்யப்பட்டு, பெரியவர்களுக்கு 10 ரூபாயும் சிறியவர்களுக்கு 5 ரூபாயுமாகக் கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. நுழைவுக் கட்டணம் குறைந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

பூங்காவின் நுழைவுக்கட்டணம் குறித்து ஒரு சிலர் பேசும்போது, "அட! நம்மனால என்ன செய்ய முடியும்? என்னிக்காச்சும் தானே இங்கிட்டு வர்றோம். அவுக கேட்குறதையே கொடுத்துடலாம்னு இருந்துட்டோம். வேற வழி இல்லையே..." என்று சோர்வாக தங்கள் இயலாமையை வெளிப்படுத்தினர். இப்படித்தான் பலரும் நினைத்திருக்கக்கூடும். ஆனால், அந்த எண்ணம் சமூகத்தில் நடக்கும் பல குற்றங்களுக்கு தொடக்கப் புள்ளியாக அமைவதைப் பலரும் உணர மறுக்கிறோம். 

நம் கண்களுக்குத் தெரியும் சிறிய விஷயங்கள் அனைத்துக்குப் பின்பும் ஓர் அரசியல் இருக்கிறது. அப்படித்தான் 5 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தப்பட்ட நுழைவுக் கட்டணத்துக்குப் பின்னணியிலும் அரசியல் இருக்கிறது. அவற்றை இனங்கண்டுகொள்ள வேண்டிய அவசியம் நம் அனைவருக்குமே உள்ளது. இவர்களை எதிர்த்து நாம் வீசும் கேள்விகளால் மட்டுமே அவை சாத்தியம்!Trending Articles

Sponsored