``34 பேருக்கு பயங்கரவாதிகள் செக்!" பாதுகாப்பு கேட்கும் ரவிக்குமார்Sponsoredவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமாரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்திருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரிடம் பாதுகாப்பு கேட்டு மனுக் கொடுத்துள்ளார் ரவிக்குமார். 

இதுகுறித்து ரவிக்குமாரிடம் பேசியபோது, ``என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறையே உறுதி செய்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையில் மூளையாகச் செயல்பட்ட மகாராஷ்டிர மாநிலம் பூனாவைச் சேர்ந்த பயங்கரவாதி அமோல் காலே என்பவரைக் கர்நாடக மாநிலச் சிறப்புப் புலனாய்வுக் குழு கைதுசெய்துள்ளது. அவரிடமிருந்து  ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ‘டைரி’யில் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் யார் யார் என்று குறித்துவைக்கப்பட்டிருந்த 34 பேரின் பெயர்கள் பட்டியல் ஒன்று இருந்ததையும், சிறப்புப் புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ளது. அதைத் தொடர்ந்து இதுகுறித்து அமோல் காலேவிடம் நடைபெற்ற விசாரணையில், `இந்து ராஷ்டிரம்’ அமைப்பதற்குத் தடையாக இருக்கும் பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்களைக் கொலை செய்வதே அவர்களுடைய நோக்கம் என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பட்டியலில் என்னுடைய பெயரும் இடம்பெற்றுள்ளதைக் கர்நாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழுவும் உறுதி செய்திருக்கிறது. அதேபோன்று, மத்திய உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது. 

Sponsored


மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி, பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஆகிய நால்வருடைய கொலைகளில் இந்தப் பயங்கரவாதக் குழுவுக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. கௌரி லங்கேஷ் படுகொலையில் பயங்கரவாதி அமோல் காலே உட்பட இதுவரை 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களையும், எழுத்தாளர்களையும் குறிவைத்து இந்தப் பயங்கரவாதக் குழு செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. 

Sponsored


மகாராஷ்டிர மாநிலத்தில் பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயங்கரவாத அமைப்பில் இடம்பெற்றிருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இந்த அமைப்பில் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படியான பயங்கரவாதத்துக்கு எதிராக மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு பேச மறுப்பது ஏன்? இந்த அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு இப்படியான மறைமுகத் தாக்குதல் ஒருபுறம் என்றால், மறுபுறம் அதிகாரத்தைக் கொண்டு மனித உரிமை ஆர்வலர்கள்மீது பொய் வழக்குகள் போட்டு கைதுசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு" என்றவரிடம், ``இந்தக் கொலைகளை மத்திய அரசுதான் செய்கிறது என்பதுபோல் உங்களுடைய கருத்து உள்ளதே" என்று கேள்வி எழுப்பினோம். 

அதற்குப் பதிலளித்த ரவிக்குமார், ``ஒருவகையில், அப்படித்தான் என்று சொல்லலாம். எழுத்தாளர்களைக் கொல்வதை வேடிக்கை பார்ப்பதும் கொலை செய்வதற்கு சமம்தான். இப்படியான ஓர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறையே தெரிவித்துள்ளது. அப்படி இருக்கும்போது, 34 பேரின் பெயர்களை வெளியிட்டு அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டாமா? மேலும், மாநிலங்களிலும் இப்படியான பயங்கரவாதிகள் பயிற்சி எடுப்பதாக மத்திய உளவுத்துறை கூறியுள்ளது. அதுதொடர்பாக மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? அதையெல்லாம் செய்யாமல் ஓர் அசாதாரண சூழலை உருவாக்கி வருகிறார்கள். இப்போதே நிலைமை இப்படியென்றால், மக்களவைத் தேர்தல் நெருங்கும்போது இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ?" என்றார், ஒருவித பதற்றத்துடன்.  

பயத்தைக் கிளப்பியிருக்கிறார்களா, பயங்கரவாதிகள்?Trending Articles

Sponsored