ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 5Sponsoredதொடரின் மற்ற பாகங்களைப் படிக்க...

த்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கி வந்தது.ஆலையில் நடந்த விபத்துக்களுக்காக தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் பல முறை அபராதம் கட்டிய சம்பவங்களும் நடந்தன.1997-ல் மே 3 ம் தேதி  65,000 ரூபாயும், ஆகஸ்ட் 30-ல் 3,60,000 ரூபாயும் அபராதமாக கட்டியது.அடுத்த ஆண்டில் ஒரு முறை 90,000 ரூபாயும்,மற்றொரு முறை நான்கரை லட்சமும் அபராதம் கட்டியது.

Sponsored


ஆனால், கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில்,இந்தத் தொகை வெகு சொற்பம் என்பதால் ஆலை நிர்வாகம் இதற்காக பெரிதாக அலட்டிக் கொளளவில்லை. அதே போல விபத்து உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் நீதிமன்ற உத்தரவு காரணமாகவும் இதற்கு முன்பும் பலமுறை ஆலை மூடப்பட்ட வரலாறு இருக்கிறது.ஆனால், அதனை சமாளிக்கும் வித்தையை ஆலை நிர்வாகம் அறிந்த்து வைத்து இருந்ததால் அந்த தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு வழக்கம் போல மீண்டும் உற்பத்தியை தொடங்கியது.

ஆலை தொடங்கப்பட்ட ஒராண்டு வரையிலும் உள்ளே நடக்கும் சம்பவங்கள் வெளியே தெரிந்ததே இல்லை.ஓராண்டுக்கு பின்னர் ஓரளவுக்கு தகவல்கள் வெளியே கசிய தொடங்கின.அதன்படி 1996-ல் இருந்து 2004 வரை மட்டும் 13 பேர் உயிரிழந்ததாகவும் 136 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தித் தாள்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.அதன் பின்னர் அமில லாரியில் ஏறிய ஊழியர் பலி,அமில டேங்கில் ஏற்பட்ட விபத்து என பல்வேறு செய்திகள் அவ்வப்போது வெளியாகி உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வந்தாலும், ஆலை நிர்வாகத்தின் சார்பில் வாய் திறப்பதே கிடையாது.

சுற்றுச்சூழல் துறையின் கண்டனம்

வனத்துறையையும் சுற்றுச்சூழல் துறையையும் இந்த ஆலை நிர்வாகம் மிகவும் மோசமாக

ஏமாற்றியிருக்கிறது.வனத்துறைக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் அமில கழிவுகளை கொட்டி வைத்து இருப்பதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகள் விதிமுறைக்கு புறம்பாக இருந்ததால் சுற்றுச்சூழல் அமைச்சகம், ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியது.உண்மைக்கு மாறான தகவல்களை கொடுத்து ஆலை செயல்பட்டு வருவதை அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ் ஓப்பனாக கண்டித்தார்.

சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறும்போது வனத்துறையின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை தெரிவிக்காதது,ஓராண்டுக்கு ஒரு மில்லியன் டன் அலுமினிய சுத்திகரிப்புக்கு அனுமதியை பெற்றுக்கொண்டு,எந்த ஒப்புதலும் பெறாமல் அதனை ஆறு மில்லியன் டன் அளவுக்கு அதிகரித்தது சட்ட விரோதம் என சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது.

இதனால் ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது? எனக் கேட்டு சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதன் பின்னர் தனிப்பட்ட முறையில் பல்வேறு சர்ச்சையில் சிக்கிய ஜெயராம் ரமேஷ், அந்த துறையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.அது தற்செயலானதுதானா அல்லது அதன் பின்னணியில் வேதாந்தா நிறுவனம் இருந்ததா என்பதையே சிலர் கேள்வியாக எழுப்புகிறார்கள்.

இது தவிர, இந்த நிறுவனத்துக்காக மூல கனிமங்கள் வெட்டி எடுக்கபப்டும் 14 சுரங்கங்களில், பத்து சுரங்கங்கள் சட்ட விரோதமாக தோண்டப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

வாதாடிய வைகோ

ஸ்டெர்லைட் நிறுவனத்தை எதிர்த்து நீண்ட நெடுங்காலமாக சட்ட போராட்டம் நடந்து இருக்கிறது. தற்போதும் அந்த சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் 1996 நவம்பரில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ம.தி.மு.க. சார்பில் வைகோ இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில்,"காற்று, நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இந்த ஆலையால் பெரும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.இந்த பாதிப்புகளையும் மக்களின் நிலையையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் இந்த ஆலைக்கு 1995-ல் அனுமதி கொடுத்து விட்டன.அதனால் இந்த பாதிப்புகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆலைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.இந்த வழக்கை இழுத்து அடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் வைராக்கியத்துடன் களம் இறங்கிய வைகோ, நீதிமன்ற நடவடிக்கைகளில் தானே ஆஜராகி வாதாடினார்.அவரது வாதத்திறமையை கண்ட ஸ்டெர்லைட் நிர்வாகம் அவரை வளைக்க எத்தனையோ திட்டங்களை தீட்டியது.ஆனால் எதுவுமே எடுபடவில்லை.

அதிர்ச்சி அளித்த 'நீரி' அறிக்கை

இந்த நிலையில்,1998 அக்டோபர் மாதத்தில் உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.அதன்படி,
நாக்பூரை சேர்ந்த தேசிய சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்கிற 'நீரி' (National Environmental Engineering Research Institute ) அமைப்பு இந்த ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.அதன்படி அதிகாரிகள் குழுவினர் ஆலைக்குள் சென்று பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.வழக்கை தாக்கல் செய்திருந்த வைகோ உள்ளிட்டோரும் அந்த ஆய்வின் போது அக்குழுவுடன் பங்கேற்றனர்.

சுமார் இரண்டு மாத காலம் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர்.ஆலை வளாகத்துக்குள் அபாயகரமான நச்சுக் கழிவுகள்,எந்த பாதுகாப்பு வசதியும் செய்யப்படாமல் மலைபோல கொட்டப்பட்டு கிடந்ததை குழுவினர் பார்த்தனர்.சுற்றுப்புற கிராமங்களுக்கு அவர்கள் சென்ற போது அங்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, குடிநீருக்கும் விவசாயத்தும் மக்கள் திண்டாடி வருவதை கண்டு அதிர்ந்தனர்.இது தவிர காற்றில் பெரும் அளவுக்கு சல்ப்யூரிக் அமிலத்தின் நச்சுத் தன்மை பரவி இருந்ததும் தெரிய வந்தது.

Sponsored


இதனால் அந்த குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில்,"ஆலை வளாகத்திலும் அதனை சுற்றிலும் உள்ள இடங்களிலும் உள்ள நிலத்தடி நீர் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீரை ஆய்வு செய்த போது அதில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக இருக்கிறது.அதனை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது" என தெரிவித்தது.


இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம்,  உடனடியாக ஆலையை மூட உத்தரவிட்டது.ஆனால், 'நீரி' அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்று ஆலையில் மாற்றங்களை செய்திருப்பதாக ஆலை நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ஒரு மாதத்துக்கு பின்னர் இந்த உத்தரவை மாற்றிக் கொண்டு மறு உத்தரவு பிறப்பித்தது.அதன்படி,"ஆலை இரண்டு மாதங்கள் இயங்கும்.அதற்குள்ளாக 'நீரி' அமைப்பு மறுபடியும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டது.இதனால் ஆலை மறுபடியும் இயங்க தொடங்கியது.

இரண்டாவது அறிக்கை என்ன சொன்னது..? நாளை பார்க்கலாம்...

தொடரின் மற்ற பாகங்களை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...!

ஸ்டெர்லைட் வரமா... சாபமா? - ஒரு மினி தொடர் - பாகம் 4 ஐ படிக்க இங்கே க்ளிக் செய்க...Trending Articles

Sponsored