சமூக நீதிக்காக அளிக்கப்பட்ட முதல் அறிக்கை... யார் அந்த மண்டல்?



Sponsored



இந்திய அரசியல் அரங்கில் சமூக நீதி நோக்கிய மிக முக்கிய மைல்கல்லாக இன்று வரை போற்றப்படுவது மண்டல் குழுவின் அறிக்கை. அதை நிரூபித்துக் காட்டிய பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் 1982-ல் தனது 64 வது வயதில் மறைந்தார். 1918 ஆகஸ்ட் மாதம் பிறந்த மண்டலின் நூற்றாண்டு விழா இம்மாதம் கொண்டாடப்படுகிறது. உலகமயமாக்கலை சந்தித்து வந்த இந்தியாவின் நிலையற்ற 90-களில் அரசியல் அரங்கில் பேசு பொருளாக நிலவிய பெயர்தான் இந்தப் பி.பி.மண்டல்.

மண்டலின் ஆரம்ப காலம்:

பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் 1918-ம் ஆண்டு பிறந்தவர் மண்டல். சமூக சீர்திருத்தவாதியான இவரின் தந்தை ராஷ்பி ஹரி மண்டல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இளம் வயது முதலே சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் மண்டலிடமிருந்து வந்தது. தர்பாங்கா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தபோது மதிய உணவு ஆதிக்க சமூக மாணவர்கள் சாப்பிட்ட பிறகே இவரின் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இளம் பிராயத்திலேயே இந்தச் சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராடி அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். அப்போது, நிலவிவந்த வங்காள மறுமலர்ச்சியால் ஈர்க்கப்பட்ட மண்டல், சமூக மேம்பாட்டுக்கு உழைப்பதற்காக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

Sponsored


அரசியல் வாழ்க்கை: 

Sponsored


1941-ம் ஆண்டு பாகல்பூர் மாவட்ட சபைக்கு எதிர்ப்பில்லாமல் தேர்வு செய்யப்பட்டார் மண்டல். இதிலிருந்துதான் இவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்குகிறது. பின்னர் 1952-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பீகாரின் மதேபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று சட்டசபைக்குச் சென்றார். அப்போது, பீகாரின் பாமா என்கிற கிராமத்தில் நிலக்கிழார்கள் ஏற்படுத்திய வன்முறையில் காவல்துறையினர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபட்டனர். அதில் காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட நடவடிக்கை எடுத்தார் மண்டல். அவற்றை கைவிட நெருக்கடி கொடுக்கப்பட்டதையடுத்து, ஆளும் தரப்பிலிருந்து விலகி எதிர்க்கட்சியான 'சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி'யுடன் இணைந்து அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.

பின்னர், 'சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி'யிலிருந்து விலகி மார்ச் 1967-ல் 'ஷோஷிட் தள்' என்கிற கட்சியைத் தொடங்கி தேர்தலைச் சந்தித்தார். தேர்தலில் வென்று பிப்ரவரி 1968-ம் ஆண்டு பீகார் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். வெறும் 47 நாள்கள் மட்டுமே நீடித்த இவருடைய அமைச்சரவையில் அதிக அளவிலான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருந்தனர். பின்னர், 1968-ம் ஆண்டு மதேபூர் இடைத்தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். காங்கிரஸ் அரசை எதிர்த்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தவர், ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் இணைந்து 1977 தேர்தலில் அதே தொகுதியில் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார்.

மண்டல் குழு:

இந்திய அரசியலமைப்பின் 340 வது பிரிவின்படி பிற்படுத்தப்பட்டவர்களின் மேம்பாட்டுக்காக அரசு ஒரு குழுவை அமைத்து, ஆய்வு செய்து அதன் பரிந்துரைகளை அமல்படுத்த வழிவகை செய்ய முடிவு எடுத்தது. அதன்படி சுதந்திர இந்தியாவில் 1953-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட முதலாவது குழுவான 'கலேகர் குழு'வின் பரிந்துரைகளை அரசு நிராகரித்திருந்தது. பின்னர், 25 ஆண்டுகள் கழித்து இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸை வீழ்த்தி ஜனதா அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகுதான், மண்டல் தலைமையில் ஒரு குழு ’சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய மக்களை’ அடையாளம் கண்டு அவர்களின் மேம்பாட்டுக்கான இடஒதுக்கீடு பற்றிய பரிந்துரைகளை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது.

மண்டல் குழு தன்னுடைய அறிக்கையை டிசம்பர் 1980-ம் ஆண்டு அரசிடம் சமர்ப்பித்தது. 'இந்திய மக்கள் தொகையில் 52% உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு மத்திய அரசு பணிகளில் 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என மண்டல் குழு பரிந்துரை செய்திருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கிடப்பிலே போடப்பட்டிருந்தது. பின்னர், வி.பி.சிங் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபோது 1990-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி நாடாளுமன்றத்தில் மண்டல் குழுவின் அறிக்கைகள் ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 'பிற்படுத்தப்பட்டவர்களுக்காக ஆணையம் அமைக்கப்பட வேண்டும்' எனக் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. மண்டல் குழுவை நிறைவேற்றிய வி.பி.சிங் தலைமையிலான கூட்டணி அரசை உருவாக்குவதிலும் கருணாநிதி மிக முக்கியப் பங்காற்றினார். மண்டல் குழுவின் பரிந்துரைகளைத் தன்னுடைய அரசு ஏற்கப்போவதாக நாடாளுமன்றத்தில் வி.பி.சிங் அறிவித்த ஆகஸ்ட் 7-ம் தேதிதான் கருணாநிதி மரணமடைந்தார்.

'மண்டல் குழு'வின் அறிக்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு எதிராக வட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கலவரங்கள் வெடித்தன. மாணவர்கள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்தனர். அனைத்து எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் 'மண்டல் குழு'வின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவை அமல்படுத்தப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்ததால் முட்டுக்கட்டை விழுந்தது. மூன்று வருடங்கள் நடைபெற்ற வழக்கை விசாரித்த 11 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு 6 - 5 என இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை தன்னுடைய தீர்ப்பில் உறுதி செய்தது. அதற்கு பிறகு ஆகஸ்ட் 25, 1993 அன்றுதான் மண்டல் குழுவின் பரிந்துரை அமலுக்கு வந்தது.

சமூக நீதியை நிலைநாட்டுவதில் மிக முக்கிய பங்காற்றிய மண்டல் ஏப்ரல் 13, 1982 அன்று சமூக நீதியை நிலைநிறுத்த தான் செய்த பணிகளின் பலனை சமூகம் அனுபவிப்பதை காண்பதற்கு முன்னரே மரணமடைந்தார். சமீபத்தில் கிடைக்கப்பட்டுள்ள சில புள்ளி விவரங்களின்படி மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம், மண்டல் குழு பரிந்துரைத்த 27% என்கிற அளவை விடவும் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 

மண்டலின் நூற்றாண்டோடு இவர் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவின் ஆன்மாவான அரசியலமைப்பின் முகப்பில் எழுதப்பட்டுள்ள சமூக நீதியை நிலைநிறுத்த, மண்டல் வழியில் இந்தத் தேசம் மேலும் பல நூற்றாண்டுகள் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.



Trending Articles

Sponsored