கோபாலபுரம் இளைஞர் குழு முதல் தி.மு.க. தலைவர் வரை... ஸ்டாலின் கடந்துவந்த பாதை! #VikatanInfographicsண்ணாவுக்குப் பிறகு யார் என்ற சூழல் ஏற்படும்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதியை ஒருமனதாகக் கை காட்டினார்கள். இன்றும் அதே சூழல்தான் கருணாநிதிக்குப் பின் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அழகிரியால் பிரச்னை வரும், கனிமொழி ஆதரவு இல்லை, ஸ்டாலின் வரமாட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவினாலும். தமிழக திமுக தொண்டர்களால் ஸ்டாலின் ஒருமனதாக திமுகவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஸ்டாலினை அரசியலுக்குக் கொண்டுவந்தது கருணாநிதிதான். எனவே, அவரை வைத்து குடும்ப அரசியல் செய்கிறார் என்ற சர்ச்சைகள் எழுந்தன. இதற்கு ஸ்டாலின் ஒருமுறை `என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தது கருணாநிதி அல்ல. எமெர்ஜென்ஸியின் தாக்கம்தான். எனவே, என்னை அரசியலுக்குக் கொண்டுவந்தது கருணாநிதி அல்ல இந்திரா காந்தி' என்று கூறியிருப்பார். 

Sponsored


1953ம் ஆண்டு சோவியத் தலைவர் ஸ்டாலின் மறைந்த வாரத்தில்தான் திமுக தலைவர் கருணாநிதிக்கு மகன் பிறந்திருக்கிறார். அதனால் அவருக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியுள்ளார். இல்லையென்றால் கருணாநிதி தன் மகனுக்கு வைக்க நினைத்த பெயர் அய்யாத்துரை. அய்யா என்பது பெரியாரையும், துரை என்பது அண்ணாதுரையையும் எனக் குறிக்கும் விதமாகப் பெயரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

Sponsored


Sponsored


14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் குழு எனத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்டாலின், தனது 19 வது வயதில் தி.மு.க-வுக்காக சட்டமன்றத் தேர்தலில் பிரசாரம் செய்யத் தொடங்கினார். எமர்ஜென்ஸியில் கைது, திமுக இளைஞர் அணி மாநிலச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர மேயர் எனத் தொடர்ந்து அரசியலில் முக்கியப் பதவிகளை வகித்தார். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மேயர் ஸ்டாலின்தான்!

இரட்டைப் பதவிக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டுவர மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏவாகப் பணியைத் தொடர்ந்தார். 2009-ம் ஆண்டு திமுக ஆட்சியில் முதல்முறையாகத் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். 

2016-ம் ஆண்டு தேர்தலுக்காக ``நமக்கு நாமே'' என்று தமிழகம் முழுவதும் பயணம் செய்தார். 20.09.2015 முதல் 12.02.2016 வரை தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில் உள்ள 212 சட்டமன்றத் தொகுதிகளில் 11000 கி.மீ பயணம் செய்தார். வர்த்தகர்கள், மாணவர்கள், நெசவாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், பெண்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள் என 150 கூட்டங்களில் பங்கேற்றார்.

2016 தேர்தலில் தோல்வியடைந்தாலும், பலமான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்துக்குள் திமுக நுழைந்தது. திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டாலின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். 

செயல் தலைவர் to தலைவர்!

``தம்பி வா... தலைமையேற்க வா...'' என்று 2016-ம் ஆண்டு திமுக-வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கண்ணீர் மல்க ஸ்டாலினை செயல் தலைவர் பதவிக்கு வரவேற்றார். தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது திமுகவை வழிநடத்தும் பொறுப்பாக ஸ்டாலினுக்குச் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது. கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாமல் ஓய்வெடுக்க ஆரம்பித்த போது அவ்வப்போது கருணாநிதியின் புகைப்படங்கள் மட்டும் வெளியாகும். அது திமுகவுக்கே உரித்தான வெளிப்படைத்தன்மை. அந்த விஷயத்தை கருணாநிதி கடைசியாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை கண்ணியமாகக் கடைப்பிடித்தார் ஸ்டாலின் என்பதைப் பலரும் பாராட்டினர். 

சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது, நம்பிக்கையில்லாத் தீர்மானம் நேர்மையான முறையில் இல்லை என்று வெளிநடப்பு செய்து ஆளுநரிடம் புகார் அளித்தது. நீட் விஷயத்தில் மத்திய அரசைக் கண்டித்தது எனத் திமுக எதிர்க்கட்சியாக சரியான விஷயங்களை எடுத்துரைத்தது. 

திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது ஸ்டாலினின் செயல்பாடுகள் காண்போரை நெகிழ வைத்தன. தமிழக அரசு மெரினாவில் கருணாநிதிக்கு இடமளிக்க மறுத்தது. ஸ்டாலினோ மெரினாவைத் தாண்டி எந்த இடத்தையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதில் தீர்மானமாய் இருந்தார் என்று திமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். வழக்கை வென்று மெரினாவில் கலைஞர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்ற செய்தியை ஸ்டாலின் போராடி பெற்றார். தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்துக்கு முன்பு ``உங்களில் ஒருவனாகப் பேசுகிறேன், உடன் பிறவா தம்பியாகப் பேசுகிறேன்'' என்று பேசினார். இதுதான் ஸ்டாலினை திமுக தலைவராக முன்னிறுத்திய முதல் நிகழ்வு. வழக்கமாகத் திமுக தொண்டர்கள் என்றால் சற்று அதிரடியானவர்கள், ஏதாவது தவறாக நடந்துவிடும் என்ற பேச்சு எல்லாரிடத்திலும் இருந்தது. ஸ்டாலினின் ஒற்றை வார்த்தைக்கு மொத்த திமுக-வும் கட்டுப்பட்டது. 2016-ல் கருணாநிதி வீட்டில் ஓய்வெடுக்கத் தொடங்கியது ஆரம்பித்து நல்லடக்கம் செய்யப்பட்டது வரை ஸ்டாலின் எந்த அசம்பாவிதங்களும், கலவரங்களும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்.

ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் கலைஞரின் உடல்நிலையை எல்லாருக்கும் விவரித்தார், அப்பா என்று அழுதார், கனத்த இதயத்துடன் கருணாநிதி மேல் இருந்த தேசியக்கொடியைப் பெற்றார். கண்ணியமாக கருணாநிதியை வழியனுப்பிய ஸ்டாலின் திமுகவையும் இதே கண்ணியத்தோடு நடத்துவார் என்று கழகம் நம்புகிறது. 50 ஆண்டுக்காலம் கருணாநிதி எனும் அரசியல் சாணக்கியனை தலைவராக வைத்திருந்த திமுக, தற்போது ஸ்டாலினைத் தலைவராக்கியுள்ளது. கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின் நிரப்புவாரா என்ற கேள்விக்கு தேர்தல்தான் பதில் சொல்லும். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும்தான் ஸ்டாலினின் தலைமையையும், திமுகவின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும். 


 Trending Articles

Sponsored