1969ல் கருணாநிதி... 2018ல் ஸ்டாலின்... அன்றும் இன்றும் நடந்தது என்ன?



Sponsored



50 ஆண்டுகள் கழித்து தி.மு.க-வுக்கு ஸ்டாலின் தலைவராகியிருக்கிறார். கருணாநிதிதான் இந்தியாவில் ஒரு கட்சிக்கு அதிக நாள்கள் தலைவராக இருந்தவர். நாட்டை மாறி, மாறி ஆளும் தேசியக் கட்சிகளுக்குக் கூட 50 ஆண்டுகள் ஒருவர் தலைவராக இருந்ததில்லை. அப்படி ஒரு கட்சி கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் ஸ்டாலினை ஒருமனதாகத் தலைவராக்கியுள்ளது. 1969ல் அண்ணா மறைந்தபோது தி.மு.க தலைமைக்கு கருணாநிதி வந்தார். அன்று இருந்த சூழலுக்கும் இன்று தி.மு.க இருக்கும் சூழலுக்கும் நிறைய வித்தியாசம் என்றாலும் ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன. 

மரணத்தை எதிர்த்து அண்ணா போராடிக்கொண்டிருந்தபோது கழக உறுப்பினர்களும், பொதுமக்களும் வருந்தாத நாள்களே இல்லை. காரணம் அவர் மீது கொண்ட அன்புதான் ``திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டபோது தம்பிகள் அவரை என்னவென்றே கேட்கவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டவராக விளங்கினார். அவர் மறைந்தபோது மூத்த தலைவராக இருந்த நெடுஞ்செழியன்தான் முதலமைச்சராவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், திராவிட முன்னேற்ற கழகம் ஒருமனதாக மு.கருணாநிதி என்ற 45 வயதே ஆன தலைவரைக் கைகாட்டியது. 

``அன்று அண்ணாவின் உச்சத்தைக் கருணாநிதி தொடவில்லை என்றாலும், கழகம் கருணாநிதியால் அண்ணா செய்த விஷயங்களைச் செய்ய முடியும் என்று நம்பியது. பெரியாரின் சுயமரியாதை நிழலில் வளர்ந்து, அண்ணாவின் பகுத்தறிவு பாசறையில் பயின்று தி.மு.கவையும், தமிழையும் வளர்த்தவர். ஒரு கட்சியின் தலைவர் தமது கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது இயல்பே. ஆனால் அதே தலைவர் முதலமைச்சராகும் போது மாநில வளர்ச்சியில்தான் கவனம் செலுத்த வேண்டும். கழகத்தின் முன்னேற்றத்துக்குப் பெருமளவு காரணமாக இருந்த கருணாநிதியின் ஆர்வமும், ஆற்றலும் அவரது நிர்வாகத்திலும் பிரதிபலித்து, தமிழகம் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும்." என்று விகடன் தலையங்கம் எழுதியிருந்தது.

Sponsored


Sponsored


இன்று ஸ்டாலின் பதவியேற்பதும் அதே போன்ற ஒரு சூழலில்தான். அன்று தி.மு.க ஆளுங்கட்சி, இன்று தி.மு.க எதிர்க்கட்சி. இதுதான் வித்தியாசமே தவிர சூழலில் பெரிய மாற்றமில்லை. 

கருணாநிதி மரணத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்தபோது மொத்த தமிழகமும் வருந்தியது. அழகிரியால் பிரச்னை வரும், கனிமொழி ஆதரவு இல்லை, ஸ்டாலின் வரமாட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவினாலும். தி.மு.க தொண்டர்களால் ஸ்டாலின் ஒருமனதாக தி.மு.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். `கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அதனாலேயே தலைவராகிவிட்டார்' என்ற கூற்றுக்கு தி.மு.க தரப்பு சொன்னதைவிட நேற்று ஸ்டாலின் பேசும் போது, கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் தன்னை அன்றே கழகத்தின் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று கருணாநிதியிடம் பரிந்துரைத்ததை நினைவு கூறினார். 

ஸ்டாலின் ஏறிவந்த படிக்கட்டுகள் பல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர், தமிழகத்தின் முதல் துணை முதல்வர் என்று இங்கு ஸ்டாலினை ஏற்றுக்கொள்ளப்பட்டார். `நான் அரசியலுக்கு வரக் காரணம் கருணாநிதி அல்ல, அவசரநிலையும், இந்திராகாந்தியும்தான்' என்று ஸ்டாலின் ஒருமுறை பேசியிருப்பார். அன்று கருணாநிதிமுன் இருந்த சவால் அண்ணாவைப் போல கழகத்தை நிர்வகிக்க வேண்டும் என்பது. இன்று ஸ்டாலினுக்கு இருக்கும் சவால் கருணாநிதி போல கழகத்தைக் காக்க வேண்டும் என்பதுதான். 

அன்று அண்ணாவும், பின்பு கருணாநிதியும் மாநில சுய உரிமைக்காக மத்திய அரசை எதிர்த்தார்கள், தி.மு.க தலைவராகியிருக்கும் ஸ்டாலினும், `இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மத்திய அரசுக்குப் பாடம் புகட்டுவோம்' என்று கூறிதான் தனது தலைவர் பணியைத் தொடங்கியுள்ளார். 

`என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே' என்று கருணாநிதி தி.மு.கவை வழிநடத்தினார். இன்று ஸ்டாலின், `என் உயிரினும் மேலான கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளே' என்று ஆரம்பித்திருக்கிறார். `எனக்கு கருணாநிதி போல பேசத் தெரியாது, ஆனால், முயற்சி செய்வேன்' என்றார். அன்று கருணாநிதியை, `இவர் அண்ணா அல்ல. ஆனால், தி.மு.கவை வழிநடத்துவார்' என்று நம்பியது.

70 ஆண்டுகால கட்சி 50 ஆண்டுகள் கழித்து தன் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளது. அண்ணாவின் ஆற்றலையும், கருணாநிதியின் சாதுர்யத்தையும் தி.மு.க ஸ்டாலினிடம் எதிர்பார்க்கிறது. அதற்கு, தேர்தல் களத்தில் ஸ்டாலினின் செயல்பாடுகள் மட்டுமே உரிய பதில் சொல்லும் என்பது தி.மு.கவுக்கும், ஸ்டாலினுக்கும் நன்றாகவே தெரியும். 
 



Trending Articles

Sponsored